Published : 19 Jun 2017 08:57 AM
Last Updated : 19 Jun 2017 08:57 AM

டார்ஜிலிங்: வலுவடைந்திருக்கும் பிரிவினை கோரிக்கை

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதியில் மீண்டும் அமைதி குலைந்திருக்கிறது. கோர்க்கர்களுக்கு என்று தனி மாநிலம் (கோர்க்காலாந்து) வேண்டும் என்ற கோரிக்கையை ‘கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா’(ஜிஜேஎம்) மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. ‘‘மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் முதல் வகுப்பிலிருந்து அனைவரும் வங்க மொழியைப் படிக்க வேண்டும்’’ என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி மே மாதம் அறிவித்திருந்தார். மே மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிரிக் நகரமன்றத்தை திரிணமூல் காங்கிரஸிடம் இழந்தது ஜிஜேஎம். செல்வாக்கு குறைவதையடுத்து, அதைத் தடுத்து நிறுத்தத் தருணம் பார்த்தது ஜிஜேஎம். இந்நிலையில், வங்க மொழி கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு அதற்கு உதவியுள்ளது. இத்தனைக்கும் டார்ஜிலிங்குக்கு இது பொருந்தாது என்றும் மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, டார்ஜிலிங் சென்றிருந்த முதல்வர் மம்தா மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. அமைதியை நிலைநாட்ட ராணுவம் அழைக்கப்பட்டது. சகஜநிலை திரும்பும் வரையில் டார்ஜிலிங்கிலேயே முகாமிட்டிருந்தார் மம்தா. மே, ஜூன் மாதங்களில்தான் சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங் நகருக்கு அதிகம் வருவார்கள். தேயிலைத் தோட்டங்களில் இது இரண்டாம் கட்ட தேயிலைப் பறிப்புக் காலம். இந்நிலையில், இப்படி இரு தரப்பினர் மோதல் போக்கில் நிற்பது மாநில நலனுக்கு நல்லதல்ல. பாதுகாப்புக்காக ராணுவம் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், ஆங்காங்கே அமைதியைக் குலைக்கும் சம்பவங்களும் நடந்துவருகின்றன.

வங்கத்திலிருந்து டார்ஜிலிங்கைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007-ல் ஜிஜேஎம் என்ற அமைப்பைத் தொடங்கினார் குருங். தங்களுடைய கோரிக்கையை டெல்லி சென்று வலியுறுத்தப்போவதாகவும் கடையடைப்பு போன்றவற்றைக் கைவிடுவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்தான் கோர்க்கர்கள் பகுதியில் நடந்த தேர்தலில் வென்று தனது செல்வாக்கை நிரூபித்தது திரிணமூல். வெவ்வேறு இனக் குழுக்களுக்குத் தனித்தனி வளர்ச்சி வாரியங்களையும் மாநில அரசு நியமித்தது. இதன் மூலம் தங்களுடைய இறக்கைகள் வெட்டப்படுவதை ஜிஜேஎம் உணர்ந்தது. எனவேதான் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கோர்க்காலாந்து தொடர்பாகத் தங்களுடைய நிலை என்ன என்பதை மோடி அரசு வெளிப்படையாகக் கூறவில்லை. ஜிஜேஎம் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் தொடர்பில் உள்ளனர். தனி மாநிலத்துக்காக ஜிஜேஎம் எழுப்பும் கோரிக்கையை மாநில அரசு தகுந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும். எல்லைப்புற பகுதியான டார்ஜிலிங்கில் தாங்கள் மேற்கொள்ளும் சீர்குலைவு நடவடிக்கைகள், மலைவாழ் மக்களையும் மிகவும் பாதிக்கும் என்பதை கோர்க்கத் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x