Published : 05 Feb 2014 12:54 pm

Updated : 06 Jun 2017 19:11 pm

 

Published : 05 Feb 2014 12:54 PM
Last Updated : 06 Jun 2017 07:11 PM

சாலை பாதுகாப்பிற்குக் குரல் கொடுப்போம்

இந்தியாவின் பிரதான உயிர்க்கொல்லி சாலைகள் தான். நாடுதோறும் ஒரு நாளைக்கு குறைந்தது 300 பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள். சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் விபத்து காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.26 லட்சம் பேர். இதன் இழப்பு பொருளாதார ரீதியாக ஒரு லட்சம் கோடி ரூபாய். அதாவது நம் ஜி.டி.பி.யில் 3.2%, இது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை தரும் தகவல்.

வழவழன்னு ஆறு வழிச்சாலை வந்ததும், சீறிப்பறக்கும் வெளி நாட்டுக்கார்கள் வந்ததும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடு போடுபவர்கள் யாரும் இந்த தகவல்கள் பற்றி பேசுவதாக இல்லை. மனித உயிர்களின் மதிப்பு இங்கு மிகவும் மலிந்து விட்டது. விபத்துகளில் 75% ஓட்டுநர்களின் கவனக் குறைவினால்தான் ஏற்படுகிறது என்கிறது புள்ளிவிவரம். அதற்கு பொறுப்பு அவர்கள் மட்டும்தானா என்பதுதான் ஆராய வேண்டிய விஷயம்.


நாமக்கல்லில் உள்ள அந்த ஓட்டுநர் பயிற்சி நிலையத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்கு சேகரித்த தகவல்கள் பல கவலை அளிப்பவையாக இருந்தன. இந்தியாவில் உற்பத்தியாகும் 10% கன ரக வாகனங்கள் ஓட்டுநர்கள் இல்லாமல் பயன்பாடற்று நிற்கிறதாம். எப்போதும் தட்டுப்பாடுள்ள இந்த வேலைகளுக்கு என்றும் ஆட்கள் தட்டுப்பாடுதான். ஏன்?

பல குரல்களின் பதிவுகள் இதோ:

“டிரைவர்னா இப்பல்லாம் பொண்ணு கொடுக்க மாட்டாங்க சார்!”

“கிளீனரா ஒரு சில வருஷம் இருந்து, அப்பப்ப ஓட்டி சில வண்டிகள இடிச்சிட்டு பின்னால டிரைவர் ஆனவங்கதான் இந்த வருமானத்தில தாக்கு பிடிக்க முடியும்...”

“வளர்ந்த நாடுகள்ல ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்கறது ரொம்பக் கஷ்டம். சில சமயம் 10% தான் தேறுவாங்க. இங்க எப்படின்னு நான் சொல்ல வேண்டாம்!”

“ நம்ம சட்டத்தில் எல்லாம் சரியா இருக்கு. ஆனா இங்க எதையும் பின்பற்ற விடறதில்ல!”

“தூக்கம், பசி, கோபம், அசதி இப்படி எல்லாம் ஒண்ணு சேரும்போது இயல்பா ஓட்டறது கஷ்டம்!”

“டிரைவர்க்கு மரியாதை கொடுக்காத வரை இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது!”

நம் உயிர்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் பாதுகாப்பாக கொண்டு செல்லும் இவர்களை நாம் பாதுகாக்கத் தவறிவிட்டோமோ? ஒரு டாக்டர் ஒரு சமயம் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறார். ஆனால் ஒரு ஓட்டுநர் ஒரே நேரத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார். நாம் என்றாவது இவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறோமா?

சாலை பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், முதல் உதவி, யோகா, எய்ட்ஸ் விழிப்புணர்வு என அனைத்தையும் இலவசமாகவும் மிகக் குறைந்த கட்டணம் கொண்டும் சொல்லித்தருகிறார்கள். அரசு அங்கீகரிக்கும் சான்றிதழும் கொடுக்கிறார்கள். புது மற்றும் அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களுக்கு சிமுலேட்டர் எல்லாம் வைத்து உலகத்தரப் பயிற்சி அனுபவம் அளிக்கப்படுகிறது. இருந்தும் இது பிரபலமாகாததற்கு காரணம் நம் சமூக மதிப்பீடுகள்தான்.

வளர்ந்த நாடுகளில் கடின உடல் உழைப்பு கொண்ட வேலைகளுக்கும், வீடு/அலுவல் தாண்டி செல்லும் வெளி வேலைகளுக்கும், விபத்து நடக்கும் வாய்ப்புகள் உள்ள வேலைகளுக்கும் சம்பளமும் அதிகம். சமூக மதிப்பும் அதிகம், அதே போல இந்த தொழில்களில் நுழைவதற்கும் தேர்வுகள் கடினமானவை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு தேர்வும் மறு சான்றிதழும் அவசியம். இதனால் தான் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஓட்டுநர்களுக்கு நல்ல மரியாதை.

ஓட்டுநர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தேவை என்று கலந்தாலோசிக்கவும் அவர்கள் பாடத்திட்டத்தில் சில புதிய சமூக உளவியல் பாடங்களை சேர்க்கவும் நாமக்கல் போயிருந்தேன்.

ஓட்டுநருக்கான தேவைகள் பல. அரசியல் ஊர்வலமென்றால் ஒரு அல்லக்கை பஸ்ஸை நிறுத்தும். வெளி மாநில வண்டி என்றவுடனேயே திருடனைப் பிடித்துவிட்டதைப் போல ஒரு டிராஃபிக் போலிஸ் “எறங்குடா” என்று ஏக வசனத்தில் அதட்டுவார். பாதி வழியில் பிரேக் டவுன் என்றால் சரியான உதிரி பாகங்கள் கிடைக்காது. விலை உயர்ந்த சரக்கை கொண்டு செல்லும்போது ஓட்டுநரைக் கடத்திய, காயப்படுத்திய, கொன்ற சம்பவங்களும் உண்டு. மைலேஜ் கிடைக்காவிட்டால் ஓனர் கத்துவார். லைனில் (வண்டிக்கு) போய்விட்டால் வீட்டில் ஒரு நல்லது கெட்டதற்கு போக முடியாது.

இந்த பிண்ணனியில்தான் ஒரு ஓட்டுநரின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்.

இதன் விளைவு? ஓட்டுநர்களின் தேசிய உணவாக பரோட்டா ஆகி விட்டது. (மதியம் சாப்பிட்டா ராத்திரி வரைக்கும் ஊறிட்டு கிடக்கும் சார். டீ குடிச்சிட்டே ஊர் போய் சேர்ந்துடலாம்.) தூக்கம் வராமல் இருக்க பான் பராக். ஓய்வு எடுக்க போக்குவரத்து குறைந்த சாலையில் க்ளீனரை ஓட்டச் சொல்லுதல், சபலத்திற்கு ஆளாகி பாதுகாப்பற்ற உடலுறவு, வண்டியை விட்டு இறங்கினதும் அசதி மறக்க குடி. இப்படி தவறான வாழ்க்கை முறையில் பலர் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

கார், கம்பெனி வேன் ஓட்டுநர்களின் வாழ்க்கை முறையும் பெரும்பாலும் இது தான். ஓட்டாத நேரத்தில் சீட்டாட்டம், உடற்பயிற்சி இல்லாததால் தொப்பை, தவறான நட்புகளால் பிரச்சினைகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் பல நேரங்களில் ஓட்டுநருக்கு சரியான தூக்கம், ஓய்வு, சரியான உடல் நிலை உள்ளதா என்று முதலாளிகள் பார்ப்பதில்லை. விடுப்பும் கிடைக்காது. மீறி எடுத்தால் சம்பளம் போகும். அதனால் பணியை சீக்கிரம் முடித்து திரும்பும் அவசரத்தில் கவனக்குறைவு ஏற்படுகிறது. இந்த தொழிலில் பத்து வருஷ சர்வீஸ் பத்து வினாடி தவறில் முடிகிறது.

கோபப்படுகையில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் தொழில் கருவியை தான் ஆயுதமாக பயன்படுத்துகிறான். அரிவாள் வைத்திருப்பவர் கழுத்தில் போடுவதுபோல, படித்தவர் மொட்டை கடுதாசி போடுவது போல, ஓட்டுநரின் ஆயுதம் வாகனம். தன் சுக துக்கம், கோபம், விரக்தி என அனைத்தையும் அவர் தன் வாகனம் ஓட்டுவதன் மூலமே உலகிற்கு வெளிப்படுத்துகிறார்.

இது ஓட்டுநருக்கான பிரச்சினை மட்டும் அல்ல. நம் அனைவரின் உயிர் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினை. ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் நாம் அனைவரும் தடித்த தோலுடன் சுரணை இல்லாமல், “தெரியும்..வந்தா பாத்துக்கலாம்!” என்று இருக்கிறோம்.

அரசு சட்டம் போடுவதோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. உரிமம் வழங்கு முன் கட்டாயப் பயிற்சியையும், கடினமான தேர்வு முறைகளையும் அமல்படுத்த வேண்டும். வாகனம் தயாரிப்பவரின் வியாபாரம் ஓட்டுநர் சார்ந்தது. அதனால் ஓட்டுநர் பயிற்சி, நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய வேண்டும். ஓட்டுநருக்கென்று சிறப்பு சலுகைகள் வேண்டும். கல்வித்திட்டத்தில் ஓட்டுநர் பயிற்சியைக் கட்டாயமாக்கி முறையாக சொல்லிக் கொடுக்கலாம். தொழில் முறையில் ஓட்டுநர் ஆகாவிட்டாலும் நாம் அனைவரும் நம் சொந்த வண்டிக்கான ஓட்டுநர்கள் தானே?

அந்த ஓட்டுநர் பயிற்சி நிலையத்திற்கு உணவுப் பழக்கம், தியானம், பாலியல் கல்வி, தற்காப்புக் கலை போன்று சுமார் இருபது பயிற்சி வகுப்புகள் பரிந்துரை செய்தேன்.

உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். ஆட்டோவோ, பஸ்ஸோ, காரோ, வேனோ பயணம் முடிகையில் ஓட்டுநரைப் பார்த்து சினேகமாக சிரித்து நன்றி சொல்லுங்களேன்!

gemba.karthikeyan@gmail.com


சாலை பாதுகாப்புவாகன ஓட்டுநர்ஓட்டுநர் பயிற்சிபாதுகாப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x