Published : 02 Mar 2017 09:32 AM
Last Updated : 02 Mar 2017 09:32 AM

மரம் நடுவதல்ல, வளர்ப்பதே நோக்கமாக இருக்கட்டும்!

பரபரப்பான சூழலுக்கு இடையில், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அதிமுக அரசு பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்” என்பதும் அதில் ஒன்று. இந்த அறிவிப்பு பழைய அறிவிப்புகளையும் ஞாபகப்படுத்துகிறது.

கடந்த 2012- ல் இதேபோல ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுக்க 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் ஆலமரக் கன்று ஒன்றை ஜெயலலிதாவே தன் கையால் நட்டு இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தார். அது முதல் ஆண்டுதோறும், 65 லட்சம், 66 லட்சம், 67 லட்சம், 68 லட்சம் என்று கடந்த 2016 வரை மரக்கன்றுகள் நடும் அறிவிப்பு கள் வெளியாகிக்கொண்டே இருந்தது. இந்த அறிவிப்புகளின்படிப் பார்த் தால், இதுவரை தமிழகத்தில் 3.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் ஏறத்தாழ சிறிய மரங்களாக நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் காட்சி தர வேண்டும். சுமார் 10% மரக்கன்றுகள் மட்டுமே தப்பிப்பிழைத்திருந்ததாக வைத்துக் கொண்டாலும்கூட குறைந்தபட்சம் 30 லட்சம் மரங்கள் இன்று வளர்ந்து நிற்க வேண்டும். நிற்கின்றனவா?

அரசாங்கமும், குறிப்பாக வனத் துறையும், அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டதாகக் காட்டிக்கொள்ளும் அதிமுகவினரும் பதிலளிக்க முயல வேண்டும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆண்டு புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. ரூ.79 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணிகளேனும் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்; அரசின் நோக்கம் மரக்கன்றுகளை நடுவதாக மட்டுமின்றி, அதை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். ஏதோ திட்டத்தைத் தொடங்கிவிட்டோம் என்று எல்லா இடங்களிலும் உடனடியாக மரக்கன்றுகள் நடத்தொடங்காமல், வறட்சி பாதிப்பு அதிகமுள்ள அல்லது தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கவே முடியாத இடங்களில் கோடைக்காலம் முடிந்த பிறகே மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்க வேண்டும். சாலையோரங்களிலோ, தனியார் இடங்களிலோ மரக்கன்றுகளை வளர்ப்பதில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, கால்நடைகளால் தாக்கப்படுவது. எனவே, பாதுகாப்பு வேலியுடன் மரக்கன்றுகளை நடுவதும், குறிப்பிட்ட இடைவெளியில் அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பதுமே இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x