Last Updated : 20 Aug, 2016 10:26 AM

 

Published : 20 Aug 2016 10:26 AM
Last Updated : 20 Aug 2016 10:26 AM

தொடங்கியது கோவை புத்தகக் கொண்டாட்டம்!

நகர எல்லைக்குள், சம்பளத் தேதியையொட்டி நடத்தினால்தான் எந்தக் கண்காட்சியும் வெற்றிபெறும் என்ற வியாபாரத்தனமான விதி களைத் தவிடுபொடியாக்கி, புத்தகத் திருவிழா எனும் ‘வருடாந்திர ஒலிம்பிக்’ கோவையில் 2-ம் ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. ‘தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க’த்துடன் (பபாசி), சிறு தொழிலதிபர்கள் சங்கம் (கொடீசியா) கைகோத்ததன் விளைவு கோவை புத்தகத் திருவிழா.

நேற்று மாலைதான் காட்சி தொடங்கியது என்றாலும்கூட, அதற்கு முந்தைய தினம் மாலையிலிருந்தே உள்ளூர் எழுத்தாளர்கள், வாசகர்கள் கொடீசியா கண்காட்சி வளாகத்துக்கு வந்து ஆவலுடன் புத்தகங்களையும், கூட்ட அரங்குகளையும் பரவசத்துடன் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

கோவைக்காரர்களைப் பொறுத்தவரையில் புத்தகத் திருவிழா என்பது, உள்ளூர் விளையாட்டு ஒலிம்பிக் சென்று பிரபலமாவதைப் போல. காரணம், இங்கே 1970-களின் இறுதியிலேயே வாசகர் திருவிழாவைத் தொடங்கி, தொடர்ந்து நடத்திவந்தது விஜயா பதிப்பகம். இடையில் தடைபட்டுப்போனது. சென்னையிலும் மதுரையிலும் புத்தகத் திருவிழாக்கள் மூலம் வெற்றி கண்ட பபாசியின் பார்வை கோவையின் பக்கம் திரும்ப, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவை நடத்தியது. உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்பின்மையால் அதுவும் தோல்வியடைந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ‘கோவை மாவட்டச் சிறுதொழில் அதிபர்கள் சங்கம்’ (கொடீசியா) பபாசியுடன் கைகோக்க முன்வந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்காட்சி வளாகங்களில் ஒன்றான கொடீசியா கண்காட்சி வளாகத்தில் புத்தகத் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்தது. கோவை நகர மையத்துக்கும் இந்த கொடீசியா வளாகத்துக்கும் சுமார் 15 கிமீ தூரம். புத்தகம் வாங்குவதற்கெனவே நேரம் செலவழித்து இவ்வளவு தூரம் பொதுமக்கள் வருவார்களா? புத்தக விற்பனைக்குச் சம்பந்தமே இல்லாத கொடீசியா நிர்வாகிகளால் இதைச் சரியாக நடத்த முடியுமா என்றெல்லாம் அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், விற்பனையாளர்களுக்கு லாபம் அமோகமாக இல்லாவிட்டாலும் வசதிகளைப் பொறுத்தவரையில் திருப்தியாக அமைந்தது. மழை, வெயில் எதற்கும் பிரச்சினையில்லை. இலவச வாகன வசதி ஏற்பாடு, உலகத் தரத்திலான பாதுகாப்பான மைய வளாகம், அரங்குகள் போன்றவற்றால் குறை சொல்வதற்கு இடமில்லாமல் போனது. அமைதியான சூழலில் மக்கள் கணிசமாக வந்து புத்தகம் வாங்கிச் செல்வது பதிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. வாசகர்களுக்கும் அதுதானே வேண்டும்?

எனவேதான், கடந்த ஆண்டு வராத பதிப்பகங்களெல்லாம் இந்த ஆண்டு வந்து குவிந்துள்ளன. சென்ற முறை 160 அரங்குகள் இருந்தன; இந்த முறை 260 அரங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், 1,500-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து வாசிப்புப் பேரியக்கம் ஒன்றையும் இந்த வருடப் புத்தகத் திருவிழா மூலம் உருவாக்கியுள்ளது கொடீசியா. எனவேதான், ஆரம்பமே அமர்க்களமாகியிருக்கிறது. போதாக்குறைக்கு, பிரதான சாலையிலிருந்து கண்காட்சி வளாகம் வரை வரவேற்புத் தோரணங்கள் வேறு அசத்துகின்றன.

குழந்தைகள் தொடங்கி அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான புத்தகங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சியைப் பார்வையிடக் கட்டணம் ஏதுமில்லை. புத்தகங்கள் 10% கழிவு விலையில் விற்கப்படுகின்றன. நேற்று தொடங்கிய இந்தத் திருவிழா ஆகஸ்ட் 28-ம் தேதி வரையில் மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் புத்தகக் காட்சியைப் பார்வையிடலாம்.

இது தவிர, தினசரி மாலை 6 மணி தொடங்கி 9 மணி வரை பட்டிமன்றம், உரை அரங்கம், பேச்சரங்கம், கலந்துரையாடல், தெருக்கூத்து, கவியரங்கம் என்று களைகட்டவிருக்கிறது.

நடிகர் சிவகுமார், பர்வீன் சுல்தானா போன்றோரில் தொடங்கி தமிழகத்துப் பிரபலங்கள், எழுத்தாளர்கள் இங்கே வருகைபுரிகிறார்கள். அது மட்டுமல்லாது, அருகில் உள்ள கேரளத்திலிருந்தும் எழுத்தாளர்கள் வருகைபுரிகிறார்கள். ஆக இது வெறும் புத்தகத் திருவிழாவாக, வாசகர்களுக்கான குதூகல நிகழ்வாக மட்டுமின்றி, பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அனைவருக்குமான பெரு விழாவாக, அறிவுத் திருவிழாவாகக் களைகட்ட ஆரம் பித்திருக்கிறது. நீங்களும் வருகிறீர்கள்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x