Last Updated : 11 Aug, 2016 09:52 AM

 

Published : 11 Aug 2016 09:52 AM
Last Updated : 11 Aug 2016 09:52 AM

மாணவர் ஓரம்: உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை!

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை எது தெரியுமா? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ‘பிர் பஞ்சால்’ சுரங்கப்பாதை. அதன் நீளம் 11.21 கி.மீ. மட்டுமே!

பூங்காவில் இருக்கிற குட்டி ரயில்களில் பயணிக்கும்போது, குழந்தைகளின் கூச்சல் உச்சத்தை எட்டுமிடம் எது? சுரங்கப்பாதைதானே? குட்டியூண்டு சுரங்கமே அப்படியென்றால், 57 கி.மீ. தூரத்துக்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எப்படியிருக்கும்? ஆல்ப்ஸ் மலைக்கு அடியில் இந்த அதிசயத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ‘கோட்ஹார்ட்’ பகுதியிலிருந்து ‘டின்சினோகான்டன்’ வரையில் செல்கிறது இந்தச் சுரங்கம். மொத்தம் 12 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 80,000 கோடி) செலவு. 17 ஆண்டு தொடர் முயற்சி.

ஐரோப்பியக் கண்டத்தில் ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து உட்பட எட்டு நாடுகளில் பரவிக் கிடக்கிறது ஆல்ப்ஸ் மலைத் தொடர். முன்பெல்லாம் மலையைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. இனி அந்தக் கவலை இல்லை. ஜெர்மன், கிரீஸ் இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை இந்தப் பாதை இணைத்துவிட்டது. ‘ஆல்ப்ஸ் வென்றான்’ என்று சுவிட்சர்லாந்தைப் புகழ்கிறார்கள் ஐரோப்பியர்கள்.

சுரங்கத்தின் ஒரு பகுதியில் ரயில் போக்குவரத்து கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்டது. டிசம்பர் மாதக் கடைசியில்தான் முழுச் சுரங்கத்திலும் போக்குவரத்து நடக்கும். இரட்டைத் தண்டவாளங்கள் உள்ளன. தினமும் 65 பயணிகள் ரயில்களும், 250 சரக்கு ரயில்களும் இதில் பயணிக்கும்.

இந்தப் பாதை அமைக்கப்படும் வரை, ஜப்பானின் சாய்கான் சுரங்கப்பாதைதான் (53.9 கி.மீ.) உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை. பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடலுக்கு அடியில் அமைந்துள்ள ஈரோ சுரங்கப்பாதை (50.5 கி.மீ) 2-வது இடத்தில் இருந்தது. இப்போது அவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துவிட்டது கோட்ஹார்ட் சுரங்கப் பாதை. அதுமட்டுமல்ல, உலகிலேயே மிகவும் ஆழத்தில் (அதிகபட்ச ஆழம் 2.3 கி.மீ) செல்கிற சுரங்கப்பாதையும் இதுதான்.

அது சரி! இந்தியாவின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை எது தெரியுமா? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ‘பிர் பஞ்சால்’சுரங்கப்பாதை. அதன் நீளம் 11.21 கி.மீ. மட்டுமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x