Last Updated : 01 Mar, 2017 09:20 AM

 

Published : 01 Mar 2017 09:20 AM
Last Updated : 01 Mar 2017 09:20 AM

உத்தர பிரதேசமே நாட்டின் தலையெழுத்தை தொடர்ந்தும் வடிவமைக்கும்!- அகிலேஷ் யாதவ் பேட்டி

நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடக்கும் தேர்தலில் வெற்றி கிட்டத்தட்ட பாஜகவுக்கு உறுதிசெய்யப்பட்டதுபோல இருந்தது. ஆட்டத்தை இப்போது குலைத்துப்போட்டுவிட்டார் அகிலேஷ். முதல் அதிரடி, குடும்பச் சண்டையில் தந்தை முலாயம் சிங் யாதவையே முடக்கிவிட்டு, கட்சியின் தேசியச் செயலராக அவர் உருவெடுத்தது. அடுத்த அதிரடி, உத்தர பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. இப்போது இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கூடவே பந்தயத்தில் முந்துவது போன்ற தோற்றத்தையும் உண்டாக்கிவிட்டார். லக்னோவின் காளிதாஸ் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் உத்தர பிரதேச முதல்வரைச் சந்தித்தோம்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தது எப்படி?

உத்தர பிரதேசமும் நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். இருவரும் சம வயதினர். இருவரும் ஒரே மாதிரியாகவும் சிந்திக்கிறோம்.

இப்படி ஒரு கூட்டணி வேண்டும் என்று எப்போது உணர்ந்தீர்கள்?

நீங்கள் யாருடன் இருப்பீர்கள் என்பதைக் காலமும் சூழலும்தான் முடிவுசெய்கின்றன. காங்கிரஸுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே முன்பு மோதல்கள் இருந்திருக்கலாம். ஆனால், சமாஜ்வாதி தலைவர்கள் அனைவரும் காங்கிரஸால் உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒருகாலத்தில் காங்கிரஸ்தான் ஒரே ஆளுங்கட்சி. இயல்பாகவே அந்தக் அக்கட்சியுடன்தான் எல்லோருமே மோத வேண்டியிருக்கும். இன்றைக்கு, காலம் மாறிவிட்டது. நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும் பாஜக போன்ற மதவாதக் கட்சிகளை எதிர்கொள்ளவும் அரசியல் கூட்டணிகள் தேவைப்படுகின்றன. நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் மாநிலம் உத்தர பிரதேசம். நாட்டின் எதிர்கால அரசியலைத் தொடர்ந்தும் உத்தர பிரதேசமே வடிவமைக்கும். இப்போதிருந்தே நாங்கள் இணைந்து பணிபுரிந்தால், இந்திய அரசியலுக்குப் புதிய திசையைத் தருவதில் எங்களால் உதவ முடியும்.

இந்தக் கூட்டணி கொஞ்சம் தாமதமாக அமைந் திருக்கிறதோ?

இது ஒரு முக்கியமான கேள்வி. தொடக்கத்திலேயே கூட்டணி அமைந்தால், இரு கட்சியினரும் இணைந்து பணிபுரிய வசதியாக இருக்கும். நாங்கள் எடுத்த பல முடிவுகள் கடைசிக் கணத்தில் எடுக்கப்பட்டவை. தொடக்கத்தில் எங்கள் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன (தனது சித்தப்பா ஷிவ்பால் யாதவுடனான மோதலைக் குறிப்பிடுகிறார்). அதிலேயே அதிக நேரம் வீணாகிவிட்டது.

குடும்பப் பிரச்சினைகள் இல்லை என்றால், இந்தக் கூட்டணி முன்பே அமைந்திருக்குமா?

குடும்பத்தில் பிரச்சினை இல்லையென்றால் கூட்டணியே அமைந்திருக்காது. அதனால்தான், குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் இந்தக் கூட்டணி அமைந்தது என்று தொடக்கத்தில் குறிப்பிட்டேன். மொத்தமாகப் பார்த்தால், காங்கிரஸுடனான கூட்டணி ஒரு நல்ல முடிவு. இதன் முடிவும் நல்ல விதமாகவே அமையும். அதுதான் பெரிய பலன்.

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

முதலில் உத்தர பிரதேசத்தைக் கவனிக் கிறோம். அதன் பின்னர் தேசத்தைப் பார்ப்போம்.

குடும்பத்தில் ஏற்பட்ட பூசலில் உங்களுக்கே வெற்றி கிடைத்தது. கட்சி உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதன் திட்டங்களையும் நீங்கள்தான் வகுக்கிறீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கட்சித் தலைவராக ஆனதிலிருந்தே தேர்தலைத் தவிர வேறு எதைப் பற்றியும் நான் நினைக்கவில்லை. எங்களுக்கென்று ஒரு தேர்தல் அறிக்கை இருக்கிறது. அதில் கிராமப்புறப் பகுதிகளுக்கும் நகரப்புறப் பகுதிகளுக்கும் சம இடம் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறேன். சுற்றுச்சூழல், வனங்கள், சூழலியலுக்கு உகந்த சுற்றுலா, பசுமைப் பாதை ஆகியவற்றைப் பற்றிப் பேசும் தேர்தல் அறிக்கையைத் தரும் அரசியல் கட்சி அநேகமாக சமாஜ்வாதிதான். அத்துடன், நகரங்களில் போக்குவரத்துப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் முதல் அரசியல் கட்சி நாங்கள் தான். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில். உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு நகரத்திலும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி நாங்கள் பேசுகிறோம். கிராமங்களும் விரிவடைந்துவருவதால் ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்த சாக்கடை, குப்பைப் பிரச்சினைகள் இப்போது கிராமங்களிலும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் சமாஜ்வாதி கட்சித் தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்கின்றன.

ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் நிறைவுசெய்து விட்டீர்கள். முக்கியமான மூன்று தருணங்களைச் சொல்லுங்கள்…

உத்தர பிரதேசம் பெரிய மாநிலம் என்பதால், உள்கட்டமைப்பு விஷயத்தில் ஓரளவுக்குப் பணியாற்றியிருக்கிறோம். மறுபுறம், சமுதாயத் திட்டங்கள் மூலமாக ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கியிருக்கிறோம். சாலைக் கட்டுமானப் பணியின் வேகத்தை இரண்டு மடங்காக்கினால், பொருளாதார வளர்ச்சியை மூன்று மடங்காக்கலாம் என்பது எனது நம்பிக்கை. ‘அமெரிக்கா சாலைகளை உருவாக்கியது; சாலைகள் அமெரிக்காவை உருவாக்கின’ என்று சொல்வார்கள். குறைந்தபட்சம், எல்லா பகுதிகளையும் இணைக்கும் நல்ல சாலைகளை நாம் வழங்க வேண்டும். இந்தச் சாலைகள் மூலம் விவசாயிகள் பெரிய அளவில் பலனடைவார்கள். நகரங்கள் சாலைகளால் இணைக்கப்படுவதுபோல் கிராமங்களும் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவது சவால் மின்சாரத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது. ஏனெனில், உத்தர பிரதேசத்தில் மின்வசதி முன்பு அத்தனை நன்றாக இருந்ததில்லை. முன்பு மின் பற்றாக்குறை இருந்தது. இப்போது எங்களிடம் உபரி மின்சாரம் இருக்கிறது. ஏலத்தில் 3,000 மெகா வாட் மின்சாரம் வாங்கினோம். துணை மின் நிலையங்களை உருவாக்கினோம். இவற்றையெல்லாம் செய்ததன் பலனாக இன்றைக்கு நகரங்களுக்கு 24 மணி நேர மின் விநியோகமும், கிராமங்களுக்கு 16-18 மணி நேர மின் விநியோகமும் வழங்குகிறோம்.

மோடி பிரச்சாரத்தின்போது தீபாவளி ரம்ஜான் பண்டிகைகளை ஒப்பிட்டு, மின்சாரப் பிரச்சினையைப் பேசினாரே…

அவரது உரைகளை நீண்ட காலமாகக் கவனித்துவருகிறேன். கலவையான சமூகம் நம்முடையது. எல்லோருக்குமான வளர்ச்சியை நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பிரதமருக்குத் தெரியாது. சமூகத்துக்கு என்ன தேவையோ அதையே நான் செய்கிறேன்.

அப்படியென்றால், குஜராத் மாதிரியைவிட உத்தர பிரதேச மாதிரி உயர்வானது என்கிறீர்களா?

குஜராத் மாதிரி என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், 15 ஆண்டுகளில் அவர்களால் ஒரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை உருவாக்க முடியவில்லை. நாங்கள் நான்கு இடங்களில் மெட்ரோ வழித்தடங்களை உருவாக்கியிருக்கிறோம். ‘உத்தர பிரதேசத்தில் எப்போது மெட்ரோ ரயில் பயணம் தொடங்கும்?’ என்று பிரதமர் பேசுகிறார்; நான் பதிலுக்குக் கேட்கிறேன், ‘உங்கள் குஜராத் மெட்ரோ ரயிலில் எப்போது அமரப்போகிறீர்கள்?’ லக்னோ, கான்பூர், காஸியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா எல்லா இடங்களிலும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. அடுத்தும் முதல்வராகப் பதவியேற்றால், வாரணாசியிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவருவேன். அது பிரதமரின் தொகுதி. பிரதமர் வாரணாசி வருகிறார்; கங்கை அன்னை தன்னை அழைத்ததாகச் சொல்கிறார். கங்கை அன்னை மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள் பிரதமர் அவர்களே, வாரணாசிக்கு நான் 24 மணி நேர மின்சாரம் வழங்குகிறேனா இல்லையா? ரம்ஜான், தீபாவளி பற்றி நீங்கள் பேசும்போது, உங்கள் தொகுதியைப் பற்றியும் பேச வேண்டும். அங்கு மின்சாரம் வழங்குவது யார்?

தாத்ரியில் முஸ்லிம் பெரியவர் அடித்துக் கொல்லப் பட்டார். அதை அரசு எப்படிக் கையாண்டது என்று நினைக்கிறீர்கள்? அது உங்கள் அரசு நிர்வாகத்துக்குக் கெட்ட பெயர் உருவாக்கியதாக நினைக்கிறீர்களா?

தாத்ரி சம்பவம் மாநில அரசாலும் போலீஸாராலும் பொறுப்புணர்வுடன் கையாளப்பட்டது. மற்றபடி, முசாஃபர்நகர் பாணி கலவரத்தை உருவாக்க பாஜக மேற்கொண்ட இன்னொரு முயற்சி அது. போலீஸ், நிர்வாகம் உதவியுடன் எப்படியோ எங்களால் அதைச் சமாளிக்க முடிந்தது. அப்போது நாங்கள் முற்றிலும் சரியான முடிவுகளையே எடுத்தோம். அதனால் பிழைத்தோம். யோசித்துப்பாருங்கள்.. ஒருவர் வீட்டுக் குளிர்பதனப் பெட்டியில் ஒரு உணவு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சிலர் வந்து அவரைக் கொல்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை! அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா?

இந்தத் தேர்தலில் பிரித்தாளும் முயற்சிகள் நடப்பதாக நினைக்கிறீர்களா?

அவர்கள் முயற்சிக்கிறார்கள்; ஆனால், அது நடக்காது. அவர்கள் தோற்றுவிட்டார்கள்.

பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?

அது யாருக்கும் உதவவில்லை. ஏழைகள் யாரும் அதன் மூலம் மகிழ்ச்சியடையவில்லை. அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். ஜனநாயகத்தில் ஒருவர் எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய விஷயம் மக்களுக்குத் துன்பம் தந்தால், வாய்ப்பு கிடைக்கும்போது மக்கள் தோற்கடிப்பார்கள். ஜனநாயகத்தில் அநாவசியமான காரணங்களுக்காக மக்களைக் கண்ணீர் விட வைக்கக் கூடாது.

பணமதிப்பு நீக்கம் காரணமாக ஒரு அரசியல் கட்சி எனும் முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா?

எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் வீட்டுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டிருந் தோம். நல்லவேளை, என்னிடம் எதுவுமில்லை. இருள் விழும்போது உங்கள் நிழல்கூட உங்களை விட்டுச் சென்றுவிடும் என்று சொல்வார்கள்!

இந்தத் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்? மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியா, பாஜகவா?

நாங்கள் நம்பர் ஒன்! நம்பர் டூ, நம்பர் த்ரீ யார் என்று சொல்வது கடினம். வளர்ச்சியைக் கொண்டுவருவதாக மாயாவதிஜி சொல்கிறார். லக்னோ முழுவதும் அவர் தன்னுடைய கட்சிச் சின்னமான யானைச் சிலைகளைத்தான் உருவாக்கினார். அவரை யார் நம்புவார்கள்? என்ன மாதிரியான வளர்ச்சியை அவர் தருவார்? குஜராத்தில் படேலுக்குத் தயாராகிவரும் சிலையை விடப் பெரிய யானைச் சிலையை வேண்டுமானால் அவர் உருவாக்கலாம். பாஜகவின் வளர்ச்சி முழக்கம் பற்றி ஏற்கெனவே மக்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு பொறியாளர். நாட்டின் பிற முதல்வர் களுக்கு இல்லாத நிபுணத்துவம் உங்களிடம் இருக்கிறது. நிர்வாகத்துக்கு அது உதவுகிறதா?

ஆமாம், பொறியியல் பின்னணி இருப்பது ஒரு சாதகமான அம்சம்தான். குறைந்தபட்சம் சாலையை விரைவாக முடிப்பது பற்றிச் சிந்திக்க முடியும். உதாரணத்துக்கு, பொறியாளர்களிடமும் ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் பேசும்போது, அவர்கள் ஒரு பாலத்தைக் கட்ட முடியாது என்று சொன்னால், அது சரியா, தவறா என்று என்னால் தெரிந்துகொள்ள முடியும்.

அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகள் திருப்தி தருகின்றனவா?

23 மாதங்களில் யாருமே நெடுஞ்சாலைப் பணிகளை முடித்ததில்லை. நாங்கள் செய்திருக்கிறோம். நன்றாக வேலை பார்க்கும் அதிகாரிகளே சில சமயம் தடங்கலையும் ஏற்படுத்தலாம். சரியான அதிகாரிகளை நாம் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். அவர்களை நம்பி, வழிநடத்த வேண்டும். அந்த நம்பிக்கைதான் பலன் தரும். அதிகாரிகள் மத்தியில் போட்டியும் உண்டு. அவர்களும் நன்றாக வேலை பார்க்கவே விரும்புவார்கள். ஒரு அதிகாரி நன்றாக வேலை பார்த்தால், மற்றவர்களும் நன்றாக வேலை பார்ப்பார்கள். குறித்த நேரத்துக்குள் செய்துமுடித்த பல பணிகளைப் பற்றி என்னால் சொல்ல முடியும். நல்ல பணிகள் அவை.

உங்கள் ஆட்சிக்காலத்தின் முதல் பாதியில் திணறினீர்களா? விரும்பிய பணிகளை உங்களால் செய்ய முடியாமல் போனதா?

நான் நிறைய கற்க வேண்டியிருந்தது. ஏனென்றால், அதற்கு முன்னர் நான் ஒரு அமைச்சராகக்கூட இல்லை. சாதாரண எம்பி. அவ்வளவுதான்! திடீரென, ‘நீ முதல்வராகப்போகிறாய்!’ என்றார் அப்பா. ‘உங்கள் இஷ்டம் அப்பா!’ என்றேன்.

ஆச்சரியமாக இருந்ததா?

ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில், ஒருபோதும் நான் முதல்வராக விரும்பியதில்லை. 2012 தேர்தல் பிரச்சாரம் முழுவதும் என் கட்சிக்காகவும் என் அப்பாவும் கட்சித் தலைவருமான முலாயம் சிங்குக்காகவும்தான் செய்தேன். எனக்காக அல்ல!

கட்சிக்குள்ளே தடைகள் இருந்தனவா?

அது ஒரு விஷயம் அல்ல. தடைகள் உருவாகலாம். என்ன சாதித்தோம் என்பதுதான் விஷயம். நான் பணிகளைச் செய்யவில்லை என்றால், என்னை யார் நம்புவார்கள்? இன்றைக்கு, நான் நிறைய செய்திருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும்.

முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நீங்கள் நடந்துகொள்வதாக, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக குற்றம்சாட்டியதே…

இல்லை. முஸ்லிம்களுக்கு அவர்களுக்கான பங்கை வழங்குகிறேன். 20% முஸ்லிம் மக்கள் வாழும் மாநிலம் இது. எனது திட்டங்களில் அவர்களுக்கு 20% பங்கு வழங்குகிறேன். இதில் என்ன தவறு? லேப்டாப், கன்யா வித்யா தன், சமாஜ்வாதி ஓய்வூதியம், கல்விப் பணிகள் என்று பல திட்டங்கள். எல்லாவற்றிலும் அவர்களுக்கான நியாயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கிறது. அவ்வளவே. தர்காக்களுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்குகிறேன். அதேசமயம், கோயில்களுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்குகிறேன். என்னை எப்படி அழைப்பீர்கள், சொல்லுங்கள்!

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உங்கள் தேர்தல் அறிக்கையில் இந்த முறை இல்லையே…

இடஒதுக்கீடு மத்திய அரசால் வழங்கப்படும் என்பதும் அரசியல் சட்டத்தில் திருத்தம் இல்லாமல் அதைக் கொண்டுவர முடியாது என்பதும் உங்களுக்கும் தெரியும். படித்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இது தெரியும். அதற்காகப் போராடிவருகிறோம் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். நாங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறோம். யாரும் யாருக்கும் அநீதி இழைக்க விட மாட்டோம். நாங்கள் முஸ்லிம்களிடமிருந்து விலகி நிற்கிறோம் என்று யாராவது சொன்னால் அது உண்மையல்ல. இந்துக்களைத் திருப்திப்படுத்த விரும்புகிறோம் என்றோ முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த விரும்புகிறோம் என்றோ சொன்னால் அதுவும் உண்மையல்ல. அனைவரையும் உள்ளடக்கிய சோஷலிஸம் எங்களுடையது.

நீங்கள் சமாஜ்வாதியின் முகம். மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியின் முகம். உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு என்று ஒரு தனித்த முகம் மாநில அளவில் இல்லாதது அதற்குப் பின்னடைவைத் தருமா?

அவர்களிடம் பிரதமர் மோடியின் முகம் இருக்கிறதே! அதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர் காவல் நிலையம், இடுகாடு, சுடுகாடு, மின்சாரம், தீபாவளி, ரம்ஜான் என்று பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் மோடி தனக்குள் தானே சிக்கிக்கொண்டிருக்கிறார்.

- அமித் பருவா, ஓமர் ரஷீத்

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x