Published : 15 Aug 2016 10:02 AM
Last Updated : 15 Aug 2016 10:02 AM

குவெட்டா குண்டுவெடிப்பு எழுப்பும் கேள்விகள்

பாகிஸ்தான் நாளிதழ் 'டான்' தலையங்கம்



பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பினர் ஒரு புறமும், தாலிபான்கள் ஒருபுறமும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். பயங்கரவாதத்துக்கு எதிரான நீண்ட போர், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாகவும் எல்லைகளற்றதாகவும் மாறியிருக்கிறது.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் (சி.பி.இ.சி.) பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கமும், பலூசிஸ்தான் பகுதியில் அந்நியர்களின் தலையீட்டின் தொடர்பும், இச்சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் எனும் குற்றச்சாட்டுகள் எழும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதே சமயம், அந்தக் குற்றச்சாட்டுகளை எளிதாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது. இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். தெளிவான, முற்றிலும் வெளிப்படையான விசாரணையும், சட்ட நடவடிக்கைகளும்தான் இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.

பாகிஸ்தானின் எல்லைகளைக் கடந்து பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடிவரும் நிலையில், குறிப்பிட்ட சில மாகாணங்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தால், குவெட்டா, பலூசிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தில் எங்குமே அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவர முடியாது. கைபர் பக்தூன்க்வா பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்கிவிட்ட நிலையில், பாகிஸ்தானின் பிற பகுதிகளிலிருந்து அவர்கள் இயங்கத் தொடங்கிவிட்டார்கள் என்று ராணுவத் தலைமையே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக பலூசிஸ்தான் பகுதியின் பாதுகாப்புக் கொள்கையில், ராணுவத்தின் ஆதிக்கமே நிலவுகிறது. இருப்பினும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்காது என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. இத்தாக்குதலின் பின்னணியில் வெளிநாடுகள் இருக்கும்பட்சத்தில், ஆப்கானிஸ்தானுடனான நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பலூசிஸ்தான் மாகாணம் பாதுகாப்பற்றதாகியிருக்கிறது என்றே அர்த்தம்.

இந்த எல்லையின் மறுபுறம் உள்ள பகுதிகள் ஆப்கன் தாலிபான்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆப்கனில் நடக்கும் சட்டபூர்வமான ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் கிளர்ச்சிகள், அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கியிருக்கின்றன. இப்பிரச்சினையின் முக்கியக் காரணிகளில் இதுவும் ஒன்று.

அண்டை நாடுகளிடமிருந்து தனித்திருக்கும் வரையில், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதே பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படைப் புள்ளியாக இனி இருக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான அணுகுமுறை நடைமுறைக்குச் சரிவராது என்று சொல்லியே பெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படைத் தத்துவமாக இது உருவாகாத வரை, அமைதி, ஸ்திரத்தன்மையுடன் கூடிய வளமான எதிர்காலத்தை பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது.

உள்நாட்டுப் பயங்கரவாதமானாலும், வெளிநாடுகளின் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதமானாலும் சரி, பாகிஸ்தானின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியால்தான் பயங்கரவாதத்தை வெல்ல முடியும். குவெட்டா ஒரு சிறிய நகரம் என்ற முறையில், அந்நகரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும், வெவ்வேறு அதிகாரிகளின் தரப்பிலிருந்தும் சூளுரைகள் எழுகின்றன. ஆனால், பொறுப்பு எடுத்துக்கொள்வதில்தான் முக்கியத்துவம் செலுத்தப்படுவதில்லை. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்துக்கும், தலைநகர் குவெட்டாவுக்கும் இந்நிகழ்வு தொடர்பான பதில்களையும், பாதுகாப்புக்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டியது கட்டாயம்!

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x