Last Updated : 15 Oct, 2014 08:39 AM

 

Published : 15 Oct 2014 08:39 AM
Last Updated : 15 Oct 2014 08:39 AM

எபோலா சூறையாடிய சியரா லியோன்

எபோலாவின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயதுச் சிறுமியின் நேரடி அனுபவம்.

எபோலா என்ற வார்த்தையே எனக்குள் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் கேட்பதுகூட வெறுப்பாக இருக்கிறது. அது என்னுடைய குடும்பத்தையும் பள்ளிப் படிப்பையும் நாசமாக்கிவிட்டது. வாழ்க்கை திடீரெனத் துன்பமயமாகிவிட்டது. என்னுடன் அத்தையும் சில உறவினர்களும் இந்த வீட்டில் இப்போது இருக்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு ஆறுதல்.

நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் முன்பு மகிழ்ச்சி யாக இருந்தோம். இப்போதோ நான் பீதியில் ஆழ்ந் திருக்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நண்பர்கள், பல குடும்பங்கள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டனர், இன்னமும் இறந்து கொண்டிருக்கின்றனர். உறவினர்களை இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எபோலா உண்மையில்லையா?

எங்கள் நாட்டில் (சியரா லியோன்) எபோலா வந்திருப் பதாக முதலில் கூறியபோது நாங்கள் கவலைப்பட வில்லை. அதற்குப் பிறகு அந்தக் காய்ச்சலின் தன்மை, கொடூரம், விளைவு குறித்து அரசும் தன்னார்வத் தொண்டர்களும் விளக்க ஆரம்பித்தனர். ஏராளமானோர் அதை நம்ப மறுத்ததுடன், அரசியல்ரீதியாக அதைக் கேலிசெய்யவும் முற்பட்டனர். “எபோலா உண்மை யில்லை” என்று கூறி கெனிமா என்ற மாவட்டத்தில் பெரிய கலவரமே நடத்தினார்கள். வடக்கில் இருப்ப வர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள், எபோலா வைரஸ் கிழக்கிலிருந்துதான் (எதிர்க் கட்சிகளின் கோட்டை) வந்திருக்கிறது என் பதால், அரசு சட்டை செய்யவே இல்லை என்றும் சிலர் சாடினார்கள். டாக்டர் களுக்கு உங்களுடைய ரத்தம் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் எபோலா என்று அச்சமூட்டுகிறார்கள் என்றனர்.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் நிலைமை மாறியது; “கெனிமா, கைலாஹூன் மாவட்டங்களுக்குள் யாரும் போகக் கூடாது, அங்கிருந்தும் யாரும் வெளியேறக் கூடாது” என்று அரசு தடை விதித்தது. இது எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, எல்லோரையும் பாதித்தது. வாழ்க்கையே செயலற்று முடங்கியது. நாங்கள் இங்கே சிக்கிக்கொண்டோம். சந்தைக்குப் போய் விலை மலிவாகப் பொருட்களை வாங்கிவரும் அத்தையால் வெளியே போக முடிய வில்லை. எங்களில் பெரும்பாலானவர்களுடைய வீடு களில் பணமும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பணக்காரர்கள் பயன்படுத்திக்கொண்டு, மேலும் பணம் சேர்த்தனர்.

ஆம்புலன்ஸ் வந்தால் அவ்வளவுதான்!

எங்களுடைய குடியிருப்பையே எபோலா தாக்கியபோது நாங்கள் நிலைகுலைந்தோம். எங்கள் பகுதியில் ஒரு மருந்துக் கடைக்காரர் உடல் நலமின்றிப் படுத்தார். “எனக்கு வயிற்றில் புண், அதனால்தான் வலி, எரிச்சல்” என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கே போகாமல் வீட்டிலேயே படுத்திருந்தார். அவரே மருந்துக் கடைக்காரர் என்பதால், அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அவரைவிட நமக்கென்ன தெரிந்து விடப்போகிறது என்று இருந்தோம். பலரும் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்தோம். அவர் இறந்ததும் அவருடைய உடலைக் குளிப்பாட்டி எங்கள் சமூக வழக்கப்படி இறுதிச் சடங்குகளைச் செய்தோம்.

அவர் இறந்த தகவல் எட்டியதும் மருத்துவமனை யிலிருந்து வந்து பார்த்துவிட்டு, எபோலாவால்தான் அவர் இறந்திருக்கிறார் என்றனர். இரண்டு வாரங்கள் கழித்து, அவருடைய வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள், அவருடைய சடலத்தைக் குளிப்பாட்டியவர்கள் என்று எல்லோருமே காய்ச்சலில் படுத்தார்கள். சமூகத் தலைவர் அச்சமடைந்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். அதில் மூன்று பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் சத்தம் குழந்தைகளான எங்களைக் கிலியடையச் செய்தது. சமூகத்தில் எல்லோருமே அஞ்சினார்கள். ஆம்புலன்ஸில் யாரை ஏற்றிச்சென்றாலும் அவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

நான் அதிர்ஷ்டக்காரி இல்லை

அதற்குப் பிறகு என்னுடைய அத்தை உள்பட 16 பேருக்குக் காய்ச்சல் வந்தது. எபோலாதான் என்று உறுதியாயிற்று. அவர்களில் மேரி என்ற 14 வயதுத் தோழியும் என்னுடைய அத்தையும்தான் உயிர் பிழைத்தார்கள். நான் அதிர்ஷ்டக்காரி என்றே நினைத்தேன், ஆனால், அதை அப்படியும் நினைக்க முடியவில்லை.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஐந்து குடும்பங் களைச் சேர்ந்த 17 பேர் இறந்துவிட்டனர். மேலும், ஒன்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையிலிருந்து சிலர் எங்கள் குடியிருப்பு களுக்கு வந்து, வீடுகளிலிருந்த படுக்கை, தலை யணை, போர்வை என்று எல்லாவற்றையும் வீதிக்கு எடுத்துவந்து தீயிட்டுக் கொளுத்தினர். ஏதேதோ மருந்துகளை வீட்டுக்குள் பீய்ச்சி அடித்தனர். கண்களில் கண்ணீர் வழிய அழுதுகொண்டே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். காய்ச்சல் வந்தவர்களின் வீடுகள், உறவினர்களை இழந்தவர்களின் வீடுகள் என்று எல்லோர் வீடுகளுக்கும் அவர்கள் போனார்கள். அதைப் பார்த்து குழந்தைகள் எல்லோரும் கதறி அழுதார்கள்.

எங்கள் குடியிருப்பிலிருந்து யாரும் 21 நாட்களுக்கு வெளியே போகக் கூடாது என்று தனிமைப்படுத்தி னார்கள். எங்கள் வீட்டை போலீஸாரும் ராணுவ வீரர்களும் சுற்றிவளைத்தனர். எதையும் வாங்கவும் கொடுக்கவும் வீட்டை விட்டுப் போக முடியவில்லை. வியாபாரத்துக்கும் தொழிலுக்கும் செல்ல முடிய வில்லை. அப்படியே யாராவது ரகசியமாக வெளியேற முயன்றாலும் ராணுவ வீரர்கள் அடித்து வீட்டுக்குள் போகுமாறு மிரட்டுவார்கள்.

அத்தையை மருத்துவமனையிலிருந்து அனுப்பி யிருந்தாலும் அவரால் வெளியில் போய் எதையும் வாங்கவும் முடியவில்லை, சமைக்கவும் முடியவில்லை. நாங்கள் எல்லோரும் பட்டினிகிடந்தோம். முதல் இரண்டு வாரங்களுக்கு எங்களுக்கு யாரும் குடிநீர், உணவு என்று எதுவுமே தரவில்லை. மூன்றாவது வாரம் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் கோதுமை ரவை, எண்ணெய், பீன்ஸ் ஆகியவற்றைக் கொடுத்தது. கோதுமை ரவையை சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஆரம்பித்துவிடும் என்பதால், நாங்கள் அதை வாங்க மறுத்தோம். தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எபோலாதான் என்று முடிவுசெய்து, வேறிடத்துக்குக் கொண்டுபோய்விடுவார்கள். அதனால், வேறு ரவை வாங்கி மூன்று வாரங்கள் கஞ்சி காய்ச்சிக் குடும்பத்தினர் அனைவரும் குடித்தோம்.

இவ்வளவு நடந்த பிறகும் மக்களுக்கு எபோலா பற்றித் தெரியவில்லை. ஒரு நாள் என்னுடைய இரண்டு தோழிகளைச் சந்தித்தேன். அவர்களுடைய வீட்டிலும் சிலருக்குக் காய்ச்சல் இருப்பதாகவும் வீட்டிலேயே கைவைத்தியம் பார்ப்பதாகவும் கூறினார்கள்.

படிப்பு என்னாகும்?

எங்களுடைய குடியிருப்பில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மா, அப்பாவை இழந்து விட்டார்கள். எங்களை இனி யார் பார்த்துக்கொள்வார்கள்? நாங்கள் எப்படி இனி பள்ளிக்குப் போக முடியும்? என்னைப் போன்ற குழந்தைகளில் எத்தனை பேர் மிஞ்சப்போகிறார்கள்?

இந்த நிலையில், அரசு வேலைக்கான தேர்வெழுத வேண்டிய என்னுடைய மூன்று சிநேகிதிகள் கர்ப்பமாகி விட்டார்கள். எனக்கும் அந்த நெருக்குதல் இருக்கிறது. “கிறிஸ்துமஸுக்குப் புதுத் துணி வாங்க, எந்த ஆணுடனாவது இருந்துவிட்டு வா” என்று வீட்டில் நச்சரிக்கிறார்கள். வீட்டில் வறுமை என்றால், சியரா லியோனில் சிறுமிகளுக்குக்கூட இதுதான் தலையெழுத்து. இந்த எபோலா காய்ச்சல் மட்டும் கட்டுப்படாவிட்டால், ஏராளமான பள்ளிச் சிறுமிகள் அவலநிலைக்கு ஆளாவார்கள்.

நான் இப்போது பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண் டிருக்க வேண்டும். ஆனால், எல்லாப் பள்ளிகளையும் காலவரம்பின்றி மூடிவிட்டார்கள். என் போன்ற மாணவிகள் படிப்பை இழப்பதுடன் கர்ப்பிணிகளாகத் திரிய வேண்டிய நிலைதான் இப்போது.

எபோலா காய்ச்சலுக்கு உள்ளானோர் நிலைமை எங்களைவிடப் பரிதாபம். அவர்களை யாரும் இன்னும் சில மாதங்களுக்குக் கிட்டவே சேர்க்க மாட்டார்கள். சியரா லியோன் முழுக்க மக்கள் ஏதாவது ஒரு வகையில் அவதிப்படுகிறார்கள். வேலையில்லை, வியாபாரம் இல்லை, சாப்பாடு இல்லை, மருந்து இல்லை. உதவக்கூட யாரும் இல்லை. இந்தத் துயர நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்றப்போவது யார்?

தி கார்டியன்,

|தமிழில்: சாரி|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x