Last Updated : 17 Nov, 2013 12:37 PM

Published : 17 Nov 2013 12:37 PM
Last Updated : 17 Nov 2013 12:37 PM

நினைவுகள் அழிவதில்லை

நீத்தார் நினைவுகளுக்கும், நிற்க வைத்த சிலைகளுக்கும் இது போதாத காலம். முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்துக்கு முட்டுக்கட்டைகள். காமராஜர் சாலையின் நடுவிலுள்ள சிவாஜி கணேசன் சிலையை இடம்பெயர்க்க வழக்கு, குருபூஜைகளுக்கு அரசு ஆதரவளிக்கக் கூடாதென்ற சம்பத் கமிஷன் அறிக்கை - இப்படி தினசரி கிளம்பும் சச்சரவுகளைப் பார்க்கும்போது நினைவுச்சின்னங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

கடந்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள இரண்டு பிரதான சாலைகளில் நடைபெற்ற சிலை அரசியலைப் பார்க்கலாமா?

முதலில் மவுண்ட் ரோடு. அண்ணா சாலை என்ற பெயர் மாற்றத்துக்குப் பிறகும் அது மவுண்ட் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. கோட்டைக்குப் பின்புறம் தொடங்கும் இந்தச் சாலையிலிருந்துதான் தமிழகத்திலுள்ள மற்ற ஊர்களின் தூரம் கணக்கிடப்படுகிறது. சாலையின் ஆரம்பத்தில் தீவுத்திடலின் மையத்தில் உள்ள குதிரை மீது சவாரி செய்வது மன்றோவின் சிலை. காலனியாதிக்கத்தில் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோவை கௌரவிக்க 1839-ல் நிறுவப்பட்ட இந்தச் சிலை இங்கிலாந்தில் பகுதி பகுதியாகச் செதுக்கப்பட்டு, சென்னைக்கு வந்து ஒருங்கிணைத்த பின்னர் பீடத்தில் அமர்த்தப்பட்டது. சிலை நிறுவப்பட்ட பிறகுதான் சேணம் பூட்டிய குதிரையில் கால் வைக்கும் ‘தூண்டிவிடும் வளையத்தை’சிற்பி வைக்க மறந்தது அறியப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட சிற்பி தற்கொலை செய்துகொண்டதாகக்கூட ஒரு புனைகதை உண்டு.

நீலன் என்ற காலன்

அடுத்ததாக உள்ளது காமராஜர் சிலை. ஜிம்கானா கிளப் வாசலின் சாலையோரத்தில் அமைக்கப்பட்டது. சாலைக்கு நடுவில் சிலை வைத்துக்கொள்ளும் உரிமை திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே உண்டு.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வாயிலில் வீற்றிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையும், ஏழாவது எட்வர்டு மன்னரின் சிலையும் நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் அரசினர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், சாலையின் நடுவே, கம்பீரமாக, தந்தை பெரியாரின் சிலை நிறுவப்பட்டது.

சிம்சன் கம்பெனி வாசலில் 1910-ல் வைக்கப்பட்ட நீதிபதி டியூடர் போத்தாம் சிலை, முதலில் மேதினப் பூங்காவுக்கு மாற்றப்பட்டது. அதன் தற்போதைய விலாசம் தெரியவில்லை. நீதிபதி ஒருவருக்கு அவரது சமூக சேவையைப் பாராட்டிப் பொது இடத்தில் சிலை வைக்கப்பட்டது அதுவே முதன்முறை. நீதிமன்றப் பரிபாலனத்தில் கண்டிப்பைக் கடைப்பிடித்த அவரை வக்கீல்களுக்குப் பிடிக்காமல் போனது வேறு கதை.

அண்ணாவின் சிலை ரவுண்டானா அகற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. புகாரி ஹோட்டலுக்கு எதிரே வைக்கப்பட்ட கலைஞரின் சிலை, எம்.ஜி.ஆர். மறைந்த தினமன்று சேதப்படுத்தப்பட்டதால் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது. தி.க. தலைவர் வீரமணி அந்தச் சிலையை மீண்டும் நிறுவுவதற்கு செய்த முயற்சி, கலைஞரின் மறுப்பால் நின்றுவிட்டது.

ஸ்பென்சர் பல்பொருள் அங்காடி (தற்போதைய ஸ்பென்சர் பிளாசா) முன்னால், இந்திய மக்களை வேட்டையாடிய ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்ற ராணுவத் தளபதிக்கு, அவரைக் கௌரவிக்கும் வகையில் சிலை வைக்கப்பட்டது. ‘நீலன் என்ற காலன்’என்றழைக்கப்பட்ட அவரது சிலை, இந்திய மக்களை அவமதிக்கும் சின்னமென்று அதை அகற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடினர். 1937-ல் நடைபெற்ற தேர்தலில் சென்னை ராஜதானிக்கு ராஜாஜி பிரதம மந்திரியான அதே ஆண்டு, நவம்பர் மாதம் இரவோடு இரவாக அந்தச் சிலை அகற்றப்பட்டு, அருங்காட்சியகத்தில் முடங்கியது.

எம்.ஜி.ஆரின் சிலை அதே இடத்தில்தான் நிறுவப்பட்டுள்ளது. கன்னிமாரா ஹோட்டலை ஒட்டிச் செல்லும் சாலையின் துவக்கத்தில் இந்திரா காந்திக்குச் சிலை வைக்க ஏசய்யா என்ற வழக்கறிஞர் அனுமதி பெற்றிருந்தும், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிச் சண்டையில் சிலை நிறுவும் திட்டம் அமுங்கிப்போனது.

ஜெமினி மேம்பாலத்துக்குக் கீழே, முரட்டுக் குதிரையை வீரனொருவன் அடக்குவது போலொரு சிலையுள்ளது. அதன் கீழே ‘7/6/73 அன்று குதிரைப் பந்தயம் ஒழிக்கப்பட்ட தீர்மானத்தின் நினைவாக’என்று போடப்பட்டுள்ளது. குதிரைப் பந்தயம் சூதாட்டம் அல்ல என்றும், அந்தச் சட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் 1995-ல் தீர்ப்பளித்த பின்னரும் குதிரை வீரன் யாருக்காக அங்கே காத்திருக்கிறான் என்று தெரியவில்லை.

விதிவிலக்கான சிலை

ஜெமினி மேம்பால இறக்கத்தில் ஒதுக்குப்புறமாக பெரியார் சிலையொன்று உண்டு. ஒரே சாலையில் ஒருவருக்கு இரண்டு சிலைகள் உண்டென்றால், அது பெரியாருக்கு மட்டுமே. அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி தி.மு.க-வினர் சிம்சன் அருகிலுள்ள சிலைக்கு மாலையிட்டால், அ.தி.மு.க-வினர் ஜெமினி மேம்பாலத்துக்குக் கீழுள்ள சிலைக்கு மாலையிடுவர். இதிலும் பங்காளிக் காய்ச்சல்தான்.

நந்தனம் நுழைவாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலை சாலையோரமாக அமைக்கப்பட்டது. மற்ற இடங்களில் சாதிப் பெயர்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அவரது சிலைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

சைதாப்பேட்டையில் சின்னமலைக்கு அருகில் வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி சிலை, மெட்ரோ ரயில் பாதை அமைக்கவும், கத்திப்பாரா அருகே வைக்கப்பட்ட ஜவாஹர்லால் நேருவின் சிலை மேம்பாலம் அமைக்கவும் இடம்பெயர்க்கப்பட்டன. இது மன்றோ சிலை முதல் மர்மலாங் பாலம் (தற்போழுது மறைமலையடிகள் பாலம்) வரை நடந்த கதை.

தெற்குக் கடற்கரைச் சாலையில் (காமராஜர் சாலை) நடந்த வரலாற்று விபத்துகளைப் பார்ப்போமா?

எம்.ஜி.ஆர். சமாதியில் அமைக்கப்பட்ட குடை போன்ற நினைவுச் சின்னம், சுற்றுலாத் துறையின் இலச்சினை போல் இருக்கிறதென்று இடிக்கப்பட்டு, பெரும் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அதற்குப் புதிய வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டது. பின்னர், இரட்டை இலைகளில் தொங்குகிற குதிரையை, பறக்கும் குதிரைச் சிலை என்று கூறி களேபரமற்ற திறப்பு விழாவும் அவசரகதியில் நடத்தப்பட்டது. அந்தச் சிலையில் உள்ளது இறக்கைகளா (அ) இலைகளா என்ற பட்டிமன்றம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

அண்ணா சமாதிக்கு எதிரே சிவானந்தா சாலை (முன்னாள் ஆடம்ஸ் சாலை) நுழைவில் வைக்கப்பட்ட புத்தகம் தாங்கிய சிவானந்தரின் சிலையிலிருந்த புத்தகம் ஒருநாள் காணாமல் போய்விட்டதால், பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றுச்சுவர்களுக்குள் சிவானந்தர் சிறைப்படுத்தப்பட்டு, அவரிடம் புதுப் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.

மீண்டும் கண்ணகி

உலகத் தமிழர் மாநாட்டையொட்டி, தலைவிரி கோலத்துடன் கையில் சிலம்பேந்தி கோபக்கனலுடன், ‘சான்றோரும் உண்டுகொல்’ என்ற கேட்ட ‘கற்புக்கரசி’கண்ணகியின் சிலை 2001-ல் காணாமல் போய்விட்டதன் காரணம், இன்றுவரை யாருக்கும் தெரியாது. அருங்காட்சியகத்தில் துயிலுற்றிருந்த அந்தச் சிலையை மீட்கப் போராட்டங்கள் வலுத்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. மீட்க முடியாத வருத்தத்தில், அண்ணா சாலையிலுள்ள ‘அன்பகம்’முன்னால் மற்றொரு கண்ணகியின் சிலை தோன்றியது. 2006-ல் மறுபடியும் கண்ணகி மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்.

கண்ணகி சிலையின் பின்னாலுள்ள கடற்கரை, சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘திலகர் திடல்’என்று அழைக்கப்பட்டது. இந்தியத் தலைவர்கள் பலர் பேருரைகளாற்றி மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டினர். உட்கார வசதியாக சிமெண்ட் பெஞ்சுகளும், வானொலிச் செய்திகளை ஒலிபரப்பும் சாதனங்கள் உள்ள அறையும் இருந்தன. உலகத் தமிழர் மாநாட்டையொட்டி அவையெல்லாம் அகற்றப்பட்டன. திலகரின் நினைவாக ‘திலகர் திடல்’என்ற பெயர்ப்பலகையாவது வைக்க வேண்டுமென்ற கோரிக்கை மறுக்கப்படவே சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். 2010-ல் உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் ‘திலகர் திடல்’என்ற பெயர்ப்பலகை பொருத்தப்பட்டது.

மெரினா கடற்கரையில் தலைவர்களின் பேருரைகளைப் பொதுமக்கள் கேட்கும் வண்ணம் சீரணி அரங்கம் அமைக்கப்பட்டு, கட்சிகளுக்கும் கலை மற்றும் மதம் சார்பான விழாக்களுக்கும் வாடகைக்குத் தரப்பட்டது. பொதுப்பணித் துறையினரால் திடீரென்று தரைமட்டமாகிய சீரணி அரங்கம், அதிகார ஆணவத்தால் ஜீரணிக்கப்பட்டது. கடற்கரைக் காற்றை அனுபவித்துக்கொண்டே சீரிய கருத்துரைகளை மக்கள் கேட்கும் ஒரே வாய்ப்பும் பறிக்கப்பட்டது.

கலை மாளிகையான கலைஞர் மாளிகை

ராணி மேரி கல்லூரியை அகற்றிவிட்டு, அந்த வளாகத்தில் தலைமைச் செயலகப் பகுதியொன்றை அமைக்க முற்பட்ட முயற்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பாலும் அதையொட்டி தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலமாகவும் முறியடிக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க கட்டடங்களை இடிக்கக் கூடாதென்ற அடிப்படையில், உயர் நீதிமன்றம் தடை வழங்கியதில் ஏழைப் பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனம் காப்பாற்றப்பட்டது. பாரம்பரியக் கட்டடமென்று சொல்லிப் போராட முன்வந்தவர்களே அதை இடித்துப் புதிய கட்டடத்தை எழுப்பி, ‘கலைஞர் மாளிகை’என்று பெயரிட்டு மகிழ்ந்தது வரலாற்றுக் குற்றமே. அடுத்து வந்த ஆட்சியோ பெயரில் இருந்த முதல் வார்த்தையின் சில எழுத்துகளை விழுங்கியதில் ‘கலை மாளிகை’என்ற பெயருடன் அந்தக் கட்டடம் நிற்பது வன்மத்திலும் வன்மம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெண்கலச் சிலையை, சாலையின் (காந்தி சிலையருகே) நடுவில் வைக்க அவரது ரசிகர் மன்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், சிலை திறப்பு விழாவும் ஜூலை 2006-ல் நடந்தேறியது. ஏழு ஆண்டுகளுக்குப் பின் இறுதிக்கட்ட விசாரணைக்கு அந்த வழக்கு வந்துள்ளது. சிலை, போக்குவரத்துக்குக் குந்தகம் விளைவிக்கிறதா என்று அரசை உயர் நீதிமன்றம் கேட்டுள்ள நிலையில், சிலையை அகற்றக் கூடாதென்ற போர்க்குரலும் எழும்பியுள்ளது. கடற்கரைச் சாலையின் கிழக்கு ஓரப் பகுதிகளில் மட்டுமே பலரது சிலைகள் வைக்கப்பட்டிருப்பினும் சிவாஜியின் சிலையைச் சாலையின் நடுவில் அமைக்க அனுமதித்ததன் காரணம் புரியவில்லை. சாலை நடுவில் சிவாஜியின் சிலை தொடர்ந்து இருக்குமா என்பது நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தது.

கடற்கரைச் சாலையின் தென்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்த கலங்கரை விளக்கம் வெறும் காட்சிப்பொருளாகிவிட்டது. அதன் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும், வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்து, அதன் உச்சிக்குச் சென்று உயரத்திலிருந்து சென்னையைப் பார்க்கும் அனுமதி நிறுத்தப்பட்டு, கலங்கரை விளக்கம் மேற்பார்வையின்றி பரிதாப நிலையில் உள்ளது. தனது சுழலும் விளக்கொளியில் கடலில் பயணிக்கும் கலங்களுக்கு வெளிச்சம் போட்டுக் கரையைக் காட்டுவதுபோல் உயர் நீதிமன்றமும் தன்னிடம் முறையிடும் வழக்காடிகளுக்குத் தீர்ப்பளிப்பதனால் கலங்கரை விளக்கம் என்றே அழைக்கப்படுகிறது. கலங்கரை விளக்கமும் நீதிமன்றமும் ஒரே கட்டடத்தில் இயங்கியது சென்னையில் மட்டுமே. இரவு நேரத்தில் கலங்கரை விளக்கக் கோபுரத்தை வடசென்னை மக்கள் காணும் வகையில் ஒளியூட்டும் விளக்குகளின் வெளிச்சம் அதன் மீது படரும் வகையில் ரூ. 60 லட்சம் செலவில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல் கலங்கரை விளக்கத்துக்கே விளக்கு வெளிச்சமா? என்று பலரும் கேட்டனர்.

அடுத்து அரசின் தாக்குதலுக்கு உள்ளானது காவல் துறைத் தலைவரின் அலுவலகக் கட்டடம். பர்ஃபெக்ட் யூனிட்டி என்று அந்த நாளில் ஃப்ரீ மேசன் குழுவினரின் ஓய்விடமாக விளங்கிய வெள்ளைக் கட்டடத்தை இடித்துவிட்டுப் புதிய காவல் தலைமையகம் கட்ட அரசு முயன்றதை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். பாரம்பரிய வரலாறு உள்ள கட்டடங்களைச் சட்டப்படி இடிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். அரசின் முயற்சி கைவிடப்பட்டு, அந்தக் கட்டடம் பாரம்பரியத் தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, அந்த வளாகத்தின் பின்னால் விரிவாக்கக் கட்டடம் கட்டப்பட்டதில், பாரம்பரியச் சின்னம் ஒன்று காப்பாற்றப்பட்டது.

யார் முதலில்?

சென்னை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலில் குடியேறியவர்கள் அங்குள்ள மீனவர்களே. அயோத்தியா குப்பம், நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் என்றழைக்கப்பட்ட மீனவக் கிராமங்கள் அகற்றப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடிவைக்கப்பட்டனர். மீன் பிடிக்கச் செல்லும் கட்டுமரங்களும் [ஆங்கிலத்தில் ‘கேடமரான்’(catamaran) என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லிலிருந்து கடன் வாங்கியதே] மீன்பிடி வலைகளும் கடற்கரையில் தொடர்ந்து வைக்கப்படுவது, சிங்காரச் சென்னையின் அழகைக் குலைக்கிறதென்று, சென்னை மாநகராட்சியால் காவல் துறை உதவியுடன் அவை அகற்றப்படுவதை எதிர்த்த மீனவர்கள் சிலர், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர். அவர்கள் சார்பாகத் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, கட்டுமரங்களையும் மீன்பிடி வலைகளையும் திருப்பித்தர உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற அமர்விலிருந்த மூன்று நீதிபதிகளும் (ஓ. சின்னப்ப ரெட்டி, ஈ.எஸ். வெங்கட்ராமய்யா, பாலகிருஷ்ண எராடி) தமிழர்கள் இல்லாவிட்டாலும் சென்னையில் மாநிலக் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் படித்தவர்களானதால் கடற்கரையைப் பற்றி அறிந்தவர்கள். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதிகள் கேட்ட கேள்வி இன்னும் நினைவில் இருக்கிறது :

“சென்னைப் பட்டினத்துக்கு அவர்கள் (மீனவர்கள்) முதலில் வந்தார்களா? (அ) அவர்களது தொழில் உபகரணங்களை அசிங்கமென்று கூறும் நீங்கள் (புதிய குடியேறிகள்) முதலில் வந்தீர்களா?’’

அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அரசு வழக்கறிஞரின் அறியாமையைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வந்தேறிகளின் ஆதிக்க மனப்பான்மை யால் விளைந்த அத்துமீறலை ரத்துசெய்து, வரலாற்று உண்மையை நிலைநிறுத்தினர்.

கடைசியில் சென்னைப் பட்டினம் யாருக்குச் சொந்தம்?

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x