Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

யானையும் ஹெலிகாப்டரும் வேண்டாம்: ஆவணப்பட இயக்குனர் சொர்ணவேல் நேர்காணல்

தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குனர் சொர்ணவேல். நேதாஜி சந்திர போஸ் தலைமையில் இயங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கை உணர்த்தும் இவரது ஐ.என்.ஏ. ஆவணப்படம் புகழ்பெற்றது. தற்போது அமெரிக்காவில் உள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்

நீங்கள் புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். இன்றைய டிஜிட்டல் சினிமா யுகத்தில் திரைப்படக் கல்லூரிப் படிப்புக்கான அவசியம் உள்ளதா?

திரைப்படக் கல்லூரி தனது பிரத்யேகத்தன்மையை இழந்துவருவதாக ஒரு சர்ச்சை பத்து வருட காலமாக உள்ளது. டிஜிட்டல் சினிமா என்ற இன்றைய சினிமாவைப் படிக்கத் தனிப்பட்ட திரைப்பள்ளி தேவையில்லை. ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் பயிற்சி பெற சிறு பயிற்சிக் கூடங்களே போதும். இன்றைய எடிட்டிங் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளான எப்.சி.பி. எனப்படும் பைனல் கட் ப்ரோவிற்கான பயிற்சியையும் சான்றிதழையும் ஆப்பிள் நிறுவனம் அளிக்கிறது.

எனது திரைக்கதை வகுப்பு ஆசிரியர், அமரர் ஷகீர் அஹமது அவர்களின் கூற்றை முழுவதுமாக ஏற்கிறேன். தொழில்நுட்பத்தைப் படிக்கலாம், பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சினிமாவைக் கலையாகச் சொல்லிக் கொடுக்க முடியாது. அதைத் தாண்டியும், புத்தனின் சங்கமாகப் பல திரைப் பள்ளிகள் இருந்திருக்கின்றன. புனே திரைப்பள்ளி அத்தகைய கலை தியானிப்பின், புரட்சிகர அரசியலின் வெளியாக இருந்திருக்கிறது.

சென்னைத் திரைப்படக் கல்லூரியின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

பல ஹாலிவுட் படங்களைப் பார்த்து ரசித்த ப. நீலகண்டன் போன்ற ஒரு முன்னணிக் கலைஞரின் மேற்பார்வையில் பல நல்ல டெக்னீஷியன்கள் உருவாகியுள்ளார்கள். அங்கே பயின்ற பி.சி.ஸ்ரீராம் அவர்களே இன்று ஒரு பெரிய நிறுவனம்தான். அவரிடம் பயின்றவர்கள் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவில் புதிய பரிசோதனைகளைச் செய்து கொண்டி ருக்கிறார்கள். உதாரணமாக, எல்லை களை விரித்துக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன். அதைப் போலவே அங்கு பயின்ற ஆறுமுகம் ருத்ரய்யா, ரகுவரன், அருண்மொழி, நாசர் போன்றோர் மாற்று சினிமாவிற்கு வித்திட்டுள்ளார்கள்.

நீங்கள் அமெரிக்காவில் என்னென்ன பணிகளைச் செய்கிறீர்கள்?

நான் மிஷிகன் மாநிலப் பல்கலைகழகத்தில் பணிபுரிகிறேன். இங்கே ஆங்கிலத்துறையில் (பிலிம் ஸ்டடீஸ்) சினிமா வரலாறு, கோட்பாடு சம்பந்தப்பட்ட வகுப்புகளும் டெலிகம்யூனிகெஷன், மீடியா மற்றும் இன்பர்மேஷன் ஸ்டடீஸ் துறையில் படங்கள் எடுப்பதைப் பற்றியான ப்ரொடக்‌ஷன் வகுப்புகளையும் எடுத்துவருகிறேன்.

திரைக்கதை எழுதுவதைப் பற்றிய வகுப்பையும், டெலிகம்யூனிகேஷன் துறையில் குறும்படங்களை எழுதி இயக்குவதைப் பற்றியதான வகுப்பையும் எடுத்துவருகிறேன்.

உங்கள் பயணம் குறித்து…

நான் 90களில் இயக்கிய தங்கம் (இத்தாலிய நண்பர் இலாரியாவுடன் கூட்டியக்கம்), ஐ.என்.ஏ, வில்லு, கருகத் திருவுளமோ பொன்ற படங்கள் அப்பொழுது எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தன. குடிமை உரிமைகள் கிடைக்கக் காரணமாக இருந்த ப்ளோரிடா மாநில நகரமான, செயிண்ட் அகஸ்டின் நகரத்தில் 60களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை எனது நண்பர் மார்க் ஹ்யூல்ஸ்பெக்குடன் சேர்ந்து 2011இல் ஆவணப்படுத்தினேன்.

அப்படத்தின் பெயர் ‘அன்ஃபினிஷ்ட் ஜர்னீ: ஏ சிட்டி இன் ட்ரான்ஸிஷன்’. சிவில் ரைட்ஸ் இயக்கத்தின் 50 ஆண்டு கொண்டாட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆப்ரிக்காவில் காட்டப்பட்டது. இது எனக்கு ஆவணப் படக் கலைஞனாக, ஆசிரியனாக உற்சாகமளிக்கிறது. இந்த அங்கீகாரம் அப்படத்தில் பணியாற்றிய மாண வர்களையே முழுவதுமாகச் சாரும். சென்ற வருடம் இயக்கிய ‘மைக் ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம்’ ஏப்ரலில் பாரிஸில் ஃபெஸ்டிவலுக்குத் தேர்வாகியுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் ப்ராஜக்ட் படங்களுக்காக ஒதுக்கும் பணம் ஆவணப்படம் எடுப்பவர்களுக்குப் பொருளாதார வசதியைக் கொடுத்துள்ளதா?

பொதுவாக என்.ஜி.ஓ.க்களின் யுகமான தற்காலத்தில் ஆவணப் படக்காரர்கள் வசதியாக இருக் கிறார்கள் என்கிற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அது நல்ல ஆவணப்பட இயக்குனர்களுக்குப் பொருந்தாது. என்.ஜி.ஓ.க்களின் தயாரிப்பிலேயே எனது நண்பர்கள் படம் இயக்கினால்கூட ஒதுக்கப்படும் பட்ஜட்டையும், அவர்கள் உழைப் பையும் ஒப்பிட்டால் அவர்களது உழைப்பே அதிகமாக இருக்கும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் எளிதாக யாரும் செய்யக்கூடிய அளவில் இருப்பதால் நல்ல ஒரு படத்திற்கு ஆகக்கூடிய மிதமான செலவுகளுக்கு கூட சந்தேகம் கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். டிஜட்டல் தொழில்நுட்பத்தினால் ஆவணப்படத் தயாரிப்பு அளவில் பெருகியிருக்க வேண்டும். ஆனால் மிகவும் குறுகியுள்ளது.

பிலிம் டிவிஷன் சில முக்கிய மான ஆவணப்படங்களைத் தயாரித்திருந்தாலும் இப்பொழுது தயாரிப்பதைவிடப் பத்து மடங்கு அதிகமாகத் தரமான படங்களைத் தயாரிக்கப் பணம் ஒதுக்கலாம். அவர்களுடைய பழைய ஆவணப்படங்களை அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்குச் சரியாக சந்தைப்படுத்தினாலே போதும்.

சினிமா கோட்பாட்டின் அவசியம் குறித்துச் சொல்லுங்கள்.

சினிமா எடுக்க கோட்பாட்டறிவு தேவையில்லை ஆனால் சினிமாவின் முழு சாத்தியங்களை அறிந்து செயல்பட அது இன்றியமையாத தாகிறது. இங்கு நாம் எப்படிப்பட்ட சினிமாவைப் பற்றிப் பேசுகிறோம் எனபதும் முக்கியம் பெறுகிறது.

ஆவணப்பட உலகில் முன்னணி யிலுள்ள ஆனந்த் பட்வர்த் தனின் மார்க்சியப் பின்னணியே அவரது படங்களின் கிரியா ஊக்கி யாக இருக்கிறது. அதை அவர் இந்திய நடைமுறை வாழ்வு என்ற யதார்த்ததைக் கொண்டும், அம்பேத்கரீயம், காந்தியம் என்ற லென்சுகளைக் கொண்டும் காட்சிகளாகக் கட்டமைக்கிறார்.

கதிர் வீச்சுக் கதைகள் ஆவணப் படத்தில் அமுதன், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிரானதும், மானுடத்திற்கு எதிர்மறையானதுமான போக்கையும் ஒருசேர இணைத்து லாங் டேக் எனப்படுகிற நீண்ட நேரம் ஓடும் காட்சித் துண்டின் வழியாகக் காண்பிக்கிறார். காண்பியல் மொழி மூலம் கதிர் வீச்சினால் ஏற்படும் அழிவைச் சுட்டி அணு மின் நிலையத் திற்கு எதிரான அரசியலையும் முன்வைக்கிறார்.

கருப்பு வெள்ளைக் கால தமிழ் சினிமாவையும், ஸ்டுடியோக்களில் இருந்த பணிப் பண்பாட்டையும் நீங்கள் ஆய்வுசெய்துவருகிறீர்கள். பெரும் தொழிலாளர் கூட்டத்தின் கூட்டுழைப்பில் உருவாக்கப்பட்ட சினிமா உங்களுக்கு அற்புதமாகத் தெரிகிறதா?

ஆம். அந்தக் கால ஸ்டூடியோ கட்டமைப்பு என்பது நிலப்பிரபுத்துவ மனநிலை சார்ந்த எல்லா ஒடுக்கு முறையையும் கொண்டிருந்தது. தொழில் சார்ந்த நிரந்தரமின்மை தொடரும் சூழலிலும் பல தொழிலா ளர்கள் சினிமாவை நம்பிக் கூட்டாகத் தொழில் புரிந்துள்ளனர். பல இன்னல்களுக்கு நடுவில் தொழில் கற்றுப் பங்காற்றியிருப்பது ஒரு அற்புதம்தான். அமரர் பி.என்.சுந்தரம் அவர்களையே எடுத்துக்கொள்ளுங்கள் விஜயா-வாஹினியில் எலெக்ட்ரிகல் டிபார்ட்மெண்டில் சேர்ந்து உதவி கேமராமேனாக ஆகி, ஆப்ரேடிவ் கேமராமேன், பின்னர் டைரக்டர் ஆப் போட்டொகிராபி என்று வளர்ந்து, பின் இயக்குநரானார்.

தமிழில் பி கிரேட் படங்களை எடுத்த கர்ணன் போன்றவர்களை எந்தப் பின்னணியில் முக்கியமானவர்கள் என்று உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்?

ஒளிப்பதிவாளராகத் தடம்பதித்த கர்ணன் இயக்குநராகப் பணியாற்றிய பொழுது பி பிக்சர் வகைமையைத் தேர்வுசெய்தது சிந்திக்க வேண்டிய விஷயம். செக்ஸூம் வன்முறையும் சிறிய பட்ஜெட் படங்களில் ரசிகர் களை உள்ளிழுக்க ஒரு யுக்தியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் பச்சை யான நேரடித் தன்மைதான் பி பிக்சரின் அழகியல். குறைந்த பட்ஜட்டில் அன்றைய சென்னையின் புறநகரங்களிலும், அருகிலுள்ள குவாரிகளிலும், தடா போன்ற வெளிப் புறங்களிலும் சிக்கனமாகப் படம் எடுத்தார்.

அந்த இடங்களை அவர் வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டு அகலக் காட்சியாக மட்டு மல்லாமல் நெடுநேரம் ஓடக்கூடிய நீள்நேரக் காட்சியாகவும் (லாங் டேக்காகவும்) இப்படங்களின் கட்டமைப்பு இலக்கணத்தை வகுத்திருப்பார். கையில் ஆரிப்ளக்ஸ் காமிராவை எடுத்துக்கொண்டு சுதந்திரமாகப் படு வேகத்தில் ஓடும் வண்டிகளில், துரித ஆக்‌ஷனுக்கு ஈடுகொடுத்து அசாதாரண கோணத்தில் படமெடுத்தவர் அவர். வெளிநாட்டு பி பிக்சர்களிலிருந்து பழைய காட்சிகளை உபயோகிக்கும் அழகியலில் அவருக்கு உடன்பாடிருந்தது.

நீங்கள் படங்கள் எடுக்கத் தொடங்கியபோது இந்தியாவிலும் தமிழகத்திலும் இருந்த சூழல் இப்போது எந்த அளவு மாறியிருக்கிறது?

மைக்ரேஷன்ஸ் ஆஃப் இஸ்லாம் படத்தை எடுக்கும் பொழுதும் பெரிய பட்ஜட் ஏதும் இல்லாமல் சிறிய கேமராவை வைத்து முதல் படம் எடுக்கும் பொழுதிருந்த தட்டுப்பாடுகளுடனும் பதற்றத்துடனும்தான் எடுத்தேன். நான் எடுக்க நினைக்கும் ஆவணப் படங்களை எடுக்க யானையும் ஹெலிகாப்டரும் வேண்டாம். ஆனால் சிறு சௌகரியங்கள் இருந்தால் நல்லது. ஆனால் அது ஒரு கானல் நீர் என்பதை அறிவேன். அத்தகைய சூழலின் இறுக்கம் ஆவணப்படக்காரர்களுக்கு அன்றும் உண்டு இன்றும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x