Published : 17 Dec 2014 10:00 AM
Last Updated : 17 Dec 2014 10:00 AM

இதுதான் அமெரிக்க நியாயம்!

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தவர் களை அமெரிக்காவின் சிஐஏ அமைப்பினர் கடுமையாகச் சித்தரவதை செய்திருப்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியிருக்கிறது. இதை வெளிக்கொண்டுவந்தவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான டயான் ஃபென்ஸ்டைன் என்ற பெண். இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான விசாரணை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றெல்லாம் சொல்லி அமெரிக்கா செய்திருக்கும் மனித உரிமை மீறல்கள் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் ஜனநாயகவாதிகளையும் அதிர வைத்திருக்கிறது.

மனித உரிமைகளை மீறுவது அமெரிக்கச் சட்டப்படி கடுமையான குற்றம். எனவே, இந்த அத்துமீறல்களை அமெரிக்க மண்ணில் மேற்கொள்ளாமல் சிரியா, தாய்லாந்து, போலந்து ஆகிய நாடு களுக்குக் கைதிகளைக் கொண்டுசென்று விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களை அல்லது சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்களை அமெரிக்காவிலேயே வைத்து விசாரிப்பது அவர்களுடைய பாதுகாப்புக்கும் மற்றவர்களுடைய பாது காப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், வேறு நாடுகளில் விசாரித்ததாக சிஐஏவும் அதன் ஆதரவாளர்களும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆதரவாளர்களில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அடக்கம். பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை அறிய அத்தகைய விசாரணை அப்போது அவசியமாக இருந்தது என்று அதற்கு அனுமதி அளித்த முன்னாள் சிஐஏ தலைவர் கூறி யிருக்கிறார். ஆனால், இந்த சித்தரவதைகள் மூலம் எந்தப் புதுத் தகவலும் கிடைத்துவிடவில்லை. ஒசாமா பின் லேடனின் ரகசிய மறைவிடம்குறித்தும் ஏதும் அறிந்துகொள்ள முடியவில்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முகம் கிழிந்து தொங்கும்போது சும்மா இருந்துவிட முடியுமா? அதிபர் பராக் ஒபாமா வருத்தம் தெரிவித்திருக்கிறார். சிஐஏ நிகழ்த்திய மனித உரிமை மீறல் நமக்கெல்லாம் இப்போதுதான் தெரியும். ஒபாமா முன்பே அறிந்திருப்பாரல்லவா? எனில், வருத்தம் என்ற பெயரில் எதற்காக இந்தக் கண்துடைப்பு? இந்த அறிக்கை இவ்வளவு பட்டவர்த்தனமாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்திருந்தாலும் இதற்குக் காரணமான சிஐஏ தலைமை நிர்வாகிகளோ, சித்தரவதை செய்தவர்களோ தண்டனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதே உண்மை. அதை அமெரிக்க அரசு நிர்வாகமும் அனுமதிக்காது. ஆனால், தங்கள் நாட்டு உளவு அமைப்பு இப்படியொரு சட்ட மீறலைச் செய்திருப்பதைத் தாங்களே விசாரித்து உலகுக்கு அறிக்கை அளிப்பது என்பது அமெரிக்காவில் மட்டுமே நடக்கக்கூடிய செயல். இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. இதனால் மட்டுமே அமெரிக்கா ஆசுவாசம் கொண்டுவிட முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியதும், இனிமேல் இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடராமல் பார்த்துக் கொள்வதும்தான் முக்கியம்.

சிஐஏ நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் அம்பலமானது பல கேள்விகளை எழுப்புகிறது. சிஐஏ நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் என்று இந்த விஷயங்கள் முன்வைக்கப்படுவதே ஒரு வகையில் தவறு. சிஐஏ மட்டுமா ஈடுபட்டது? இராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா செய்ததற்கு, செய்துகொண்டிருப்பதற்கு என்ன பெயரிடுவது?

உலக நீதிபதியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இப்போது முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக் கொள்ளப்போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x