Published : 11 Jan 2017 08:44 AM
Last Updated : 11 Jan 2017 08:44 AM

வேலையுறுதித் திட்டத்தை முடக்குகிறதா மோடி அரசு?

இந்தத் திட்டத்துக்காக மாநில அரசுகளுக்கு நேரடியாகச் சென்றுகொண்டிருந்த தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

காத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பொறியாளர்கள், முன் எப்போதையும்விடப் பரபரப்பாக இயங்குகிறார்கள். உலகிலேயே மிக அதிகமான தொழிலாளர்கள் பணிபுரியும் மாபெரும் திட்டத்தை இஸ்ரோவின் ‘புவன்’ செயலி மூலம் சத்தமில்லாமல் மின்னணு மயமாக்கிவருகிறது மோடி அரசு. பணமதிப்பு நீக்கத்துக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இனி ஆண்ட்ராய்டு அலைபேசியின் ‘பீம்’ செயலியில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, ‘புவன்’ செயலியில் உங்கள் கிராமத்தில் நடந்த பணிகளைப் பார்வையிடலாம். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடவே இந்தச் சிறப்பு ஏற்பாடு.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த முனிராஜ் பாட்டியிடம் இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் சொன்னேன். ஆவேசமாகிவிட்டார். “கவுரத பாக்காம கக்கூஸ் வேல செஞ்சிருக்கேன். உறையக் குழியில இறக்கி இறக்கி நெஞ்செல்லாம் வலிக்குது. கூலிப் பணம் வந்து நாலு மாசமாச்சு. ரெண்டொரு நாள்ல பிச்சை எடுத்துடுவனோன்னு பயமா இருக்கு...” என்று அழுகிறார். திருவள்ளூர் அதிகத்தூர் கிராமத்தில், “தீவாளிக்குப் பணம் வரும்னு சொன்னாங்க. பொங்கல் வரப்போகுது. வீட்டுக்கு வெள்ளையடிக்கக் காசில்லய்யா...” என்று கலங்குகிறார்கள்.

பட்டினியில் மாளும் உயிர்கள்

முனிராஜ் பாட்டி பயப்படுவதில் உண்மை இருக்கிறது. பல கிராமங்களிலிருந்து முதியவர்கள் இடம்பெயர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் திணறினாலும் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால், கிராமங்களில் அடித்தட்டு மக்களின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் வேறு சேர்ந்துகொள்ள பட்டினியில் மாள்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 117.8 லட்சம் பேர் இருக்கிறார்கள். செயல்பாட்டில் இருப்பவர்கள் 89.09 லட்சம் பேர். மாற்றுத்திறனாளிகள் 62,161 பேர். பணியாளர்களில் 69% பெண்கள். 28.92% பட்டியல் இனத்தவர். 1.36% பழங்குடியினர். ஒருநாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.203. வேலையின் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரிக் கூலி ரூ.162.17. 2016-2017 நிதியாண்டின் மொத்தச் சம்பளம் 3,56,198.62 லட்சங்கள்.

ஆனால், கடந்த 2016, செப்டம்பரிலிருந்து சம்பளம் வரவில்லை. இந்த நிதி ஆண்டில், மண் வேலை செய்த மக்களுக்கான பாக்கி மட்டும் ரூ 96,565.37 லட்சங்கள். மொத்த பாக்கி 2,95,474.07 லட்சங்கள். மிக அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 23,105.55 லட்சம், விழுப்புரம் மாவட்டத்தில் 21,399.84 லட்சம், வேலூர் மாவட்டத்தில் 15,513.76 லட்சம், கடலூர் மாவட்டத்தில் 14,641.69 லட்சம் ரூபாய் நிலுவை இருக்கிறது. கூலியாட்களுக்கு மட்டுமல்ல, திட்டத்தை நிர்வகிக்கும் ஒன்றிய அளவிலான நிர்வாகக் குழுவினருக்கும் பல்வேறு இடங்களில் கடந்த மாதத்திலிருந்து சம்பளம் வரவில்லை. தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகத்திலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். இங்கெல்லாம் மத்திய அரசு திட்டத்தின் பங்களிப்பான 75 % தொகை கடந்த அக்டோபர் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

கேள்விக்குறியாகும் மாநில உரிமை

இந்தத் திட்டத்துக்காகக் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வரை நேரடியாக மாநில அரசுகளுக்குச் சென்றுகொண்டிருந்த தொகை, தற்போது தேசியப் பணப் பட்டுவாடா கழகத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின், ஒன்றியங்களின், தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுசெய்யப்படுகின்றன. இனி, மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறைக்குப் பணம் வராது. நேரடியாக ஒன்றியங்களுக்குச் செல்லும். அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசே முடிவுசெய்யும். மேலோட்டமாகப் பார்த்தால் நல்லதுதானே என்று தெரியும். அதேசமயம், இது மாநிலங்களின் உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

மின்னணுமயமாக்கல் என்கிற பெயரில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் மீது மோடி அரசு தொடங்கியுள்ள தாக்குதல் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே இத்திட்டத்துக்கான நிதியைக் குறைத்தது. மனித உழைப்பு பிரதானமாக இருந்த திட்டத்தில் இயந்திரங்களைப் புகுத்தியது. மனித உழைப்புக்கான ஊதியம், இயந்திரங்களுக்கான நிதி ஆகியவற்றின் விகிதாச்சாரம் முறையே 60:40 என இருந்ததை 51:49 ஆக மாற்றியது. கூடவே, சம்பள நிலுவையும் அதிகரித்தது. 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசியல் சாசனச் சட்டத்தின் விதிமுறைகள் அனாவசியமாக மீறப்பட்டன. உதாரணமாக, தமிழகத்தில் கடந்த 2012-13 நிதியாண்டில் 15 நாட்களுக்குள் வழங்கப்பட்ட சம்பளம் 99.14%. இது 2013-14-ல் 78.27% ஆகவும், மோடி அரசு வந்த பிறகான 2014-15-ல் 27.43% ஆகவும், 2015-16-ல் 31.97% ஆகவும், 2016-17-ல் 11.71% ஆகவும் குறைந்துபோனது.

கூடுதலாக, பாஜக-வின் ‘தூய்மை இந்தியா’ திட்டப் பணிகளும் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட்டன. தனிநபர் கழிவறைக்காக அரசு ஒதுக்கும் ரூ.12,000-ல் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளரின் ஊதியமாக ரூ.2,300 வழங்கப்படும். மீதம் ரூ.9,700 மானியமாக வழங்கப்படுகின்றன. ஆனால், இன்றைய சூழலில் மேலே நாம் பார்த்த முனிராஜ் பாட்டியைப் போன்றவர்களுக்கு கழிப்பறை கட்டிய கூலி ரூ.2,300-ம் கிடைக்கவில்லை. வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 9,700 மானியமும் கிடைக்கவில்லை.

மேற்கண்ட எல்லாவற்றையும்விட மத்திய அரசுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி இது: மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் என்பது வெறும் திட்டம் அல்ல; அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனச் சட்டம். திட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். திட்டமே குறைபாடானது அல்ல. மாறாக உன்னதமானது. விவசாயிகள், பாட்டாளிகள் பெரும்பான்மையாக வாழும் ஒரு தேசத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் இயற்றப்பட்டது இந்தச் சட்டம். 18 வயது நிரம்பிய ஒருவர் வேலை கேட்டால், 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும் என்று வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க இயற்றப்பட்டது இந்தச் சட்டம். செய்த வேலைக்கான கூலியை அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தர வேண்டும் என்கிற அரசாங்கத்தின் கடமையை உறுதிப்படுத்த இயற்றப்பட்டது இந்தச் சட்டம். ஆனால், கடமையை மீறுவதன் மூலம் அரசியல் சாசனச் சட்டத்தைக் காலில் போட்டு நசுக்குகிறது மோடியின் அரசு. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு!

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x