Last Updated : 26 Aug, 2016 09:08 AM

 

Published : 26 Aug 2016 09:08 AM
Last Updated : 26 Aug 2016 09:08 AM

பிள்ளைகளை அடிமைகள் ஆக்காதீர்கள்!

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தத்தில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம்

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ‘குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல், முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம்- 2016’ மேல் பார்வைக்கு முற்போக்கானதைப் போலத் தோற்றமளிக்கிறது. உயிருக்கு ஆபத்தானதாகவும் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் உள்ள வேலைகளைச் செய்வதிலிருந்து சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரைத் தடைசெய்கிறது. இதில் ‘சிறார்கள்’ என்பது 14 வயதுக்கும் குறைவானவர்களையும், ‘வளரிளம்’ பருவத்தினர் என்பது 14 முதல் 18 வயது வரை உள்ளோரையும் குறிக்கிறது. வளரிளம் பருவத்தினரை வேலைக்கு அமர்த்துவோரையும் வேலைக்கு அனுமதிப்போரையும் தண்டிக்க இச்சட்டம் வழி செய்கிறது.

புதிய சட்டத்தை மிகவும் கவனமாக வாசித்தால் பல குறைகள் தென்படுகின்றன. முதலாவதாக, ஆபத்தான வேலைகளின் எண்ணிக்கையை 83-லிருந்து வெகுவாகக் குறைத்துவிட்டது இச்சட்டம். சுரங்கத் தொழில், வெடிமருந்துகள் உற்பத்தி ஆலை, தொழிற் சாலைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வேலைகள் ஆகிய 3 பிரிவுகளில் பணியாற்றுவதை மட்டும் ஆபத்தானவை என்று இச்சட்டம் தடுக்கிறது. ரசாயனங்களைக் கலக்கும் தொழிலகங்கள், பருத்திப் பண்ணைகள், செங்கல் சூளைகள் போன்றவை உயிருக்கு ஆபத்தானவை என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. உயிருக்குத் தீங்கு விளைவிப்பவை என்று அடையாளம் காணப்பட்டவற்றில்கூட சிலவற்றை நாடாளுமன்றம் அல்ல, அரசு அதிகாரிகளே நீக்கி விலக்கு அளித்துவிடலாம் என்கிறது இச்சட்டத்தின் 4-வது பிரிவு.

ஒரு குடும்பத்துக்குள்ளேயோ, குடும்பங்களாகச் சேர்ந்து செய்யும் தொழில்களிலோ சிறார் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட, சட்டத்தின் உட்கூறு 5-ன் பிரிவு-3 அனுமதிக்கிறது. திரைப்படம், சின்னத்திரை உள்ளிட்ட கேளிக்கைத் துறையில் சிறார்கள் பங்கேற்க அனுமதி அளிக்கிறது. இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலான தொழில்களில்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பக் கடன் சுமை காரணமாக மீள முடியாமல், அடுத்தடுத்த தலைமுறைகளிலும் சிறார் தொழிலாளியாக வேலைசெய்யுமாறு பிணைக்கப்படுகின்றனர். புதிய சட்டத்தில் இத்தகைய சிறார் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் குறிப்பிடப்படவில்லை. ‘பள்ளிக்கூடம் விட்டதும்’ என்றும், ‘விடுமுறை நாட்களில்’ என்றும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

12 வயதாகும் சிறுமி தன்னுடைய தாயார், துணி தைக்கத் தரும் ஒப்பந்ததாரர் கொடுத்த ஏராளமான சட்டைக் காலர்களைத் தைக்க மாலையில் உட்கார்ந்தால் தைத்து முடிப்பதற்குள் பொழுதுகூட விடிந்துவிடும். அதன் பிறகு அந்தக் குழந்தை தூங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டும். மறு நாள் மீண்டும் காலையில் பள்ளிக்குப் புறப்பட்டாக வேண்டும். அப்படிச் செல்வதற்கு அந்தச் சிறுமியின் உடலில் என்ன தெம்பு மிச்சமிருக்கும்?

முந்தைய சட்டங்கள்

நாடு சுதந்திரம் அடைந்தது முதலே சிறார் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்தப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசியல் சட்டத்தின் 24-வது பிரிவு 14 வயதுக்குக் குறைந்த சிறார்களை, தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆபத்து நிறைந்த தொழில்களில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிக்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டத்தின் 45-வது பிரிவு. 2009-ல் குழந்தைகளுக்குக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி அளிப்பதை உறுதி செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், புதிதாக இயற்றப்பட்டிருக்கும் சட்டம் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது.

அபாயகரமான வேலைகள் பட்டியலில் எதைச் சேர்ப்பது, எதை நீக்குவது என்பதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அடையாளம் காட்டப்பட்டுள்ள ஆபத்தான தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை ஈடுபடுத்தவே கூடாது என்றது 1986-ல் இயற்றப்பட்ட சிறார் தொழிலாளர் (தடை செய்தல், முறைப்படுத்தல்) சட்டம். விரிவான விவாதம் மற்றும் விளக்கங்களுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் 83 விதமான பணிகள் சேர்க்கப்பட்டன. 1987-ல் உருவான சிறார் தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கை, 1988-ல் அமலுக்கு வந்தது. சிறார் தொழிலாளர்கள் உருவாகக் காரணங்களாக இருக்கும் சாதி மற்றும் வறுமை ஆகியவற்றைக் குறிவைத்துச் சட்டத்தை உறுதியாகப் பின்பற்றுவது, அப்பிரிவினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துவது என்ற இரட்டை நோக்கில் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உயிருக்கும் உடலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சிறார்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தப்பட்டது. அக்கொள்கையை நிறைவேற்ற ரூ.600 கோடி மதிப்புள்ள நிதியம் உருவாக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மத்திய நிதிநிலை அறிக்கையின்போது கல்விக்கான ஒதுக்கீட்டில் 28%, மகளிர் - குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீட்டில் 50% வெட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 42,000 பள்ளிக்கூடங்கள் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளன. அனைவருக்குமான கல்வித் திட்டம், கல்வியில் மகளிருக்குச் சம உரிமைத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டன. இதன் பின்விளைவாக ஒடிஷா, ஜார்க்கண்ட் போன்ற பழங்குடி மாநிலங்களிலிருந்து ஏராளமான பழங்குடி, சிறுபான்மைச் சமூகப் பெண் குழந்தைகளை வேலைக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவது அதிகரித்திருக்கிறது.

பலன்கள் நழுவுகின்றன

1986-ம் ஆண்டு சட்டத்தில் கிடைத்த பலன்களைப் புதிய திருத்தங்கள் புரட்டிப்போடுவதல்லாமல், 2000-ல் இயற்றப்பட்ட இளம் குற்றவாளிகள் நீதி (நலன், பாதுகாப்பு) சட்டத்துக்கு முரணாகவும் உள்ளன. உயிருக்கு ஆபத்தான தொழிலில் சிறார்களை ஈடுபடுத்துவோர் அல்லது ஈடுபடுத்துவதற்காகக் கொண்டுசெல்வோர் தண்டிக்கப்படக்கூடியவர்கள் என்ற பிரிவு இப்போது அடிபட்டுப்போகிறது. சிறார் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வயது என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) நிர்ணயித்த வரம்புக்கும் இது முரணாக இருக்கிறது. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு எதிராகவும் திருத்தங்கள் அமைந்துள்ளன.

5 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறார்கள் ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது பொருளாதாரம் சார்ந்த வேலையில் ஈடுபட்டால் அல்லது வாரத்தில் 28 மணி நேரம் வேலை செய்தால் அது ‘சிறார் தொழில்’ என்று கருதப்பட வேண்டும் என்று யுனிசெஃப் வரையறுத்திருக்கிறது. அதுவே 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்கள் என்றால் 14 மணி நேரப் பொருளாதார வேலை அல்லது வாரத்துக்கு 42 மணி நேரம் வீட்டிலேயே வேலை செய்ய நேரிட்டால் அது சிறார் தொழிலாகக் கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறது யுனிசெஃப்.

புதிய சிறார் தொழிலாளர் சட்டத்தினால் குழந்தைகளின் உடல் நலனுக்கு நேரிடக்கூடிய சீரழிவானது இந்திய ஏழைகளுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவாக மாறும். யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.3 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்களில் 80% பட்டியல் இனத்தவர், 20% பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். புதிய சட்டத்தால் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து தங்களுடைய குலத்தொழிலிலேயே ஈடுபடுவார்கள்.

இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத் துறைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் சிறார் தொழிலாளர் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக கல்வியில் அதிகம் முதலீடு செய்தும் சீர்திருத்தங்கள் வாயிலாகவும் அவர்களை முன்னேற வைத்து, பிறகு அவர்களுடைய பெற்றோர் உதவியுடன் அத்திறமைகளைக் கற்றுத் தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்!

- ருசிரா குப்தா, சிறார், மகளிர் நலனில் அக்கறை உள்ள செயல்பாட்டாளர்; அமெரிக்கா, ஈரான், கொசாவோ நாடுகளில் யுனிசெஃப் அமைப்பில் பணி செய்தவர்.

தமிழில்: சாரி, © தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x