Last Updated : 03 Jun, 2017 07:54 AM

 

Published : 03 Jun 2017 07:54 AM
Last Updated : 03 Jun 2017 07:54 AM

தந்தை அல்ல; தலைவர்!

பொதுவாழ்வும் அரசியலும் சிலருக்குப் பெருமை. சிலருக்குப் பொழுதுபோக்கு. தலைவருக்கோ மூச்சுக்காற்று! மு.கருணாநிதி எனும் ஆளுமையை ஒரு தந்தையாகப் பார்த்த தருணங்களைக் காட்டிலும், அரசியல் தலைவராகப் பார்த்த தருணங்களே அதிகம். ஏனென்றால், அவர் அப்படித்தான் இருந்தார். ஆகையால், என் மனதில் உறைந்திருக்கிறபடி ஒரு மக்கள் தலைவராக, மக்கள் பிரதிநிதியாகவே அவருடைய இந்த அறுபதாண்டு சட்ட மன்ற நாட்களை நான் நினைவுகூர விழைகிறேன்.

கடும் உழைப்பே வெற்றிக்கான அச்சாரம்!

தலைவர் முதன்முதலாக சட்டமன்றத்தில் அடி எடுத்து வைத்தது, 1957 தேர்தலில் குளித்தலை தொகுதியில் பெற்ற வெற்றியின் மூலம்தான். அப்போது நான் நான்கு வயது சிறுவன். அது மிக மிக மங்கலான நினைவிலேயே இருக்கிறது. அடுத்து 1962 தேர்தலில் தஞ்சாவூரில் அவர் போட்டியிட்ட கடுமையான தேர்தல் களம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. தஞ்சாவூரில் தங்கமுத்து நாடார் என்ற கழகத்தவரின் இல்லத்தில்தான் எங்கள் குடும்பம் தங்கியிருந்து, தலைவரின் தேர்தல் பணிக்கு உதவியாக இருந்தது. தலைவரின் அன்னையும் எனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாளும் உடனிருந்தார். அனல் பறக்கும் பிரச்சாரம். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்குகின்றன.

பெரும் பதற்றம். அப்போது, பரிசுத்தம் நாடார் வெற்றி பெற்றுவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஊர்வலச் செய்தியை அறிந்த பாட்டி, மயக்கமடைந்துவிட்டார். ஆனால், உண்மையான முடிவு தலைவருக்கே சாதகமாக இருந்தது. கடும்போட்டி நிலவிய அந்தத் தேர்தல் களத்தில், கட்சி செல்வாக்கும்-தனிப்பட்ட செல்வாக்கும்-பணபலமும்-ஆளுமையும் மிக்க பரிசுத்தம் நாடாரை வென்று, இரண்டாவது முறையாக சட்டமன்றம் சென்றார்.

திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 15 பேருடன் அது சட்ட சபையில் காலடி வைத்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் 50 பேர் என்று உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், 1957-ல் வென்ற 15 பேரில் பேரறிஞர் அண்ணா உள்பட 14 பேர் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார்கள். முந்தைய தேர்தலில் வென்றவர்களில் மீண்டும் வென்றவர் தலைவர் மட்டும்தான். அப்படிப்பட்ட வரலாற்று வெற்றியை அருகிலிருந்து பார்த்து, மனதில் பதியவைத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. வியூகமும் கடுமையான உழைப்புமே அரசியலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றுணர்ந்த தருணம் அது.

எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பளி!

சின்ன வயதில் அண்ணா படிப்பகம் நாங்கள் சிறுவர்கள் சிலர் நடத்திவந்தோம். அண்ணா பிறந்த நாள் விழாவைத் தெருவில் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். கோபாலபுரத்தில் நாங்கள் இருந்த தெரு அந்நாளில் பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. ஒரு ஆர்வத்தில் என்ன செய்துவிட்டோம் என்றால், அண்ணா பிறந்த நாள் விழா பந்தல் போடும்போது, தெருமுக்கை அடைத்துப் போட்டுவிட்டோம். அது எங்கள் தெருமுக்கில் உள்ள கோயிலை மறைப்பதுபோல அமைந்துவிட்டது. சிறுவர்களான நாங்கள் இதை உணரவில்லை. குடும்ப மருத்துவராக அந்நாளில் இருந்த கிருஷ்ணன் - அவரும் பிராமணர்தான் - மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்து சுவாமியைச் சேவிக்க முடியாமல் செய்துவிட்டான் உங்கள் பிள்ளை என்று தலைவரிடம் சொல்லிவிட்டார். அன்று மாலை விழா மேடையில் பேசுகையில், இதைக் குறிப்பிட்டார் தலைவர். “நேற்று ஸ்டாலின் கனவில் வந்த சாமி, எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காவது கோயிலுக்கு வந்து கும்பிடச் செய்’ என்று சொல்லிதான் இப்படிப் பந்தல் போட்டுவிட்டார் போலும்” என்று ஹாஸ்யமாகப் பேசி இதைச் சமாளித்த தலைவர், இரவு என்னை அழைத்தார். “நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது வேறு; கடவுள் நம்பிக்கை உடையவர்களின் மனதைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வது வேறு. அறியாமைகூட சில சமயங்களில் அலட்சியம் ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்” என்றார்.

எதிர்த் தரப்பு எதிரித் தரப்பு அல்ல!

அரசியல் போட்டியாளர்களை எதிரியாகக் கருதியவர் அல்ல அவர் - மிகுந்த மரியாதையோடு அவர்களை அணுகவும் அவர்களிடமிருந்து கற்கவும்கூட முயன்றிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் மீது அவர் கொண்டிருந்த மரியாதை ஓர் உதாரணம். அப்போது அவர் முதல்வராக இருந்தார். என்னுடைய திருமணத்துக்காக எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைக்க விரும்பிய அவர், காமராஜரையும் சந்தித்து அழைத்தார். பெருந்தலைவர் அவசியம் என் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அச்சமயம் அவர் உடல்நலன் கொஞ்சம் குன்றியிருந்தது. ‘என்ன கஷ்டமாக இருந்தாலும் வந்துவிடுவேன்’ என்று அவர் சொன்னதும், அவர் கஷ்டப்படாமல் திருமணத்துக்கு வர என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்ய முற்பட்டார் தலைவர். பெருந்தலைவரின் கார் நேரடியாக திருமண மேடைக்கே வந்துவிடுவதுபோலத் திட்டமிட்டார். இதற்காக முன்பு தீர்மானித்திருந்த திருமண மண்டபத்தையே மாற்றினார். திட்டமிட்டபடி பெருந்தலைவர் பெரிய சிரமங்களின்றி திருமணத்துக்கு வந்து சென்றார். பெருந்தலைவர் மீது மிகுந்த மரியாதை தலைவருக்கு உண்டு. இந்த மரியாதை என்பது கட்சி வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஆளுமைகளைப் போற்றும் கல்வியைக் கழகத்தாருக்குக் கற்றுக்கொடுத்தது என்று சொல்லலாம்.

ஆயிரம்விளக்கிலிருந்து அறிமுகம்!

1989 தேர்தல் இரு வகைகளில் எனக்கு முக்கியமானது. திமுக 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த தேர்தல் அது. நான் முதன்முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியிலிருந்து சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய கன்னிப் பேச்சின்போது, ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். மிசா சிறைவாசத்தின்போது, காவலர்களின் கடுமையான தாக்குதலிலிருந்து என்னைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த அண்ணன் சிட்டிபாபுவை நினைவுகூர்ந்து, சிறையில் நடந்த அந்த மனித உரிமை மீறலுக்குக் காரணமான சிறைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஒரு முதல்வராக என் பேச்சை அவர் ஆதரித்தபோதும், நடவடிக்கை என்பதை உடனடியாக மேற்கொள்ளவில்லை. இதைக் கட்சி அலுவலகத் திலேயே நான் நேரில் சொல்லியிருக்கலாம் என்று கருதினார். சில விஷயங்களைக் கட்சிக்குள் முதலில் விவாதித்துவிட்டு, பின்னர் சபைக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவை என்ன என்பதை உணர்த்தினார். இருப்பினும், மிசா காலத்து மனித உரிமை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமான விசாரணைக்குப் பின்பு ஆவன செய்தார்.

சட்ட மன்றத்தின் நாயகன்!

ஆளுங்கட்சி வரிசையில் இருந்தபோதிலும் சரி; எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதிலும் சரி; சட்ட சபைக்கு அவர் தயாராக எடுத்துக்கொள்ளும் அக்கறையும் கரிசனமும் அசாதாரணமானவை. ஒரு பள்ளிக்கூட மாணவர் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒப்பானது அது.காலை எழுந்ததும் - ஏனைய கட்சிகளின் பத்திரிகைகள் உள்பட - எல்லாப் பத்திரிகைகளும் வாசித்துவிடுவதில் தொடங்கும் உழைப்பு அது. நள்ளிரவில் படுக்கைக்குச் செல்லும்போது அவர் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். மக்களுடன் இடையறாது உரையாடிக்கொண்டே இருப்பார். நேரில் நூறு பேரையாவது அன்றாடம் சந்தித்துவிடுவார். தன்னை எந்நாளும் ஒரு மாணவனாக அவர் வைத்துக்கொண்டிருந்த இந்தத் துடிப்புதான் அவர் எந்தச் சாரியில் இருந்தாலும், சட்ட சபையில் அவரை ஒரு நட்சத்திரமாகவும், நாயகனாகவும் வைத்திருந்தது. 2006-2011 ஆட்சிக்காலத்தில் துணை முதல்வர் பொறுப்பினை எனக்கு வழங்கியதுடன், நிதிநிலை அறிக்கையில், காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளளித்து என்னைப் பேசச் செய்தது, தலைவர் எனக்கு வழங்கிய அரிய வாய்ப்பு. தற்போது தமிழக மக்களின் பேராதரவு பெற்ற வலிமையான எதிர்க்கட்சியாக திமுக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் செயல்பட்டு வரும் நிலையில், தலைவர் வழிகாட்டுதலில்தான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றும் செயல்பட்டுவருகிறேன். அவருடைய செயல்பாடுகளே என்னைப் போல பலருக்கும் ஆக்கமும் ஊக்கமும்!

பெருமிதத் தருணம்!

இந்திய தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம், ஒரே கட்சி-ஒரே சின்னத்தில் 13 முறை சாதனை வெற்றி, எந்தத் தேர்தலிலும் தோல்வியே காணாத செல்வாக்கு, 5 முறை தமிழக முதல்வர், தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்கள், பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்களிப்பு, திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கையான சமூகநீதியை இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாற்றிய பேராற்றல் எனத் தன்னுடைய சட்ட சபை வைர விழா தருணத்தை இந்திய ஜனநாயக வரலாற்றின் முக்கியமான தருணமாகவும் அவர் மாற்றியது ஒருவகையில் தமிழகத்தின் பெருமை. தமிழரால் அவரும் அவரால் தமிழரும் பெருமை கொள்ளும் தருணம் இது!

- மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x