Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

ஏன் கூடாது மேலவை?

அசாம் மாநிலத்தில் சட்ட மேலவை வேண்டும் என்று அந்த மாநில சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்தைப் பரிசீலித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு, “இது தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளும் பேசி நிலையான ஒரு முடிவை எடுத்தால் நல்லது” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. அது அப்படிக் கூறக் காரணம், எல்லா மாநிலங்களிலும் சட்ட மேலவை இல்லை என்பதுடன், ஒரே மாநிலத்தில் ஒரு கட்சி வேண்டும் என்றும் ஒரு கட்சி வேண்டாம் என்றும் நினைப்பதுதான்.

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று இரு அவைகள் இருக்கின்றன. மாநிலங்களவையை மூத்தோர் அவை என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இதைச் சட்ட மேலவை என்று அழைத்தனர். படித்தவர்களையும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் நிரம்பப் பெற்றவர்களையும் மேலவைக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. மாநில அரசின் நிர்வாகத்தை நடத்திச் செல்ல அனுபவமும் அறிவும் நல்ல நடத்தையும் உள்ள அமைச்சர்கள் வேண்டும். அப்படிப்பட்டவர்களைச் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கக் கட்சிகள் விரும்பினாலும், ஏதோ சில காரணங்களால் நல்ல வேட்பாளர்கள் அனைவருமே வெற்றிபெறுவதில்லை. அத்தகையவர்களைச் சட்டமன்றத்துக்கு அழைத்துவரச் சட்டமே இடம் தருவதுதான் மேலவை.

இப்போது ஆளும் கட்சிக்கோ கூட்டணிக்கோ அசுரபலம் இருக்கும்பட்சத்தில், சில சமயங்களில் விவாதங்களே இல்லாமல்கூட மசோதாக்கள் மின்னல் வேகத்தில் அவையின் ஒப்புதலைப் பெற்று விடுகின்றன. மேலவையிலும் அதே நிலைமைதானே ஏற்படும் என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும், ஒரு சந்தர்ப்பத்திலாவது அங்கே ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறக்கூடும் என்ற நம்பிக்கையும் இழையோடுகிறது.

இப்போதுள்ள நடைமுறையில், சட்டப் பேரவை வேட்பாளர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுக்கும்போது பணக்காரரா, அந்தத் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஜாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவரா என்று மட்டுமே பெரும்பாலும் பார்க்கின்றன. அப்படிச் செல்வந்தராகவும் இல்லாமல், ஜாதி செல்வாக்கும் இல்லாத திறமைசாலிகள் சட்டமன்றத்தில் இடம் பெறவும் அமைச்சர்களாக வாய்ப்பு பெறவும் மேலவை உதவும்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், டாக்டர்கள், பொறியியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், ஆன்மிகச் செம்மல்கள், சமூக சேவகர்கள், அரசு நிர்வாகத்தில் உயர் பதவிவகித்த நிபுணர்கள் போன்றோரின் சேவையைப் பெற மேலவை ஒரு கருவியாகப் பயன்படும். ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பெண்கள், சிறுபான்மைச் சமூகத்தவர்களுக்கு நேரடிப் பிரதிநிதித்துவத்தையும் தர முடியும்.

சட்டப் பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு - அதாவது, தமிழ்நாடாக இருந்தால் 78 - உறுப்பினர்கள் மட்டும்தான் மேலவையில் இடம்பெறுவார்கள். அவர்களுக்காகும் ஊதியம், படிகள் போன்ற செலவுகள் மாநிலத்தின் மொத்தச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. எனவே, பிரிட்டிஷ் காலத்திலிருந்தே செயல்பட்ட, நல்லதொரு அமைப்பை எல்லா மாநிலங்களும் ஏற்பது நன்மையைத் தரும். பேரவை, மேலவை இரண்டும் மாநிலத்தின் அரசியலுக்கும் நிர்வாகத்துக்கும் வலுசேர்க்குமே தவிர, இடையூறாக இருக்காது என்பதும் வரலாறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x