Last Updated : 16 Mar, 2017 09:15 AM

 

Published : 16 Mar 2017 09:15 AM
Last Updated : 16 Mar 2017 09:15 AM

ஏன் புதிய நோக்கியா 3310-க்காக சிலர் காத்திருக்கிறார்கள்?

அறுபது வயதாகும் என் தந்தையிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், அதை அவர் சாதாரண செல்லைப் போல, பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார். அதில் உள்ள 5.5 அங்குல ‘டச் ஸ்கிரீன்’ வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. பயன்படுத்தவும் பராமரிக்கவும் எளிதாக இருந்த ‘அந்தப் பழைய போன்’ கிடைக்காதா என்று ஏக்கத்தோடு கேட்கிறார். அவர் நீண்ட காலம் பயன்படுத்திய ‘நோக்கியா 3310’ மீண்டும் விற்பனைக்கு வருகிறது என்று சொன்னதும் அவருடைய முகத்தில் நிம்மதி தெரிந்தது.

நோக்கியா - 3310 செல்பேசி, சந்தையைப் பல காலம் ஆட்டிப்படைத்த ஒன்று. 17 ஆண்டுகள் என்பது ஒரு சகாப்தம். எனவே, அந்த செல்லை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவரும் ‘எச்எம்டி குளோபல்’ நிறுவனத்தைப் பொறுத்தவரை இது பெரிய சவால். வெவ்வேறு வசதிகளைக் கொண்ட செல்பேசிகளுக்குத் தேவை அதிகமாகிவரும் வேளையில், பழைய வாடிக்கையாளர்கள் ஞாபகார்த்தமாக வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பது ஒருவகையில் சூதாட்டத்தில் பணம் கட்டுவதைப் போல. ஆனால், இந்தியர்களின் எண்ணங்கள் வித்தியாசங்களால் நிறைந்தவை. நவீன செல்போன்கள் அதிகம் வாங்கப்பட்டாலும், இந்தியா இறக்குமதி செய்யும் செல்போன்களில், 59% பேசுவதற்கு மட்டுமான வசதியுள்ள செல்பேசி. கடந்த ஆண்டில் 26.5 கோடி செல்பேசிகள் இறக்குமதியாகின. அவற்றில் 11.6 கோடி மட்டும்தான் திறன்பேசிகள். எல்லோருமே அதிக விலை கொடுத்து வாங்க இயலாதவர்கள் என்று கூறிவிட முடியாது. பேசுவதற்கு மட்டுமான ஒரு நல்ல செல்பேசி போதும் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

நோக்கியா 3310 உறுதியானது, மிகச் சில செயல்பாடுகளை மட்டும் கொண்டது. எனவே, பயன்படுத்தவும் நினைவில் வைக்கவும் பலருக்கும் எளிதாக இருந்தது. “அந்த செல்லில் திரை உடைந்துவிடும், பாக்கெட்டில் வைத்திருக்கும்போது அழுத்தத்தில் யாருக்காவது கால் போய்விடும் என்ற அச்சங்களுக்கு இடமில்லை. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டாம், வாரத்துக்கு ஒரு நாள் சார்ஜ் செய்தால் போதும்” என்று அதன் நன்மைகளைப் பட்டியலிட்டார் என் தந்தை. இன்னும் பலர் அப்படி இருக்கிறார்கள். வாழ்க்கையை முழுக்க ஆக்கிரமித்துவிடாத செல்பேசிகளை விரும்புபவர்கள் அவர்கள்!

இந்தியர்களின் எண்ணங்கள் வித்தியாசங்களால் நிறைந்தவை. பேசுவதற்கு மட்டுமான ஒரு நல்ல செல்பேசி போதும் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x