Published : 14 Apr 2017 11:25 AM
Last Updated : 14 Apr 2017 11:25 AM

அம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்

அம்பேத்கர் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தளங்களில் அவரது புகழ் பேசப்பட்டும் எழுதப்பட்டும் பரப்பட்டும் வருகிறது.

மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மற்றும் இடதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் எடுத்து கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த தினத்தில் அவரை பற்றி பேசுவது எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட வேண்டிய ஒன்று அவர் இறுதி வரை குரல் கொடுத்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலை இன்று எவ்வாறு உள்ளது என்பது குறித்து தான்.

அந்த விவாதத்தையும் அம்பேத்கரில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது, சட்ட மேதையாக அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றியவராக புகழப்பட்டாலும், அவரை ஒரு தலித்தாக பார்த்து அவர் படத்தை கூட மாட்டி வைப்பதில் மிகப் பெரிய தயக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்ததை வரலாற்றின் கருப்பு பக்கங்கள் குறித்து வைத்துள்ளன. ஏன் தமிழ்நாட்டின் ஒரு நீதிமன்றத்தில் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்ற கூறிய ஒரு நீதிபதியின் செயலுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி மீண்டும் அம்பேத்கர் படம் வைக்கப்பட்ட வரலாறும் உண்டு.

அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை கட்டாயம் மாட்ட வேண்டும் என்று திமுக ஆட்சியிலிருந்த போது அரசாணையே வெளியிடப்பட்டது. இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கூட அந்த அரசாணையை முறையாக அமல்படுத்தக் கோரி அருந்ததியர் மக்கள் இயக்கம், ஆதி தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பேத்கர் படத்திற்கான அரசாணை குறித்த விவரங்களை அறிய எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரை தொடர்பு கொண்ட போது “ அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு வலியுறுத்துவது எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு தேவையானது, தலித் மக்களின் பாதுகாப்புக்கான தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அமைப்பது, தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான், இட ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஓரளவு வாய்ப்புகளை உருவாக்கி தந்த திராவிட கட்சிகள் ஆண்ட இங்கே ஒரு ஆணையம் அமைப்பதில் பல்வேறு அரசியல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதை, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நான் நேரில் கண்டிருக்கிறேன்” என்றார். அம்பேத்கர் படத்தை கூட மாட்டுவதற்கு ஒரு இடத்தில் தயக்கம் காட்டப்படுகிறது என்றால் அங்கு ஒடுக்குமுறையும் தீண்டாமையும் நிலவுகிறது என்பது தானே அர்த்தம், படமானாலும் சிலையானாலும் பெரும் தடைகளுக்கு பிறகே அம்பேத்கரை நிலை நிறுத்த முடிகிறது என்றார் ரவிக்குமார்.

அம்பேத்கரின் அரசியல் அறிவும், மொழி ஆளுமையும் மிகவும் நுட்பமானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பெயரை பதிவு செய்யும் போது கூட SCHEDULED CASTE, SCHEDULED TRIBE என்று வார்த்தைகளை கோர்கிறார், அதாவது அரசியலமைப்புச் சட்டப்படி SCHEDULED என்னும் போது பட்டியலிடப்பட்ட மக்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அப்படி பட்டியலிடப்படும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை சார்ந்த வற்றில் பொறுப்பாளராக இந்த நாட்டின் குடியரசு தலைவர் மாறுகிறார். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கான தேசிய தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது அபரிமதமானது(ஆனால் அவற்றை முழுவதுமாக பயன்படுத்துவதுமில்லை, பயன்படுத்துவதற்கான அரசியல் சூழலும் இல்லை). அப்படிபட்ட ஒரு ஆணையத்துக்கான வாய்ப்பை தமிழகம் இத்தனை ஆண்டுகள் மறுத்து வருவது ஏற்புடையதா ? தற்போது தமிழகத்தில் விழித்து பார்த்திரு என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தலித் மக்களின் பாதுகாப்புக்கு என்று ஒரு குழு உள்ளது. மேலும் இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை முதலமைச்சர் தலைமையில் கூடி தலித் மக்களின் நிலை குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த குழுவின் கூட்டம் நடைபெறவில்லை.

தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் அதே வேளையில் சாதி பாகுபாட்டை அழித்தொழித்தல் குறித்த ஒரு தீவிர பிரச்சாரமும் இங்கு முன் எடுக்கப்பட வேண்டும். மேலும் அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக முன் நிறுத்தும் அரசியலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பது தீராத சோகம். அம்பேத்கரின் போராட்டம் முதலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே முன்னுரிமை வழங்கியது. ஏன் அவர் இயற்றிய சட்டங்களும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உரத்து குரல் கொடுத்தது, ஆனால் இன்று அம்பேத்கரை தீவிரமாக எதிர்ப்பவர்களில் பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு சாரார் இருப்பது வரலாற்று வேதனையை ஏற்படுத்துகிறது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் இடையே அதிகரிக்கும் வன்மம், ஆணவக் கொலை, தீண்டாமை என அம்பேத்கரின் கனவுகளை சுக்கு நூறாய் உடைத்து எரியும் சம்பவங்கள் அரங்கேறும் வேளையில் அவரை மீள் வாசிப்பதும், அவர் கருத்துக்களை சமூக எண்ணத்தின் மாற்றத்துக்காக தீவிரமாக பயன்படுத்துவதுமே, இலக்கு நோக்கிய பயணத்துக்கு சரியான திசையை காட்ட முடியும். அதுவரை அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அடையாளமே.

“அடையாளமாய் நில்லாமல் அவசியமாய் மாறட்டும் அண்ணலின் பிறந்த நாள்”.....

தியாகச் செம்மல், தொடர்புக்கு: thiyagachemmel.st@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x