Last Updated : 02 Jun, 2017 09:27 AM

 

Published : 02 Jun 2017 09:27 AM
Last Updated : 02 Jun 2017 09:27 AM

மரங்களின் உரையாடலும் உறவாடலும் தெரியுமா?

தாவரங்களுக்கு உயிருண்டு என்று கண்டுபிடித்தார் ஜகதீஷ் சந்திர போஸ். அந்தத் தாவரங்களில் ஒன்றான மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன, பாலுறவு கொள்கின்றன, தங்களுடைய குழந்தைகளான இளைய மரங்களை அன்போடு வளர்க்கின்றன என்கிறார் ஜெர்மானியரான பீட்டர் ஊலிபென்.

வனக் காப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றி, அவற்றின் உரையாடல்களையும் செயல்களையும் தொடர்ந்து கவனித்த பீட்டர் ஊலிபென் ஒரு புத்தகமே எழுதிவிட்டார். அது ஜெர்மனியில் வேகமாக விற்பனையாகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘ஹே’ நகரப் புத்தகக் கண்காட்சிக்கு (மே 25 - ஜூன் 4) வந்த ஊலிபென், மரங்களைப் பற்றி நேரில் கூற, வந்திருந்த வாசகர் கூட்டம் வாய் மூடாமல் கேட்டு அதிசயித்தது. ‘தி ஹிட்டன் லைஃப் ஆஃப் ட்ரீஸ்’ (The Hidden Life of Trees) என்பது புத்தகத் தலைப்பு.

இந்த நூலில் இருப்பவை அனைத்தும் உண்மையல்ல, பாதி உண்மைகளும் புனைவுகளும் கொண்டவை. இதைப் படிப்பவர் மனங்களைக் குழப்பக்கூடியவை’ என்று இரு விஞ்ஞானிகள் ‘ஆன்லைனில்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

அப்படி என்ன பேசினார்..

“மரங்கள் தனித்து வாழ விரும்பாதவை.. சமூகமாகவே வாழ விரும்புபவை. தங்களுடைய இளைய மரங்களைப் பாசத்தோடு வளர்க்கின்றன. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. வலிகளை உணர்கின்றன. நினைவாற்றலும் அவற்றுக்கு இருக்கின்றன. தங்களுக்குள் பாலுறவும் கொள்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கழிவுகளை வெளியேற்றுகின்றன.

வெளியேற்ற வேண்டிய கழிவுகளைத் தங்களுடைய இலைகளுக்கு அனுப்பி விடுகின்றன. குளிர்காலத்தில் காட்டில் நடந்தால் நீங்கள் மிதிக்கும் இலைகள், மரங்களின் ‘டாய்லெட் பேப்பர்’ என்பதை இனி நினைவில் கொள்ளுங்கள்.

இதை எல்லாம் கேட்டதும் ஓடிச் சென்று மரங்களைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதா, செய்யுங்கள். ஆனால், எல்லா மரங்களும் தழுவல்களை விரும்புவதில்லை. பீச் மரத்தைத் தழுவலாம், பிர்ச் மரத்தைத் தழுவக் கூடாது.

மரங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தவறாகவே நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது, நாம் காடுகளைப் புதுப்பிக்கிறோம் என்று தவறாக வழிகாட்டப்பட்டது. பெரிய மரங்களை வெட்டினால் சிறிய மரங்கள் கிளைவிட்டு வளர உதவும் என்று கூறப்பட்டது. வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் பெற்றோர்களைக் கொன்றுவிட வேண்டுமா? அப்போதுதான் குழந்தைகள் ஓடியாட அதிக இடம் கிடைக்கும் என்பது உண்மையா?

மரங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். தெரு விளக்குகளுக்கு அடுத்துள்ள மரங்கள் இரவு முழுவதும் அந்த அனலில் வெந்து, வெகு சீக்கிரம் இறந்துவிடுகின்றன. நுனி மரங்களை வெட்டினால் மரம் கப்பும் கிளையுமாகப் படர்ந்து வளரும் என்பதும் தவறு. அது கைவிரல்களை வெட்டுவதற்குச் சமம். மரங்களில் 3 சென்டி மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக ஏற்படும் எந்தக் காயமும் அதில் ஒரு பூஞ்சையைப் படரவைத்து 10 அல்லது 20 வருடங்களுக்குள்ளாகவே அதை வீழ்த்திவிடும்.’’

ஆப்பிரிக்காவில் ‘அகாசியா’ ரக மரங்களை ஒட்டகச் சிவிங்கிகள் நெருங்கி, அதன் துளிர் இலைகளைச் சாப்பிடத் தொடங்கியதும் அது ஒருவித ரசாயனத்தை வாசனையாக வெளியிடுகிறது. அதே ரகத்தைச் சேர்ந்த பிற மரங்கள் உடனே ஆபத்தை உணர்ந்து விஷச் சத்துள்ள ரசாயனத்தைச் சுரந்து ஒட்டகச் சிவிங்கிகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஓக் மரங்கள் 600 வார்த்தைகளைப் பேசுவதாக எழுதியிருக்கிறேன். அவை அனைத்தும் ரசாயன மொழியாகும்!” என்கிறார் பீட்டர்.

சுருக்கமாகத் தமிழில்: ஜூரி







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x