Last Updated : 19 Aug, 2016 08:58 AM

 

Published : 19 Aug 2016 08:58 AM
Last Updated : 19 Aug 2016 08:58 AM

கண்டதேவி முதல் கள்ளிமேடு வரை

கோயில் திருவிழாக்களில் சம மரியாதை கோரும் தலித்துகளின் கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேறுவதேயில்லை

வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபடவும், ஆடித் திருவிழாவின்போது இக்கோயிலில் சடங்குகள் நடத்தவும் தலித்துகளுக்கு அனுமதியளிப்பது தமிழக அரசின் தார்மிகக் கடமை, சட்டரீதியான கட்டாயம் என்று கூறியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அடுத்த ஆண்டாவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருவிழா நடக்கும் வகையில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

800 ஆண்டு பழமையான தலத்தில் கட்டப்பட்டது இக்கோயில். காளமேகப் புலவர் இத்தலத்தைப் பற்றி ஒரு பாடல் இயற்றியிருக்கிறார். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோயிலில், 1957-ல் கடைசியாகப் பெரிய அளவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்களுக்கு இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போலவே இங்கும் விழாவின் குறிப்பிட்ட நாட்களில் இடைநிலைச் சாதியினர் மண்டகப்படி நடத்துவது வழக்கம். உள்ளூர் தலித் மக்கள் திருவிழாவில் கலந்துகொண்டாலும், மண்டகப்படி நடத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை.

கள்ளிமேடு கிராமத்தில் பிள்ளைமார்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அருகில் உள்ள பழங்கள்ளிமேடு எனும் பகுதியில் தலித்துகள் வாழ்கிறார்கள். இரண்டு சமூகங்களிலும் தலா 150 குடும்பங்கள் உள்ளன. இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் கோயில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, கோயில் மண்டகப்படி உரிமையைத் தலித்துகள் கோரிவருகிறார்கள். இக்கோரிக்கைக்குப் பிள்ளைமார் சமூகத்தினர் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள். 2015 ஆகஸ்ட்டில், பழங்கள்ளிமேடு ஊர்த் தலைவர் என்.பக்கிரிசாமி, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலித் மக்கள் வசிக்கும் பகுதியின் வழியே சாமி சிலை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது அந்த மனுவில் இடம்பெற்ற கோரிக்கைகளில் ஒன்று. “மனுதாரரைப் பாரபட்சமாக நடத்த முடியாது” என்று முதல் கட்டத்திலேயே குறிப்பிட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், வழக்கைத் தள்ளிவைத்தார்.

இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து, முஸ்லிம் மதத்துக்கு மாறப்போவதாக மிரட்டல் விடுத்தனர் தலித் மக்கள். இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் மீண்டும் கவனத்துக்கு வந்தது. தலித்துகளுக்குத் தார்மிக ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பு, மத மாற்றம் என்பது ஒரு போராட்ட வடிவமாக அல்லாமல், இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. இந்தச் சூழலில் பாஜக சும்மா இருக்குமா? அதன் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அப்பகுதிக்குச் சென்று பேசினார். மதமாற்ற அறிவிப்பைக் கைவிட்டால், தலித்துகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று இந்துத்வா மூத்த சித்தாந்தவாதி ஒருவர் வாக்குறுதி அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் அப்பகுதிக்கு விரைந்தது. அதைத் தொடர்ந்து ஓர் அமைச்சரும் சென்றார். ‘பேச்சுவார்த்தை’ என்று சொல்லப்பட்டாலும், நடந்தது நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நெருக்குதல் என்பதே உண்மை. உரிமை, நியாயம் என்ற அடிப்படையில் அல்லாமல், சமாதானம், சலுகை என்ற முறையிலேயே அந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது. திருவிழாவின் ஆறாவது நாளில், திருவிழா ஏறத்தாழ முடியும் நிலையில், தலித்துகள் மண்டகப்படி நடத்திக்கொள்ளலாம் என்பது போன்ற சலுகைகள் அந்தப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டன. இதை தலித்துகள் ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து, திருவிழாவுக்குத் தடை விதித்தது அரசு நிர்வாகம். இதற்கு எதிராகப் பிள்ளைமார் சமூகத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சொன்ன வார்த்தைகள்தான் கட்டுரையின் தொடக்கமாக அமைந்துள்ளன.

துயர வரலாறு

கோயில் திருவிழாக்களில் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று தலித்துகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்திருக்கின்றன. தலித்துகளைப் பொறுத்தவரை, இந்தத் துயர வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

1997-ல் சிவகங்கை மாவட்டத்தின் கண்டதேவி பகுதியில் உள்ள ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழாவில் தங்களுக்கு முழு உரிமை வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர்கள் கோரினர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது கே.கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி. கோயில் திருவிழாவில் தலித்துகள் முழுமையாகப் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1998 ஜூலை 6-ல் உத்தரவிட்டது. ஆனால், அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

2005 ஜூனில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மனு தாக்கல் செய்தார். கண்டதேவி கோயிலின் தேர் வடம் இழுக்கவும், கோயில் திருவிழாவில் முழுமையாகப் பங்கேற்கவும் தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுவது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவை மீறுவதாகும் என்று நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கூறியது. அதற்கு முந்தைய ஆண்டு தலித்துகள் பெயரளவில் கலந்துகொண்டதைக் குறிப்பிட்ட டிவிஷன் பெஞ்ச், அவர்கள் முழுமையாகப் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதன் விளைவாக, 2005-ல் நடந்த கோயில் திருவிழா வில், பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அரசியல் சாசன உரிமைகளை நிலைநாட்டத்தான் இந்த நடவடிக்கை என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு. நூற்றுக்கணக்கான தலித்துகள் சுற்றிவளைக்கப்பட்டார்கள். தேர் இழுக்கும் நிகழ்ச்சி முன்னதாகவே தொடங்கி, 45 நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ளப்பட்டது. 26 தலித்துகள்தான் தேர் வடத்தைத் தொட முடிந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தேர்த் திருவிழா நடத்தப்படவில்லை.

2014-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. உள்ளூரில் பெரும்பான்மையாக உள்ள நாட்டாருக்குத் திருவிழாவில் முதல் மரியாதை கிடையாது என்பதை மீண்டும் உறுதிசெய்த நீதிபதி, சாதி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, தேர் இழுக்கும் நிகழ்ச்சி இல்லாமலேயே கோயில் திருவிழாவை நடத்தியது மாவட்ட நிர்வாகம். தேரைப் பழுது பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் காரணம் சொல்லப்பட்டது! இன்னமும் தேரைப் பழுதுபார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியின் செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்குத் திருவிழா நடத்தப்படுகிறது. 1996-ல் இத்திருவிழாவில் மண்டகப்படி நடத்த தேவேந்திர குல வேளாளர் உரிமை கோரினர். முன்னதாக, 1995 ஆகஸ்ட்டில் நிகழ்ந்த கொடியன்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்தன. இந்நிலையில், மண்டகப்படி கோரும் கோரிக்கையும் வன்முறையிலேயே முடிவடைந்தது. அதற்குப் பின்னர், அங்கு தேர்த் திருவிழா நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளையருக்கு எதிராக வீரபாண்டியக் கட்டபொம் மனின் படைத் தளபதியாகப் போரிட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் ஒன் றுக்கு வைக்கப்பட்டபோது பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வீரன் சுந்தரலிங்கன் பெயர் பொறித்த பஸ்கள் தாக்கப்பட்டன; தேவர் சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களுக்குள் பஸ் நுழைய முடியவில்லை. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை பெயர்களும் நீக்கப்பட்டன, திருவள்ளுவரின் பெயர் உட்பட!

சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுக்கும் உரிமையைத் தலித்துகள் கேட்டதைத் தொடர்ந்து முரண்பாடு தோன்றியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தச் சடங்கை நடத்திக்கொள்ள தலித்துகள் இணங்கினார்கள்.

மனசாட்சியின் மவுனம்

இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுப் போக்கை அவதானிக்கலாம்.

முதலாவதாக, சமூக வெளியில் தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட தலித்துகள் விரும்புகிறார்கள். அதை உள்ளூர் ஆதிக்க சாதியினர் ஏற்க மறுக்கிறார்கள். உள்ளூரில் இருக்கும் செல்வாக்கு மற்றும் அரசியல் சூழலைப் பொறுத்து, அவர்களது கோரிக்கை முடக்கப்படுகிறது அல்லது பிரச்சினை வெடிக்கிறது. தலித் தரப்புக்குத் தலைமையேற்பவர்கள் சாதுரியமாக இருக்கும்பட்சத்தில், உள்ளூருக்கு வெளியிலும் தங்களுக்கான ஆதரவை நாடி, ஏதேனும் ஒரு தலித் கட்சியின் ஆதரவைப் பெற முயல்கிறார்கள். கவனத்தைக் கவர, மதம் மாறப்போவதாக அச்சுறுத்துகிறார்கள். இந்த மிரட்டலை, உள்ளூர் ஆதிக்க சாதியினர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால், தங்கள் பிரச்சினை முடிந்துவிட்டது என்றும் ஆசுவாசமடைகிறார்கள். ஆனால், தங்கள் மதத்தின் வலுவைத் தக்க வைக்க விரும்பும் சக்திகளுக்குத் தலித்துகளின் மிரட்டல் அதிர்ச்சியைத் தருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் சட்டரீதியான தலையீடுகள் நிகழும்போது, நீதிமன்றங்கள் சட்டத்தை நிலைநாட்டும் பணியைச் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவது நிர்வாகத்தைப் பொறுத்தது. ஆனால், அரசு நிர்வாகமும், அதன் அரசியல் எஜமானர்களும் (எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி) அதை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்துவதே இல்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பற்றிய அச்சத்தை வெளிப் படுத்துவது நீதிமன்றத்தை மௌனமாக்கப் போதுமானது. கிளர்ந்தெழும் தலித்துகளுக்குப் பாடத்தைப் புகட்டுவது, அரசியல் சாசன உரிமையை நிலைநாட்டுவதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுவது ஆகிய இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளத் தடியடியும் துப்பாக்கிச்சூடும் பயன்படுகின்றன. இப்படியான தருணங்களில் ‘தலித் ஆதரவு கட்சி’ என்ற முத்திரை தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மெளனம் காக்கின்றன.

இதுபோன்ற அப்பட்டமான சட்ட மீறல், பொதுமக்களின், இந்திய மக்கள்தொகையில் 80%-க்கும் அதிகமாக உள்ள இந்துச் சமூகத்தின் மனசாட்சியைத் தொந்தரவு செய்வதேயில்லை. கண்டதேவி முதலும் அல்ல; கள்ளிமேடு கடைசி நிகழ்வாக இருக்கப்போவதும் அல்ல!

- ஜெ.பாலசுப்பிரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி (வரலாற்றாய்வாளர்கள்)

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x