Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

ஷெரீஃப் சொல்வதை நம்பலாமா?

பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் மீண்டும் பதவிக்கு வந்தது முதல் சமாதானம், ஸ்திரத்தன்மை நிலவ வேண்டியதன் அவசியம்குறித்த உபதேசங்களும், ‘பாகிஸ்தானுக்குக் கழுத்து நரம்பு போன்றது காஷ்மீர் பிரச்சினை’ என்ற வீராவேசக் கனல் கக்கும் அறைகூவல்களும் மாறிமாறி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அரங்கிலாகட்டும், வெள்ளை மாளிகையிலாகட்டும் “இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான முக்கியப் பிரச்சினையே காஷ்மீர் விவகாரம்தான்” என்று புளித்துப்போன அதே பல்லவியைத்தான் பாடுகிறார் நவாஸ் ஷெரீஃப். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குத் திருப்தி ஏற்படும் விதத்தில் இந்தியா தீர்வுகாணாவிட்டால், அணு ஆயுதப் போர் மூளும் வாய்ப்பையும் ஒதுக்கித் தள்ள முடியாது என்று பயமுறுத்திப் பார்க்கிறார்.

தான் அரற்றுவது போதாது என்று தீவிர வாதி ஹஃபீஸ் முகம்மது சய்யீதையும் விஷம் கக்க வைக்கிறார். காஷ்மீர் பற்றி மட்டுமல்லாது இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்கு ஓடிவரும் நதிகளின் நீரையும் இந்தியா தேக்கிவைத்துக்கொள்ளப் பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டச் செய்கிறார். இந்தியா தாக்குமானால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை தங்களுக்கு ஏற்படும் என்று பாகிஸ்தானிய ராணுவமும் அவரது வழியொற்றியே கூறிவருகிறது.

195 மீறல்கள்

இந்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் நவாஸ் ஷெரீஃப்புக்காக இப்போதும் வக்காலத்து வாங்கும் அதிகாரிகள், “நவாஸ் ஷெரீஃப் மனம் மாறிவிட்டார், இந்தியாவுடன் சமாதானத்தையும் ஒற்றுமையையும் மட்டுமே அவர் விரும்புகிறார்” என்று கூறுகின்றனர்.

ஷெரீஃப் பிரதமராகப் பதவிக்கு வந்த நாள் முதல், இதுவரையில் 195 முறை போர் நிறுத்தம் மீறப்பட்டிருக்கிறது. ஜம்மு பகுதியில் இந்திய ராணுவ அதிகாரிகள் தங்குமிடம் மீது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர், காஷ்மீர் மாநிலத்தின் வேறு பகுதிகளில் இந்திய ராணுவ ஜவான்களைத் திடீரென்று தாக்கிக் கொன்று, அவர்களுடைய தலைகளை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் திட்டங்களோடு விஷமிகள் ஊடுருவியபடியே இருக்கின்றனர்.

“ஊடுருவல் நடந்தது” என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை முதலில் சொல்லவைத்து, பிறகு “இல்லை” என்று கூறவைத்து, “ஊடுருவியது ராணுவம் அல்ல மற்றவர்கள்” என்று கூறவைத்து, அவரைத் தடுமாற வைத்ததுடன், பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தப் பாவங்களில் தொடர்பே இல்லை என்பதைப் போல நம்பவைக்க முயன்றுள்ளனர். இப்படிச் செய்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தங்களுடைய மதிப்பைத்தான் குலைத்துக்கொள்கின்றனர்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தான் இரு நாட்டுத் தலைவர்களும் நியூயார்க்கில் சந்தித்தபோது, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகில் பதற்றத்தை உடனே தணிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.

வாகா எல்லைப் பேச்சு

இந்தக் குழுக்களுக்கு சிவில் நிர்வாக அதிகாரிகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று கூறி, இந்த யோசனைக்கு முட்டுக்கட்டை போட பாகிஸ்தான் ராணுவத் தலைமை முயன்றது.

நியூயார்க்கில் முடிவுசெய்தபடி, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் தலைமையில் தான் சந்தித்துப் பேச வேண்டும் என்று இந்தியா உறுதியாகத் தெரிவித்ததற்குப் பிறகு, பாகிஸ்தான் இணங்கிவர நேரிட்டது. வாகா எல்லையில் இருதரப்பு ராணுவத் தலைமை இயக்குநர்களும் சந்தித்துப் பேசியதன் பிறகு, சில பலன்கள் ஏற்பட்டன.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு உரிய மரியாதையை அளிப்பது, சண்டையை நிறுத்துவது என்ற முடிவைத் தொடர்ந்து அமல்படுத்துவது என்ற முக்கிய முடிவுகளைக் கூட்டறிக்கையில் இடம்பெறச் செய்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தலைமை இயக்குநர்களுக்கு இடையிலான நேரடித் தொலைபேசி இணைப்பை (ஹாட்-லைன்) மேலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைதியைப் பராமரிக்க, பிரிகேட் தளபதிகள் தலைமையில் இரு கூட்டங்களை நடத்துவதென்றும் அப்போது ஒப்புக்கொண்டனர்.

இதற்குப் பிறகு, இந்திய எல்லைப் பாது காப்புப் படைத் தளபதியும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் என்ற படைப் பிரிவின் தளபதியும் சந்தித்துப் பேசினர். இரு தரப்பினரிடையேயும் இப்போது உள்ள தகவல்தொடர்புகளை முழுமையாகப் பயன்படுத்துவது, எல்லைக்கு அருகில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றிவிடுவது என்று ஒப்புக்கொண்டனர்.

கால்நடைகளை மேய்க்கும்போதோ, சுள்ளி - விறகு போன்றவற்றைச் சேகரிக்கும்போதோ நில எல்லை தெரியாமல், சர்வதேச எல்லையைக் கடந்துவிடும் அப்பாவிகளைச் சிறையில் அடைக்காமல், உரிய விசாரணை களுக்குப் பிறகு, அவரவர் நாட்டுக்கே திரும்பிப்போக அனுமதிப்பது என்ற முக்கிய முடிவையும் எடுத்துள்ளனர்.

எதுவும் மாறவில்லை

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் அஷ்ஃபக் பர்வேஸ் கயானி பதவியிலிருந்து போனதால்தான், இந்த மாற்றங்கள் சாத்தியமாயின என்று சிலர் பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல. ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் தலிபன்கள் அல்லது லஷ்கர்-இ-தொய்பா ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவுடனும் ஆப்கானிஸ் தானுடனும் உள்ள எல்லையில் மோதல்களைத் தூண்டிவிடுவது என்ற தங்களுடைய நீண்டகாலத் திட்டங்களில் மாறுதல்கள் எதையும் பாகிஸ்தான் ராணுவம் செய்துவிடவில்லை.

ஆப்கானிஸ்தான் எல்லையில், பழங்குடிப் பகுதிகளில் செயல்படும் ‘தேரிக் - இ - தலிபன் பாகிஸ்தான்’ (டி.டி.பி.) என்ற அமைப்புக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்பது தொடர்பாக ராணுவத்துக்கும் அரசியல் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ‘தேரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்புக்கு எதிராக ராணுவம் பலத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தேரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லமி ஆகிய இஸ்லாமியக் கட்சிகள் தரப்பிலிருந்து நெருக்குதல் தரப்படுகிறது. இம்ரான் கானின் தேரிக்-இ-இன்சாஃப் கட்சி பக்டூன்க்வா என்ற பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது.

ஆனால் ராணுவமோ, வடக்கு வசீரிஸ்தான் பகுதியில், ‘தேரிக்-இ-தலிபன் பாகிஸ்தான்’ அமைப்புக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கி யிருக்கிறது. இந்தப் பகுதிதான் ஹக்கானி தலைமையிலான தீவிரவாத எதிர்ப்புப் படைகளின் முக்கியக் களமாகும். இங்கிருந்துதான் ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள ‘நேட்டோ’ படைகளுக்கும் ஆப்கானிஸ்தானிய ராணுவத்துக்கும் எதிரான தாக்குதல்களை ‘ஹக்கானி அமைப்பு’ நடத்துகிறது. (ஜலாலுதீன் ஹக்கானி, சிராஜுதீன் ஹக்கானி ஆகியோர் ஏற்படுத்திவைத்த அமைப்பே ஹக்கானி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.)

டி.டி.பி. அமைப்பின் தலைவர் ஹகீமுல்லா மசூத், அமெரிக்காவின் ‘டுரோன்’ தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்குப் பிறகு, மௌலானா பஸ்லுல்லா அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இவர் ஹகீமுல்லாவைவிடத் தீவிரமானவர். டி.டி.பி-க்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கைகளைத் தொடங்கியதைப்போலத் தென் பட்டாலும், ராணுவத்துக்கும் ஹக்கானி அமைப்புக்கும் இடையே பேரம் நடந்திருப்பதைப்போலத் தெரிகிறது. அதாவது, இந்த நடவடிக்கைகள் மேம்போக்காக இருக்கும், ஹக்கானி ஏற்படுத்தி வைத்த அமைப்பு சீர்குலைக்கப்பட மாட்டாது என்பதே அது என்று தோன்றுகிறது.

இப்படி நாடுகளுக்குள் ஒப்பந்தம், தீவிரவாத அமைப்புகளுக்குள் ஒப்பந்தம், ராணுவத்துக்கும் தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் என்று போய்க்கொண்டே இருப்பதால், டியூரண்ட் வகுத்த எல்லைக்கோட்டைக் கட்டிக்காப்பது என்பது மிகவும் சவாலான வேலையாகத் திகழ்கிறது.

வட-மேற்கு எல்லைப் பகுதியில் தனக்குப் பிரச்சினைகள் குறைய வேண்டும் என்பதற்காக, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைப் புனிதம் கெடாமல் பார்த்துக்கொள்ள பாகிஸ்தான் முற்படக் கூடும். அதேசமயம், தன்னுடைய பிரச்சினைகள் குறைந்தால் மீண்டும் எல்லைப்புறத்தில் தீவிரவாதிகளை உசுப்பிவிடவும் அவர்களுக்கு ஊக்குவிப்புகள் தரவும் அது முனையும்.

எனவே, இந்தியா சமாதானம், போர் என்ற இரண்டுக்குமே தயாராக இருக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு எல்லைக்கோடு

இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை களுக்கான இயக்குநர்களின் சந்திப்பு முடிந்துவிட்டது. இனியாவது கட்டுப் பாட்டு எல்லைக்கோட்டை மதித்து நடக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

கார்கில் பகுதியில் இந்திய எல்லையை ஆக்கிரமிக்க முயன்று, இந்திய ராணுவம் தந்த பதிலடியால் நிலைகுலைந்த நவாஸ் ஷெரீஃப், 1999 ஜூலை 4-ம் தேதி அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை வெள்ளை மாளிகையில் ஓடோடிச் சென்று சந்தித்தார்; “எப்படியாவது கார்கில் போரிலிருந்து எங்கள் நாட்டைக் காப்பாற்றினால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து நடப்பேன்” என்று வாக்குறுதி அளித்தார். கார்கில் போரில் பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கான பழியைச் சுமப்பது யார் என்பதில் அப்போதைய பாகிஸ்தானிய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பர்வீஸ் முஷாரப்புக்கும் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் இடையில் பெரிய மோதல்கூட ஏற்பட்டது.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் புனிதத்தை நவாஸ் ஷெரீஃப் காப்பாற்றுவார் என்று எதைக்கொண்டு நம்புவது?

இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவிக்குவந்தபோது, துணிச்சல் அதிகம் பெற்று ஹஃபீஸ் முகம்மது சய்யீதுக்கு அதிக மரியாதையைக் கொடுத்ததுடன் இந்தியாவிலிருந்து தீர்த்த யாத்திரைக்கு வரும் சீக்கியர்களைத் தூண்டிவிட ‘பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி’ என்ற அமைப்பை ஜெனரல் நாசிர் என்பவர் தலைமையில் ஏற்படுத்தினார். பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பஸ்ஸில் யாத்திரையாகச் சென்ற பிறகு, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலங்களில் காலிஸ்தான் கொடிகளைப் பறக்கவிட்டனர்.

இப்போதும் சீக்கியர்கள் புனித யாத்திரைக்காக பாகிஸ்தான் வரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பின் நோக்கத்தை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். மீண்டும் சீக்கியர்களைத் தூண்டிவிடவும் பிரிவினை எண்ணத்தை அவர்களிடம் வளர்க்கவும் பாகிஸ்தான் மண்ணில் முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடும்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில் பாகிஸ்தானுடனான உறவில் காத்திருப்பது, கவனிப்பது என்ற இரு முக்கியச் செயல்களை மேற்கொண்டால் போதும். பயங்கரவாதச் செயல்களை நிறுத்துவது, ஊடுருவலைத் தடுப்பது, வர்த்தக - பொருளாதார உறவுகளைப் பெருக்குவது, மக்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பை ஊக்குவிப்பது ஆகியவற்றை மட்டும் இரு நாடுகளும் செய்துவந்தால் போதும்!

கட்டுரை ஆசிரியர் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர்., பிசினஸ் லைன், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x