Published : 24 Mar 2015 08:30 AM
Last Updated : 24 Mar 2015 08:30 AM

சமகாலப் பேரவலம்!

தேர்வுகளும் மதிப்பெண்களும் இந்தியக் கல்வித் துறையையும் நம்முடைய பெற்றோர்களையும் எப்படியெல்லாம் ஆட்டு விக்கின்ற ன என்பதை முகத்தில் அடித்துச் சொல்கிறது பிஹார் சம்பவம். மனார் வித்யா நிகேதன் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெற்றோர்களும் நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு விடைகளை உள்ளே வீசும் படம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிடப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன, இந்தச் சம்பவத்தை பிஹார் அரசும் சமூகமும் எதிர்கொள்ளும் விதம்.

பிஹார் கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹியின் வார்த்தைகளில் எவ்வளவு பொறுப்பற்றத்தனம்! “14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாநில அரசுக்கு இருக்கும் வசதிக்கு இந்த அளவுக்குத்தான் தேர்வுக்கூடங்களில் காவலையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க முடியும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்தான் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் ஷாஹி. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் பாட்னா உயர் நீதிமன்றம், அமைச்சரின் பேச்சை வெட்கக்கேடு என்று சாடியிருக்கிறது. வெட்கக்கேடுதான்! கூடவே, அசிங்கங்கள் எந்த அளவுக்கு நமக்குப் பழகிவிட்டன என்பதையும் ஷாஹியின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன.

தேர்ச்சி ஒன்றே குறிக்கோள்; மதிப்பெண்களே மாணவர்களின் இறுதி இலக்கு எனும் எண்ணம் இந்தியப் பள்ளிகளில் தொடங்கி, எல்லா வீடுகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது. இதற்காக எந்த விலையையும் கொடுக்க எல்லோருமே தயாராக இருக்கின்றனர். இதற்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு ஓசூர் சம்பவத்தையே உதாரணமாகச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வு வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பிப் பிடிபட்டிருக்கின்றனர் ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இதுதொடர்பாக, ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களுக்கு அளிப்பதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது கல்வித் துறையினருக்குத் தெரியும்.

தேர்வு அறைகளில் பெற்றோர்களும் மாணவர்களின் நண்பர்களும் அத்துமீறி உள்ளே நுழைவது, தடுக்கும் ஆசிரியர்களை அடித்து உதைப்பது, காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களே பணம் வாங்கிக் கொண்டு ‘பிட்டு’களை உள்ளே சென்று கொடுப்பது, இன்னும் பல இடங்களில் பள்ளிகளே நேரடியாக விடைகளைத் தருவது, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது சவாலான காரியம் என்று அமைச்சர் பேசுவது… இவையெல்லாம் எதன் வெளிப்பாடு என்றால், அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் அசிங்கம் என்று துளியும் உறைக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. அரசாங்கம் தன்னுடைய பொறுப்புகளில் தரமான கல்விக்கு எந்த அளவுக்குக் கவனம் அளிக்கிறது என்பதன் வெளிப்பாடு. பிஹார் சம்பவம் குறித்து நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின், தேர்வுகளில் பிட் அடித்ததாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைதுசெய்து, ரூ.15 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது பிஹார் அரசு. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இத்தனை நாட்கள் ஏன் உறைக்கவில்லை?

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை முழுமையாக இந்த விவகாரத்தில் குற்றவாளியாக்க முடியாது என்றாலும், இந்தக் குற்றக் கலாச்சாரத்தின் பின்னணியில் அவருக்கும் ஒருவிதத்தில் பங்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு ஆரோக்கிய சமூகத்துக்கான கட்டுமானம் கல்வியையே அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்படுகிறது. நல்ல நிர்வாகத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட கல்வித் துறை வீழ்ச்சி கண்ணிலேயே படாதது சமகாலத்தின் பேரவலம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x