Last Updated : 17 Mar, 2014 12:00 AM

 

Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

இணையத்தின் வெள்ளி விழா

சுவிட்சர்லாந்தை இயங்குமிடமாகக் கொண்ட இயற்பியல் கழகம் செர்ன், அவ்வப்போது செய்திகளில் அடிபடும். அண்மையில் ‘கடவுள் துகள்’ ஆராய்ச்சி நிகழ்ந்தது அங்கேதான். ஒரு தலைமுறைக்கு முன் இணையத்துக்கு அடிக்கல் நடப்பட்டதும் அந்தக் கழகத்தில்தான். 1989 மார்ச் 12-ம் தேதி செர்ன் ஆராய்ச்சியாளாரான டிம் பெர்னர்ஸ் லீ கணினிகளை வலைப்பின்னலில் இணைத்துத் தகவல் பகிர்ந்துகொள்வதுபற்றிய ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த நாளே இணையத்தின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆக, இணையத்துக்கு இப்போது வயது 25. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன், அதன் அடிப்படையான கணினி வலைப்பின்னலைப் பற்றிக் கொஞ்சம் கதைக்கலாம்.

ஆதிக் கணினிகள்

இனியாக் இன்னோரன்ன ஆதி காலத்துக் கணினிகள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவை. ஒரே கூரைக்குக் கீழே இருந்தாலும், இரண்டு கணினிகள் தகவல் பரிமாற்றம் நடத்த வேண்டும் என்றால், அதற்கு மனித உதவி தேவைப்பட்டது. ஒரு கணினியிலிருந்து மின்காந்த நாடாவில் பிரதி எடுத்து, இன்னொன்றில் அதை உள்ளிட வேண்டிய கட்டாயம். இந்தத் துன்பம் தீரச் சீக்கிரமே வழி பிறந்தது. அந்தத் தீர்வின் பெயர் ஈதர்நெட். ஒவ்வொரு கணினியிலும் இந்த ஈதர்நெட் பலகையைப் பொருத்தி, ஒரே இடத்திலே இருக்கும் கணினிகள் தகவல் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தது 1960-களின் தொடக்கத்தில். இது லோக்கல் ஏரியா நெட்ஒர்க் என்று அழைக்கப்படும்.

அர்ப்பாநெட்தான் அம்மாநெட்

இந்த உள்ளூர் வலைப்பின்னல்கள் பிரதேச எல்லை கடந்து இணைந்தது அடுத்த கட்ட வலைப்பின்னல். 1960-ல் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் முயற்சியால், நான்கு பல்கலைக்கழகக் கணினிகளின் ஒருங்கிணைந்த வலைப்பின்னல் உருவானது. அர்ப்பாநெட் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. இன்றைய இன்டர்நெட்டின் அம்மாநெட் இந்த அர்ப்பாநெட்தான். அடுத்த 20 ஆண்டு காலத்தில் அர்ப்பாநெட்டையும் கடந்து கணினி வலைப்பின்னல் பிரம்மாண்டமாக வளர்ந்தது. கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிக்கு என்று தொடங்கிய வலைப்பின்னல் வணிகம், தனிநபர் செய்திப் பரிமாற்றம் என்று இந்தக் காலகட்டத்தில் எல்லைகளை விரிவாக்கியது. இயக்கு மென்பொருளான ஆபரேட்டிங் சிஸ்டம், வன்பொருளான கணினி ஹார்ட்வேர் இவற்றின் அடிப்படையில் முழுக்க வேறுபட்ட கணினிகளை இணைக்கும்போது சிக்கல்கள் உருவாகும். அவற்றைக் கையாள ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை டிம் பெர்னர்ஸ் லீ தன் ஆய்வறிக்கையில் சொல்லியிருந்தார்.

தகவல் பாக்கெட்டுகள்

இணையத்தில் தகவல் சின்னச்சின்னத் துணுக்குகளாக உடைக்கப்படும். இதை பாக்கெட் (packet) என்று சொல்வார்கள். ஒவ்வொரு தகவலும் பாக்கெட்களாக உடைந்து, வழியிலே ஏகப்பட்ட கணினி இணைப்புகள் மூலமாகப் புகுந்து புறப்பட்டு, சேருமிடத்தைச் சரியாகப் போய்ச்சேரும். அதுவும் நொடிகளில். டி.சி.பி-ஐ.பி. போன்ற நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகள் இதற்காக உருவாக்கப்பட்டன.

கோடிக் கணக்கான கணினிகள் இணைந்த இணையத்தில் நம் மேஜைக் கணினியையோ மடிக்கணினியையோ சேர்ப்பது எளிது. ஒரு தொலைபேசி இணைப்பு, கணினிக்கு உள்ளேயோ வெளியேவோ தனியாக மோடம், ஈதர்நெட் ஆகிய பாகங்கள் போதும். பேசப் பயன்படுத்தும் வேகம் குறைந்த தொலைபேசி இணைப்பைவிட அதிவேக அகன்ற அலைக்கற்றை இணைப்பு இருந்தால் நல்லது. இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் இவற்றைப் பெற்று ஜோதியில் கலந்துவிடலாம்.

தோற்றங்கள் பல

தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படை இலக்கை இணையப் பெருவெள்ளம் புரட்டிப் போட, இன்றைய இணையத்துக்குப் பல தோற்றங்கள், பல பயன்கள். இணையம் மூலம் தொலைபேசித் தொடர்புக்கும், இணைய வானொலிக்கும் காணொளியான வீடியோ ஓடையாக ஒளி-ஒலி இணைப்புக்கும், தனி அஞ்சலுக்கும், பாதுகாப்பான வணிக அஞ்சலுக்குமான ஊடகமானது அது. எளிய கணினியை வைத்துக்கொண்டு இணைய வெளியில் இணைந்து அங்கே உள்ள சக்தி வாய்ந்த கணினிகளில் கடினமான பணிகளை முடிக்கவும் இணையம் வழிசெய்யும்.

இணையத்துக்கு இத்தனை முகம் இருந்தாலும், ‘வேர்ல்ட்வைட் வெப்’தான் (www) மிகப் பிரபலமான திருமுகம். இது ரத்தினச் சுருக்கமாக வெப் என்று அழைக்கப்படுகிறது. வெப்பைப் பயன்படுத்தி எந்த விஷயம்குறித்தும் உலகில் எங்கெங்கோ இருக்கும் கணினிகளில் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும் தகவல்களை நம் கணினியில் பெறலாம். தகவல் தரும் கணினியின் தகவல்தள முகவரி மட்டும் தெரிந்தால் போதும். இதை ‘யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர்’ சுருக்கமாக யூ.ஆர்.எல். என்று அழைப்பது வழக்கம்.

நம்முடைய ‘தி இந்து’ தமிழ் பத்திரிகை படிக்க வேண்டும் என்றால், www.tamil.thehindu.com என்ற முகவரியை நம் கணினியில் உள்ள எக்ஸ்ப்ளோரர், கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் போன்ற இணைய மேய்வானில் தட்டச்சு செய்தால் போதும், பத்திரிகையின் டிஜிட்டல் பிரதி உடனடியாகப் படிக்கக் கிடைக்கும். யூ.ஆர்.எல். தெரியாவிட்டாலும் கவலை இல்லை. கூகுள் தேடுதளங்களுக்குப் போய், என்ன மாதிரியான தகவல் வேண்டும் என்று குத்துமதிப்பாக நம் கணினி விசைப்பலகையில் தட்டினால் போதும், இங்கே இங்கே கிடைக்கும் என்று பத்து விநாடியில் விவரம் கிட்டும். இலவசச் சேவை. தேவையான எழுத்துரு இருந்தால், தமிழிலும் தேடலை நடத்தலாம்.

மின்னஞ்சல்

இணையம் என்றதும் வேறு என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டால், பலரும் சொல்வது - மின்னஞ்சல். மதுரையில் உள்ள ஒரு கணினியை உபயோகிப்பவர் நியூயார்க்கில் இருக்கும் ஒரு நண்பருக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்றால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டு அனுப்பும் அதே அடிப்படைதான் இங்கும். காகிதக் கடிதத்தில் நகரசபை தரும் வீட்டு முகவரி, ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் இன்ன பிற. இணையம் மூலம் அனுப்பும் மின்னஞ்சலில், பெறுகிறவரின் முகவரி மட்டும் போதும். கூகுள், யாஹூ போன்ற மின்னஞ்சல் சேவையாளர்கள் விண்ணப்பிக்கிறவர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி கொடுத்து இப்படி முகவரி உள்ளவர்களின் கடிதப் போக்குவரத்தைச் சில கிகாபைட்டுகள் தம் கணினி அமைப்பில் இலவசமாகச் சேர்த்துவைக்கவும் வழிசெய்கிறார்கள்.

இணையத்தின் மிகச் சமீபத்திய, ஆனாலும் வெகுவாகப் பயன்படும் சேவை - சமூகவலையான சோஷல் நெட்வொர்க். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இந்தத் தளங்களில் கோடிக் கணக்கான மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுத்து, ஒலி, காணொளி என்று சகலமானதையும் பகிர்ந்துகொண்டு மகிழ்கிறார்கள்.

கணினி அறிந்த இந்த, போன தலைமுறையினர் தினசரி ஒரு மணி நேரமாவது இணையத்தில் செலவிடுவதாகவும், அதில் பாதி நேரத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களில் சஞ்சரிப்பதாகவும் சொல்லலாம். எல்லாப் பயனாளர்களும் கவலைப்படும் ஒரே விஷயம், குழந்தைகளைப் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த இணையத்தைச் சமூக விரோதிகள் பயன்படுத்துவதை. கேள்வி கேட்பாடே இல்லாமல் அவர்களை ஆயுள் சிறையில் அடைக்கலாம்.

- இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x