Last Updated : 24 Jan, 2017 09:02 AM

 

Published : 24 Jan 2017 09:02 AM
Last Updated : 24 Jan 2017 09:02 AM

கியூபாவிடமிருந்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்!

கியூபாவின் ஆரம்ப சுகாதார சேவைகள் உலகுக்கே முன்மாதிரி

மனித உரிமைகளின் களத்தில் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் சித்தாந்தத் தோல்விகள் உள்ளன. குடிமை மற்றும் பொருளாதார உரிமைகளைக் கியூபா மறுத்தது. சமூக - அரசியல் உரிமைகளான அடிப்படை உரிமைகளை அமெரிக்கா மறுத்தது. ஆனால், அத்தகைய உரிமைகளை அனைத்து மக்களுக்கும் கியூபா வழங்கியுள்ளது. அனைத்து உரிமைகளும் மொத்தமாகக் கிடைத்தால்தான் அவற்றுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்கும்!

கியூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்குப் பின் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. அவர் தனது நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார், என்னவெல்லாம் செய்யவில்லை என்பதை நிறையப் பேசுகிறார்கள். அவரை வாழ்நாள் முழுவதும் எதிரியாகப் பார்த்த அமெரிக்கா, உண்மையில் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அமெரிக்கா மட்டும் அல்ல; முன்னேறிய, முன்னேறும் நாடுகள் பலவும்கூடக் கற்றுக்கொள்ள வேண்டியவை.

உணவுப் பாதுகாப்பு, எழுத்தறிவு, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் கியூபா எவ்வாறு தனது வெற்றியைச் சாதித்தது என்பதை உலகம் கவனிக்க வேண்டும். இவை அமெரிக்காவில் உரிமைகளாகக் கருதப்படாதவை. அமெரிக்க உரிமைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை. என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவில் ஒரே ஒரு உரிமை இருக்கிறது. ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை. பொறுத்துக்கொள்ள முடியாத அளவு பலரின் மரணத்துக்குக் காரணமான உரிமை.

கியூபாவின் லட்சிய வடிவம்

இனிமேலும் கியூபாவை நமது எதிரியின் பிரதிநிதி என்று அமெரிக்கர்கள் சொல்ல முடியாது. உரிமை என்றால் என்ன என்று இப்போதாவது அமெரிக்கா கருத்து சொல்ல வேண்டும். கியூபா வழங்கியுள்ள உரிமைகளில் ‘பெரியண்ணன்’ கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லையா என்பதையும் சொல்ல வேண்டும்.

1990-களில் ஜனநாயகத்துக்கு மாறிய தென் ஆப்பிரிக்கா, கியூபாவுக்குக் கடமைப்பட்ட நாடு. ஜனநாயகரீதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அதன் அதிபர் நெல்சன் மண்டேலா, தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக 1994-ல் கியூபா சென்றதற்குக் காரணம் உண்டு. 1980-களில் அங்கோலாவிலும் நமீபியாவிலும் தென் ஆப்பிரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸுக்கு கியூபா தனது படை வீரர்களை அனுப்பி உதவியது அதற்குக் காரணம் அல்ல. தென் ஆப்பிரிக்காவுக்கு கியூபா தனது மருத்துவர்களை அனுப்பி, மருத்துவமனைகளை அமைத்து, மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கிச் சேவை செய்ததும் காரணம் அல்ல. அடிப்படையான உரிமைகளை கியூபா தனது மக்களுக்கு வழங்குவதில் கொண்டிருந்த உறுதி, தென் ஆப்பிரிக்காவின் எதிர்காலத்துக்கான ஒரு லட்சிய வடிவமாக இருந்ததே அந்தக் காரணம். மண்டேலாவும் அவரது தோழர்களும் அனைத்துத் தென் ஆப்பிரிக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடிய உரிமைகள் அவை. காஸ்ட்ரோ அந்த உரிமைகளின் மீது அடக்குமுறையை ஏவியதை ஆப்பிரிக்கர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

முற்போக்கான சாசனம்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்கா ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கியது. அது உலகின் முற்போக்கான சாசனங்களில் ஒன்று. ஒவ்வொரு தென் ஆப்பிரிக்கரின் கண்ணியம் பற்றி அதன் முகவுரை பேசுகிறது. மனிதரின் கண்ணியத்தில் நம்பிக்கை இருந்தால், அனைத்துக் குடிமக்களுக்கும் பல்வேறுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் கண்ணியத்தோடு வாழ்வதை அது உறுதிப்படுத்தும். அதில் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. குடியிருப்பு, வேலை, நலவாழ்வுக்கான உரிமைகளும் அதில் உள்ளன. நாட்டின் 11 அதிகாரபூர்வ மொழிகளில் ஏதாவது ஒன்றில் கல்வி, அடிப்படை உரிமைகளோடு முரண்படாத அளவுக்குப் பாரம்பரியச் சட்டங்களை வைத்துக்கொள்ளும் உரிமை ஆகியவையும் உண்டு.

இந்த உரிமைகளுக்கு அரசியல் பலம் உண்டு. இந்த உரிமைகளை வழங்குவதில் போதுமான முயற்சி எடுக்கத் தவறியதற்காக அரசியல் சாசன நீதிமன்றத்தின் முன்பாகத் தென்னாப்பிரிக்க அரசாங்கம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. 1999-ல் முதல் முறை. நாடு முழுவதும் மோசமான சூழலில் வாழும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் அரசு தவறியது. போதுமான அளவில் மருந்துகளை வழங்க முடியாதபோது, 2002-ல் இரண்டாம் முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகையில் 20% பேர் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இது உலக அளவில் அதிகமான சதவீதம்.

அமெரிக்காவை மிஞ்சிய கல்வி முறை

இதற்கு நல்ல விளைவு கிடைத்தது. அரசாங்கம் பல லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டியது. மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்பட்டன. அங்கே பிரச்சினைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. வீடுகள் கட்டப்படுவதே ஒரு உதாரணம்தான். புதைசாக்கடை போன்ற அடிப்படையான கட்டமைப்புகள்கூட இல்லாமல் வீடுகள் கட்டப்படுகின்றன. நான்கு கான்கிரீட் சுவர்களை மட்டும் வைத்து வேறு எதுவும் இல்லாமல் முடித்துவிடுகிறார்கள் என்கிறார்கள். ஆனாலும், வீடுகள் கட்டப்படுகின்றன. மலிவு விலை மருந்துகள் விநியோகம் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் தற்போதைய கவலை நீதித் துறையின் தன்னாட்சி தொடர்பிலானது. ஊழல்களின் மீது கவனம் செலுத்தாதவர்கள் அங்கே நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவை விடச் சின்ன நாடாக கியூபா இருந்தாலும், அடிப்படை உரிமைகளை வழங்குவதில் அதைவிட முன்னேறியிருக்கிறது. குறைந்த பணம் செலவிட்டாலும், புறக்கணிப்பு களும் இருக்கின்றன. என்றாலும் கியூபாவின் ஆரம்ப சுகாதார சேவைகள் உலகுக்கே முன்மாதிரியானவை. கியூபாவின் பள்ளிக்கல்வி அமைப்பு முறை அமெரிக்காவை மிஞ்சியிருக்கிறது.

பேச்சுரிமையே முக்கிய உரிமை

மனிதர்களை ஆரோக்கியமாக மாற்றுவது ஒரு மனித உரிமைப் பிரச்சினை. அது அனைவருக்கும் கட்டாயமாகக் கிடைக்க வேண்டியது. ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் நடைபெறும் நாகரிகம் இல்லாத அரசியல் சண்டையின் ஒரு ஆயுதமாக நலவாழ்வு பற்றிய பிரச்சினையை அமெரிக்கா நடத்துகிறது. அமெரிக்காவில் பேச்சுரிமையைத் தாண்டிய முக்கியமான உரிமை எதுவும் கிடையாது. வாக்குரிமையில் இன்றும் இரண்டு கருத்துகள் உள்ளன. அமெரிக்காவின் அதிபராக இருந்த லின்டன் பி ஜான்சன் இருந்தபோது வாக்குரிமைகளுக்கான சட்டத்தில் அவர் கையெழுத்து போடுவதற்குக் கறுப்பின மக்கள் மார்ட்டின் லூதர் தலைமையில், 54 மைல்களுக்கு அமைதிக்கான பாத யாத்திரை நடத்த வேண்டியிருந்தது. அந்தச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதற்காக அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்த ஜனநாயகக் கட்சியின் ஆதரவுத் தளத்தை அவர் இழக்க வேண்டியிருந்தது. இன்றும் அவை குடியரசுக் கட்சியின் ஆதரவுக் களங்களாக இருக்கின்றன.

மனித உரிமைகளின் களத்தில் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் சித்தாந்தத் தோல்விகள் உள்ளன. குடிமை மற்றும் பொருளாதார உரிமைகளைக் கியூபா மறுத்தது. சமூக - அரசியல் உரிமைகளான அடிப்படை உரிமைகளை அமெரிக்கா மறுத்தது. ஆனால், அத்தகைய உரிமைகளை அனைத்து மக்களுக்கும் கியூபா வழங்கியுள்ளது. அனைத்து உரிமைகளும் மொத்தமாகக் கிடைத்தால்தான் அவற்றுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்கும். பேசவும் வாக்களிக்கவும் உரிமை வேண்டும்தான். அதே நேரத்தில் வேலை, மருத்துவர், நல்ல பள்ளி ஆகியவையும் வேண்டும். அவை என் நாட்டில் போதுமானதாக இல்லை. எனது நாட்டில் உள்ள பலருக்கு காஸ்ட்ரோவின் நடவடிக்கைகளில் தெளிவு இல்லை. அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள உரிமைகள் 18-ம் நூற்றாண்டின் சுதந்திரம், வளர்ச்சி பற்றிய கருத்துகளிலிருந்து வந்தவை. அவை நூற்றாண்டு பழமையாகி, காலாவதியாகிவிட்டன. நாம் மாற்றி யோசிக்க வேண்டும். கியூபாவும் காஸ்ட்ரோவும் அதற்கான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறார்கள்!

டேனியல் ஹெர்விட்ஸ், அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம் | தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x