Last Updated : 04 Jan, 2017 11:03 AM

 

Published : 04 Jan 2017 11:03 AM
Last Updated : 04 Jan 2017 11:03 AM

உத்தரப் பிரதேசத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக சுவாரசியமானதாகியிருக்கிறது. முதலாவதாக, அம்மாநிலத்தில் 2007 தேர்தல் முதல் ஏதேனும் ஒரு கட்சிக்கு மக்கள் பெரும்பான்மை அளித்துவருகிறார்கள் அதாவது, அந்தக் கட்சியே முழுப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்; கூட்டணிக் கட்சிகளிடம் பொறுப்பை மாற்றிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில். எனவே, வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மையுடனான வெற்றியைக் கட்சிகள் எதிர்பார்க்கின்றன. இரண்டாவதாக, பலம் வாய்ந்த இரண்டு பிராந்தியக் கட்சிகளுடன் (சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்) இரண்டு தேசியக் கட்சிகளும் உத்தரப் பிரதேசத் தேர்தல் களத்தில் நிற்கின்றன. மூன்றாவதாக, எல்லாக் கட்சிகளிலுமே உட்கட்சிக் குழப்பம் முக்கியப் பிரச்சினையாகத் தலையெடுத்திருக்கிறது.

தனது மகனும் உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவையும், தனது தம்பியான ராம்கோபால் யாதவையும் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கிவைத்தது கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, இது உண்மையான மோதல்தானா அல்லது தனது மகனின் பிம்பத்தை வளர்த்தெடுக்க முலாயம் சிங்கால் ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற குழப்பம்கூடப் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்படியும் இது அக்கட்சிக்கே மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

பாஜக குழப்பம்

பகுஜன் சமாஜ் கட்சியிலும் இதேபோன்ற குழப்பங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ஸ்வாமி பிரசாத் மெளரியா (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்), ஆர்.கே.சவுத்ரி (பாஸி - தலித்), பிரஜேஷ் பாடக் (பிராமணர்) உள்ளிட்ட மூத்த, நம்பிக்கைக்குரிய தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேற நேர்ந்தது. இன்னும் புகைச்சல் நீடிக்கிறது. இது கட்சிக்கு நன்மை பயப்பதாக இல்லை.

பாஜக தனது உயர் சாதி பிம்பத்தையும், நகர்ப்புற நடுத்தர வர்க்க வணிகர்களை மையமாகக் கொண்ட பிம்பத்தையும் தவிர்த்து, அனைத்துத் தரப்பினருக்குமான கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. ஆனால், அப்படியான ஒரு தோற்றத்தை உருவாக்குவதுகூட உத்தரப் பிரதேசத்தில் அத்தனை எளிதல்ல. அக்கட்சிக்குள் இருக்கும் உயர் சாதி ஆதிக்கம் அப்படி. உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் அக்கட்சி காட்டும் தயக்கத்தின் பின்னணியிலும் இதன் தாக்கம் உண்டு.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளராக டெல்லியிலிருந்து ஷீலா தீட்சித்தைக் கொண்டுவந்ததும் பலனளிக்கவில்லை. தேர்தல் வியூக வகுப்பாளராகப் பிரஷாந்த் கிஷோரை நியமித்ததும் பலன் தரவில்லை. பிரஷாந்த் கிஷோரைக் கொண்டுவந்தது ரீட்டா பகுகுணா ஜோஷி போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேற வழிவகுத்துவிட்டது.

மாறும் சமூகக் கணக்குகள்

கட்சிகள், வழக்கமான தங்கள் ஆதரவுத் தளங்களில் வியூகங்களை மாற்றுகின்றனர். தலித் - பிராமணக் கூட்டணி என்பதிலிருந்து தலித் - முஸ்லிம் கூட்டணியாகத் தனது சமூகக் கட்டமைப்பை மாற்றும் முயற்சியில் மாயாவதி இறங்கியிருக்கிறார். இதற்கு, மாயாவதி பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக தலைவர் தயாசங்கர் சிங்கின் மனைவி, மகள் பற்றி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நசீமுதீன் சித்திக் தரக்குறைவாக விமர்சித்தது; கடந்த 10 ஆண்டுகளில் தலித் சமூகத்திடம் தனது செல்வாக்கை பகுஜன் சமாஜ் கட்சி இழந்தது; சமூக வாழ்வில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பொதுவான பல அம்சங்கள் இருப்பது ஆகியவை காரணங்களாக அமைந்தன.

பாஜகவும் முழுமையான மாற்றத்துக்குத் தன்னைத் தயார்படுத்திவருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் மாற்றங்களில் இறங்கியிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவராக கேஷவ் பிரசாத் மெளரியாவை நியமித்ததுடன், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறிய ஸ்வாமி பிரசாத் மெளரியாவையும் அது கட்சியில் சேர்த்துக்கொண்டது.

இவர்கள் இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அப்னா தளம் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டதுடன், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனுப்ரியா படேலுக்கு மோடி அரசில் அமைச்சர் பதவியும் தந்தது.

உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப் பட்டோருக் கான முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் பாஜகவின் முயற்சிகள் கைகூடிவருகின்றன. ஏனெனில், பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விஷயத்தை முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி புறக்கணித்தது. யாதவர்களை மையமாகக் கொண்ட கட்சியாகவே தன்னைக் குறுக்கிக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய சமூகக் குழுக்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாநில மக்கள்தொகையில் 41% ஆக இருக்கின்றனர். இந்நிலையில், சமாஜ்வாதிக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால், வரவிருக்கும் தேர்தலில் அது பாஜகவுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும்.

காங்கிரஸுக்குத் தெரியவில்லை

சமீபத்தில், பிற்படுத்தப்பட்ட 17 துணை சாதிகளைப் பட்டியல் வகுப்புக்கு மாற்றுவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரைத்திருப்பதன் மூலம், தனக்கான புதிய ஆதரவாளர்களை உருவாக்கிக்கொள்ள சமாஜ்வாதி கட்சி முயன்றது. ஆனால், இது தாமதமான அணுகுமுறை என்பது மட்டுமல்ல, பெரும்பாலான துணைச் சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளின் கீழ் அல்லாமல், பழங்குடிப் பிரிவின் கீழ் வருபவை. அத்துடன், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம்தான் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும். எனவே, அதை வைத்துக்கொண்டு சமாஜ்வாதி கட்சி எந்த அரசியல் ஆதாயத்தையும் அறுவடை செய்யப்போவதில்லை.

ஒரு காலத்தில் தனது ஆதரவாளர்களாக இருந்த சமூகக் குழுக்களை, குறிப்பாக தலித்துகளையும் முஸ்லிம்களையும் சென்றடைவது எப்படி என்று காங்கிரஸுக்குத் தெரியவில்லை. இருப்பினும், சில வாரங்களுக்கு முன்னர் 'கிஸான் யாத்ரா', 'கட்டில் சபை' போன்ற முயற்சி கள் மூலம் ஏழை மக்களையும் விவசாயிகளையும் சென்றடைய முயற்சி மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடன் தள்ளுபடி யும், மின்சார மானியமும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். 1989 முதல் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலேயே காங்கிரஸ் இல்லாத நிலையில், அவரது வாக்குறுதிகளை வாக்காளர்கள் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

வெளியில் தெரியாத போட்டி

முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் அதிகாரத்தையே சார்ந்திருக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்குள் மோசமான பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றால், சமாஜ்வாதி தலைமைக்கும், முலாயம் சிங் யாதவின் சொத்துகளுக்கும் அவரே வாரிசாவார்.

பாஜகவில் வெவ்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பலர் முதல்வர் வேட்பாளராக விரும்பும் சூழலிலும், அந்தப் போட்டி இன்னும் வெளியில் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதான முகமாக, பிரதமர் நரேந்திர மோடி இருக்கும்பட்சத்தில், தேவைப்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் யாரேனும் ஒருவரை முதல்வராக முன்னிறுத்துவது சுலபமாக இருக்கும். பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளைப் பொறுத்தவரை இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை மாயாவதிதான் தன்னிகரற்ற தலைவர். இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சி கணக்கிலேயே இல்லை!

பணமதிப்பு நீக்கம் என்ன செய்யும்?

கடைசியாக, பணமதிப்பு நீக்கம், வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள். பணமதிப்பு நீக்கம் தொடர்பாக, பாஜக பதற்றத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. நடக்கவிருக்கும் தேர்தலைத் தனது அரசின் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகளுக்கான வாக்கெடுப்பாக முன்வைப்பதை விடவும், பணமதிப்பு நீக்கத்தையே முன்வைக்க அகிலேஷ் யாதவ் விரும்புகிறார். ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் மகாராஷ்டிரா, குஜராத், சண்டிகரில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள், இதுபோன்ற அபாயம் உள்ள நடவடிக்கைகளை எடுப்பதை அங்கீகரித்திருக்கின்றன எனலாம். அகிலேஷ் யாதவின் தோல்விகள் மீது எல்லாக் கட்சிகளும் கவனம் செலுத்தும் சூழலில், தனது தூய்மையான பிம்பம், வளர்ச்சி அடிப்படையிலான அரசியல் மூலம் அவற்றை அவர் எதிர்கொள்ளலாம். மேலும், சமாஜ்வாதி கட்சிக்குள் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் மோதல்களை வைத்து மக்களிடம் தனக்கு அனுதாபம் தேடிக்கொள்ளலாம்.

எனவே, உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் களம் தெளிவாகிவருகிறது. பல்வேறு பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் வேகமான மாற்றங்கள் நடந்துவருகின்றன. எனினும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியான பின்னர், கட்சிகள் தங்கள் வியூகங்கள், தந்திரங்களை எப்படிச் செழுமைப்படுத்திக்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும்!

- ஏ.கே.வர்மா,இயக்குநர், சமூக, அரசியல் ஆய்வு மையம், கான்பூர்.

© 'தி இந்து' (ஆங்கிலம்) | தமிழில்: வெ.சந்திரமோகன்









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x