Published : 16 Oct 2014 09:41 AM
Last Updated : 16 Oct 2014 09:41 AM

எல்லோருக்கும் உணவு எப்போது?

இன்று உலக உணவு தினம்

இன்று உலக உணவு நாள். உலகின் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

உலகில் மொத்தம் 246 நாடுகள் உள்ளன. உலகின் மொத்த மக்கள்தொகை 732 கோடி. சீனா (138), இந்தியா (126) ஆகியவற்றில் மட்டும் 264 கோடி (36.1%). சீனத்தின் மொத்த நிலப்பரப்பு 9.59 மில்லியன் சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 140. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 3.29 மில்லியன் சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 360.

உற்ற மக்கள்தொகை

மக்கள்தொகைக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. பணக்கார நாடுகளில் மக்கள்தொகை அதிகமிருப்பதால் பாதிப்பு இல்லை. ஏழை நாடுகளில் மக்கள்தொகையும் அதிகமாக இருந்தால் பின்தங்கிய நிலைமை அதிகரித்துவிடுகிறது. அனைத்து நாடுகளும் ‘உற்ற மக்கள்தொகை’ கொள்கையைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

உற்ற மக்கள்தொகை என்பது, குறிப்பிட்ட அளவு மக்களுக்குத் தேவையான அனைத் தையும் உற்பத்திசெய்துகொள்ளும் வகையில் நில அளவு இருக்க வேண்டிய விகிதாச்சாரம். மக்கள்தொகையும், அவர்களுக்குத் தேவையான உணவுதானியங்களை விளைவிக்கும் நிலப் பரப்பும் சம விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும்.

ஒரு நாட்டில் உணவு உற்பத்திக் குறைவு என்றால் மக்கள்தொகை அதிகம் என்று கொள்ளலாம். உணவு உற்பத்தி உபரி என்றால் மக்கள்தொகை குறைவு என்று கொள்ளலாம். அதே சமயம் எண்ணெய்வள நாடுகளில் மக்கள் தொகை அதிகம், உணவுதானிய உற்பத்தி குறைவு என்றாலும் இறக்குமதி மூலம் தேவை பூர்த்தி செய்யப்படுவதால் பாதிப்பு இல்லை.

உலகம் முழுவதையுமே ஒரே நாடாகக் கொண்டு, உற்பத்தியாகும் அனைத்து மூல வளங்களும் (வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை) அனைத்து மக்களின் தேவை யையும் பூர்த்திசெய்துவிட்டால் உலக மக்கள்தொகை அதிகம் என்று வருந்த வேண்டிய தில்லை. ஆனால், உலகின் பல நாடுகளில் உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினியால் வாடுவதையே காண்கிறோம். அப்படிப் பார்த்தால் இந்த உலகின் ‘உற்ற மக்கள்தொகை’ 400 முதல் 450 கோடி வரை இருக்கலாம். ஆனால் இருப்பதோ 732 கோடி.

இன்றும் அதே நிலைதான்!

இந்தச் சூழ்நிலையில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தனிப்பட்ட நாடுகளின் உற்பத்தியோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் உலக அளவிலான உற்பத்தித் திறனோடு ஒப்பிடுவதே சரியானது.

இங்கிலாந்தின் தாமஸ் மால்தஸ் என்பவர்தான் 1798-ல் மக்கள்தொகைப் பெருக்கத்தால் வரக்கூடிய ஆபத்துகள் குறித்து முதன்முதலில் உலகை எச்சரித்தார். மக்கள்தொகைப் பெருக்கம் பெருக்கல் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் உள்ளதால் பற்றாக்குறை, அதனால் பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள் ஏற்படும் என்றார். தடையில்லாப் பொருளாதாரம், கல்வியறிவு பரவாமை, சமூக நிலையில் பின்தங்கிய நிலைமை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்லாமை போன்ற சூழல்கள் நிலவிய காலத்தில் வெளியிடப்பட்ட மால்தஸின் கருத்து இன்றும் பெருமளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் உலகில் 5.6 கோடி இறப்புகள் நிகழ்கின்றன. ஆனால் 9.8 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் நொடிக்கு 34 குழந்தைகள் பிறக்கின்றன, 10 பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் பிறப்பு 1.81 கோடியாகவும் இறப்பு 52.83 லட்சமாகவும் இருக்கிறது. இந்த விகிதாச்சாரப்படி ஆண்டுதோறும் 71% நிகர மக்கள்தொகை (1.28 கோடி) அதிகரிக்கிறது.

என்ன செய்யலாம்?

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை பெரும் சவாலாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

இந்தியச் சூழலுக்கு உட்பட்டு சில யோசனை களைப் பரிசீலிக்கலாம். கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைக் கட்டமைப்புகளை மக்களுக்குத் தரமாக வழங்குவது மக்கள்தொகையைக் கட்டுப் படுத்துவதற்கு மிகவும் அடிப்படையாக அமையும். பெண்ணின் திருமண வயதை 21-ஆகவும், ஆணின் திருமண வயதை 25-ஆகவும் உயர்த்த வேண்டியது அவசியம். குழந்தைத் திருமணங்களைக் கடும் குற்றமாக அறிவிக்க வேண்டும். ஏழ்மை என்பது இவை எல்லாவற்றோடும் பின்னிப்பிணைந்தது என்பதால் ஏழ்மை ஒழிப்பு என்பது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் இன்றியமையாதது.

ஒரு பக்கம் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தியாகிறது. இன்னொரு பக்கம் உணவுத் தேவை மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சமன்பாட்டைச் சரிசெய்ய வேண்டுமென்றால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.

- கி. சிவசுப்பிரமணியன், துணைப் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தொடர்புக்கு: director@mids.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x