Published : 24 Feb 2017 09:12 AM
Last Updated : 24 Feb 2017 09:12 AM

சசிகலா: நியமனப் பதவியும் நீடிக்கும் சிக்கலும்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது அதிமுக பொதுக்குழு. ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று புகார் சென்றதன் காரணமாக, விளக்கம் கோரும் கடிதம் ஒன்றை சசிகலாவுக்கு அனுப்பியுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அந்தக் கடிதத்துக்கு வருகின்ற 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டிய நிலை. அமைப்பு விதிகளைக் காரணம் காட்டி அளிக்கப்பட்டுள்ள புகார் என்பதால், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிமுகவின் அமைப்புச்சட்ட விதி 20(5)படி பொதுச்செயலாளர் பதவி காலியாகும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு கட்சியை வழிநடத்த வேண்டும். இந்த இடத்தில் ‘தேர்ந்தெடுக்கப்படும்’ என்ற பதம் மிக முக்கியமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா பொதுச்செயலாளராக ‘நியமனம்’ செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சிக்கலைக் கொடுக்கும் முதன்மையான அம்சம்.

மேலும் மேலும் சிக்கல்

அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் இல்லாத நிலையில், அவரது அதிகாரங்களை ஏற்று துணைப் பொதுச்செயலாளர் செயல்பட முடியும். ஆனால், ஜெயலலிதா மறைந்தபோது அப்படியொரு பதவி அதிமுகவில் இல்லை. சிறை செல்வதற்கு முன்னால், கட்சி நிர்வாகப் பணிகளைக் கவனிக்க டிடிவி தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் நியமனமே செல்லாத சூழல் உருவாகும் நிலையில், அவர் எப்படி துணைப் பொதுச்செயலாளரை நியமிக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது.

அடுத்த மிக முக்கியமான சிக்கல், இரட்டை இலை சின்ன ஒதுக்கீட்டுக் கடிதம். (இங்கே ஒரு செய்தி: அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னத்தின் பெயர், இரட்டை இலை அல்ல, இரு இலைகள்). அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க பொதுச்செயலாளர் கையெழுத்திட்ட கடிதம் தேவை. அதிமுக அமைப்பு விதிகளின்படி, அந்தக் கையெழுத்தைப் பொதுச்செயலாளர் மட்டுமே இட முடியும். விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குப் பொதுச்செயலாளர் சசிகலாவின் நேரடிக் கையெழுத்து வேண்டும்.

என்ன செய்யும் தேர்தல் ஆணையம்?

இந்த இடத்தில் மூன்று சிக்கல் கள் எழுகின்றன. நியமனப் பொதுச் செயலாளர் கையெழுத்திடுவது செல் லுமா, செல்லாதா என்பது முதல் சிக்கல். அடுத்து, ஒவ்வொரு அதிமுக வேட்பாளரும் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் கையெழுத்து பெறுவது சாத்தியமா?

அப்படியே சாத்தியமானாலும் அது மக்கள் மத்தியில் எப்படியான உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது சிக்கல். அடுத்து, தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர் கொடுக்கும் பரிந்துரைக் கடிதத்தை ஏற்று, அதற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவது சாத்தியம்தானா, இதற் கான முன்னுதாரணம் இருக்கிறதா? இதனைத் தேர்தல் ஆணையம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது மூன்றாவது சிக்கல்.

இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ள சசிகலா முன்னுள்ள வாய்ப்புகள் சொற்பம். ஒன்று, நியமனத்திலிருந்து வெளியேறி தேர்ந்தெடுக்கப்படுவது, கட்சி அமைப்பு களின் முதன்மை உறுப்பினர்கள் சேர்ந்துதான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு முதலில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது, கடந்த காலங்களில் இருந் ததுபோல ‘போட்டியின்றித் தேர்வு’ ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. போட்டி ஏற்பட்டால், கட்சிக்குள் சிக்கல் ஏற்படலாம்.

சவாலின் பேருருவம்

இரண்டு, இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும் என்ற சட்டவிதியில் திருத்தம் கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி, அங்கீகாரக் கடிதத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் துணைப் பொதுச்செயலாளர் போன்ற வேறொருவருக்குத் தருவதன் மூலம் சிக்கலைத் தவிர்க்க முடியும். கட்சியின் பொதுச்செயலாளர் ‘தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற விதியைத்தான் மாற்றக் கூடாது என்று அமைப்பு விதிகளில் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ஏனைய விதிகளில் மாற்றம் செய்வதற்குத் தடையில்லை.

மூன்று, நியமனப் பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருந்து நான்காண்டுகள் விலகியிருப்பது. இடைப்பட்ட காலத்தில் பொதுச் செயலாளரை முறைப்படி தேர்ந்தெடுத்து கட்சியை நிர்வகிக்கச் செய்வது. சிறைத் தண்டனை முடிந்ததும், அப்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது. இதுவும்கூட முள்ளில்லாத பாதையல்ல. புதிய பொதுச்செயலாளர் கையிலிருந்து கட்சி நழுவவும் செய்யலாம் அல்லது அவர் வசமே கட்சி முழுமையும் சென்றுவிடலாம்.

ஆக, சசிகலாவுக்கு முன்னால் ஒவ்வொரு சவாலும் பேருருவம் கொண்டு நிற்கிறது.

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x