Last Updated : 22 Sep, 2016 09:48 AM

 

Published : 22 Sep 2016 09:48 AM
Last Updated : 22 Sep 2016 09:48 AM

ராஜதானி மெயில்: பலன் தருமா கட்டில் சபை?

உத்தரப் பிரதேசத்தில், 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 6-ம் தேதியே தொடங்கிவிட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ‘விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் கூட்டம்’ என்ற பெயரில் தியோரோ முதல் டெல்லி வரையிலான இந்த வித்தியாசமான பிரச்சாரப் பயணத்துக்காக, வழிநெடுக ஆயிரக்கணக்கான கயிற்றுக் கட்டில்கள் போட்டு வைக்கப்பட்டன.

கூட்டம் சேர்ப்பதற்காக, தொழில்முறை தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்த யோசனைதான் இந்தக் ‘கட்டில் சபை’. முதல் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்ட கிராமவாசிகள், கூட்டம் முடிந்ததும் கட்டில்களைக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார்கள். கயிறு அறுந்து, கால்கள் உடைந்திருந்த கட்டில்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அடுத்தடுத்த கூட்டங்களில் கட்டில் களுக்கெனத் தனிப் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று!

இந்நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியைப் போட்டுத்தாக்கினார் ராகுல். “ஒரு விஷயத்தில் மோடி சிறந்தவர். மக்களுக்கிடையே சண்டை மூட்டுவதில் உலகில் எவருமே அவரை வெல்ல முடியாது. ஹரியாணாவில் ஜாட்களுடன் ஜாட் அல்லாதவர்களை மோதவிட்டார். அமைதியாக இருந்த காஷ்மீரும் ஆறு மாதமாகப் பற்றியெரிகிறது. விவசாயிகளின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றுவதாகக் கூறியிருந்தார். சொன்னபடியே விவசாயிகளின் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டார்” என்று கிண்டலடிக்கிறார்.

உ.பி.யின் ஆளும் சமாஜ்வாடி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் ஆகியவற்றை அவர் இந்தளவுக்கு விமர்சிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 73-ஐ வென்ற பாஜகவை, அடுத்த மக்களவைத் தேர்தலிலாவது வீழ்த்தும் நோக்கமாகவே இது பார்க்கப்படுகிறது. கடந்த 2012-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் சின்னத்தை மனதில் வைத்துப் பேசிய அவர், ‘யானை அதிகமாகப் பணம் சாப்பிடுகிறது’ என்றார். அது, மாயாவதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க சமாஜ்வாடிக்கு உதவியது. ஆனால், இந்த முறை உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவை ‘நல்ல பையன்’ என அவர் பாராட்டுவதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

மோடி மீது மட்டும் ராகுல் வைக்கும் கடுமையான விமர் சனம், காங்கிரஸுக்கு உயர் சமூகம் மற்றும் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தரும் என எதிர் பார்க்கப்படுகிறது. உ.பி. மட்டுமல்ல, குஜராத், பஞ்சாப் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் இது பலன் தருமெனக் காங்கிரஸார் நம்புகிறார்கள். அதற்கேற்றவாறு பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பின் காந்தி குடும்பத்திலிருந்து முதல் நபராக அயோத்திக்குச் சென்றிருந்தார் ராகுல்.

ஆனால், இதெல்லாம் உ.பி.க்கு வெளியே வேண்டுமானால் காங்கிரஸுக்குப் பலன் தரலாமே தவிர, அயோத்தியில் எதுவுமே கிடைக்கப்போவதில்லை. ஏனெனில், இங்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி, பாஜக மற்றும் பகுஜன் சமாஜுக்குப் பின் நான்காவது நிலைகூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அந்த நான்காவது இடத்தையும் அங்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளரான குல்ஷன் பிந்து பிடித்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

- ஆர்.ஷபிமுன்னா தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x