Published : 19 Sep 2018 10:12 AM
Last Updated : 19 Sep 2018 10:12 AM

சிலையை அல்ல... தங்களைத் தாங்களே அவமதித்துக்கொள்கிறார்கள்!

சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை மீது வீசியெறியப்பட்ட காலணியோடு அவரின் 140-வது பிறந்தநாள் விழா தொடங்கியிருக்கிறது. வழக்கமாக குடிபோதையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் செய்கிற இந்த இழிசெயலைப் பட்டப்பகலில் ஒரு வழக்கறிஞரே செய்திருக்கிறார். பெரியாரியர்களைப் பொறுத்தவரை அவர்களை இது சிறிதும் சலனப்படுத்தவில்லை. பெரியார் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரின் கொள்கைகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது என்றே அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

கல்லடிகள், சொல்லடிகள், செருப்பு வீச்சுக்கள், அழுகிய முட்டைகள், மலம், சாணம், பாம்பு என்று எல்லாவிதமான தாக்குதல்களுக்கும் நடுவில்தான் பெரியாரின் பரப்புரைகள் நடந்திருக்கின்றன. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற வகையில்தான் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்றால், கூட்டத்தின் பின்னால் ஆசிரியர் அணைக்காடு டேவிஸ் நின்றுகொண்டிருப்பார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மேடையில் பேசும்போது 180 பாகையில் சுழன்று பேசுவதும்கூடத் தற்பாதுகாப்பு சார்ந்து உருவான பழக்கத்தின் தொடர்ச்சிதான் என்று சொல்வதுண்டு.

பெரியார் தனி ரகம். தன் மீது செருப்பு வீசியவர்கள் அகப்பட்டால், மேடையில் தன் பக்கத்திலேயே உட்காரவைத்து, முழுப் பேச்சையும் கேட்க வைத்துவிடுவார். தாம் யாருடைய நலனுக்காகப் பேசுகிறோமோ அவர்களாலேயே தாக்குதலுக்கும் ஆளாக நேரலாம் என்ற நிலையிலிருந்துதான் இங்கு பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூக நீதி, மொழியுரிமை என எல்லாவற்றுக்குமான குரல் எழுந்திருக்கிறது. எதிர்ப்பின் நடுவே ஒலித்த அந்தக் குரல்தான் செருப்பு வீசுபவருக்கும் சேர்த்து உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஊர்தோறும் சிலைகள்

‘செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்’ என்று எழுதினார் பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய கவிஞர் கருணானந்தம். அதற்குக் காரணம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1944-ல் நடந்த ஒரு சம்பவம். தென்னாற்காடு மாவட்ட மாநாட்டில் பேசிவிட்டு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கு கைவண்டி ரிக் ஷாவில் திரும்பிக்கொண்டிருந்தார் பெரியார். கடிலம் நதிப் பாலத்தை அவர் கடந்துகொண்டிருந்தபோது அவர் மீது பாம்பு வீசப்பட்டது. தொண்டர்கள் அலறி, பின்பு அது தண்ணீர்ப் பாம்பு எனத் தெரிந்து அமைதியானார்கள். பெரியாரோ, வண்டியைத் திருப்பச் சொன்னார். வந்த திசையில் திரும்பியது வண்டி. சிறிது தூரம் சென்று திரும்பியதும், மீண்டும் ரயில் நிலையத்துக்கு வண்டி புறப்பட்டது.

‘பாலத்தைக் கடக்கும்போது என் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அது நல்ல புதுச் செருப்பு. ஆனால், ஒன்றுதான் வீசப்பட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு நானும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக்கொண்டு வீசியவரும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால்தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். மீண்டும் போனபோது, அந்த இன்னொரு செருப்பையும் வீசிவிட்டார். இதோ இப்போது ஒரு ஜோடி செருப்பு கிடைத்துவிட்டது’ என்றார் பெரியார். பாம்பு வீசப்பட்டதுதான் உடன் சென்றவர்களுக்குத் தெரியும். செருப்பும் விழுந்ததைப் பெரியார் கவனித்திருந்தார்.

பெரியாருக்கு செருப்பு வீசப்பட்ட அந்த இடத்தில் இப்போது ஒரு சிலையும் நினைவுக் கல்வெட்டும் இருக்கின்றன. திருப்பூர் தாராபுரத்தில், பெரியாரின் சிலை மீது ஒரு ஜோடி காலணிகளை வைத்துச் சென்றிருக்கிறார் இன்னொருவர். பெரியார் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இரண்டு காலணிகளையும் ஒருசேர வீசிய அந்தத் தோழருக்கு நன்றி சொல்லிவிட்டு, அடுத்த கூட்டத்தில் அவற்றை ஏலத்துக்கு விட்டு கழகக் கணக்கிலும் சேர்த்திருப்பார்.

தமிழகத்தின் நகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரைக்கும் பயணித்தவர் பெரியார். அவரது கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் கூட்டத்தை மிரளவைத்தன. அப்படித்தான் கும்பகர்ண தூக்கத்தைக் கலைக்க முடியும் என்பதையும் அவர் அறிந்துவைத்திருந்தார். அதற்காக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர் அறியாதவர் அல்ல. கடவுள் மறுப்பு, பெண்ணுரிமை சார்ந்து பெரியாரின் கொள்கைகள் இன்றும்கூட பெரும்பான்மைச் சமூகத்தால் முழுமையாகப் பின்பற்ற இயலாதவை. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழர்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் அச்சாணியாக ஆணிவேராக பெரியாரே இருக்கிறார்.

ஊர்தோறும் பெரியார், அண்ணா சிலைகள் இன்று நிறுவப்பட்டிருக்கின்றன. அதேபோல, இந்தியா முழுவதும் காந்தி, அம்பேத்கரின் சிலைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சாதி ஒழிப்பில் காந்தியின் அணுகுமுறை வேறு; அம்பேத்கரின் அணுகுமுறை வேறு. அதுபோலவே, இனவுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரும் அண்ணாவும் தமிழகம் எங்கும் சிலைகளாக நிறைந்திருக்கிறார்கள். கொள்கை ஒன்று என்றாலும் இருவரின் அணுகுமுறையும் வேறு வேறு. அணுகுமுறைகள் வெவ்வேறு என்றாலும் இவர்கள் ஒவ்வொருவரும் சமத்துவத்துக்காக உழைத்தவர்கள். ஒட்டுமொத்த மனித குலச் சுதந்திரத்தைச் சிந்தித்தவர்கள். அவர்களுடைய சிலைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களை அவமதித்துவிடலாம் என்று நினைப்பது அறிவிலித்தனமேயன்றி வேறல்ல. சித்தாந்தங்களில் இருப்பவர்கள் மக்களுடைய மனதில் வாழ்கிறார்கள்.

அவமதிப்புகளின் பின்னணி

சமத்துவ உரிமையை நிலைநாட்டிய அம்பேத்கரை ஒரு சாதி அடையாளமாகச் சுருக்கிப் பார்த்தவர்களால் அவருடைய சிலைகளுக்குக் கம்பிவேலி போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் பரிதாபத்துக்குரிய அந்தக் குற்றவாளிகள் யாரும் அம்பேத்கரைப் படித்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை படித்திருந்தால், அவர் போராடியது தனக்காகவும்தான் என்பதை உணர்ந்திருப்பார்கள். நமது சுதந்திரத்துக்குக் காரணமான தலைவர்களைப் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் அடைத்துவைத்திருக்கும் சமூக அவமானம் நமக்கும் நேர்ந்திருக்காது. சாதியின் பெயரால் அம்பேத்கர் சிலைகளை அவமதித்தவர்கள், இப்போது மதத்தின் பெயரால் பெரியார் சிலைகளை அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்களின் வாழ்வும் பயணமும் பேச்சும் எழுத்தும் மானிட சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைந்தவை. அவர்களது கருத்தில் யாருக்கும் உடன்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றுக் கருத்து இருக்கலாம். அவை விவாதிக்கப்பட வேண்டியவை. அத்தகைய விவாதங்களையே அவர்களும் விரும்பினார்கள். அதன் வாயிலாக ஓர் தீர்வு உருவாக வேண்டும் என்பதுதான் அந்தத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல் இயக்கங்களின் நோக்கம். அதைத் தவிர்த்து, அவர்களது சிலைகளை அவமதிப்பது என்பது தன்னைத்தானே அவமதித்துக்கொள்ளும் அவலம். ஒரு அறிவுபூர்வமான உரையாடலுக்கு, தான் தகுதியானவர் இல்லை என்று ஒருவர் தானே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் தருவதை என்னவென்பது?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x