Published : 05 Sep 2018 09:30 AM
Last Updated : 05 Sep 2018 09:30 AM

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி: தமிழகத்தின் சாதனைகள்... சவால்கள்!

பொன்ராஜ் தங்கமணி

நம் ஒவ்வொரு வீட்டிலும் உபயோகிக்கும் மின்சாரத்துக்காக நெய்வேலியிலிருந்தோ இல்லை இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தோ டன் கணக்கில் தினம் தினம் நிலக்கரி தோண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 57.3% மின்சாரத்தை நிலக்கரியிலிருந்தே பெறுகிறோம். கிட்டத்தட்ட 80% நிலக்கரி இந்தியாவிலிருந்தே எடுக்கப்படுகிறது.

பெரு/குறு நீர்மின் திட்டங்கள் மூலம் 14.5% மின்சாரமும், காற்றாலை மூலம் 9.9%, சூரிய சக்தி மூலம் 6.3%, அணுமின் திட்டங்கள் மூலம் 2%, எரிவாயு மூலம் 7.2%, உயிரியல் தாவரங்கள் மூலம் 2.7%, டீசல் மூலம் 0.2%  பெறப்படுகிறது. இதில் சூரிய மின்சக்தி, காற்றாலை, பெரு/குறு நீர்மின் திட்டங்கள் மூலம் பெறப்படும் மின்சக்தியை, மரபு சாரா எரிசக்தி எனவும், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி எனவும் கூறப்படுகிறது.

உலகம் முழுதும் தொடர்ந்து நாம் ஏற்படுத்தும் மாசு காரணமாக, பூமியின் வெப்பநிலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவை பாரிசில் 2015-ம் ஆண்டு ஒன்று கூடி, பூமியின் தட்பவெட்ப நிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என உறுதி கூறின. அதன் முக்கிய அம்சமாக, மின்சாரம் உற்பத்திசெய்யும் முறையைப் புதுப்பிக்கத்தக்க முறைக்கு மாற்ற வேண்டும் என்பதே முக்கியச் செயல்பாடாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொன்றன.

முன்மாதிரி தமிழகம்

இந்தியாவில் மரபு சாரா எரிசக்தித் துறை 1982-லிருந்தே செயல்பட்டுவருகிறது. இரண்டு முறை, அது பெயர் மாற்றப்பட்டு, தற்போது  ‘மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை’ என்கிற பெயரில் இயங்கிவருகிறது. இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில், சுமார் மூன்றில் ஒரு பங்கு (33%) புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது. பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனைதான். என்றாலும் ஸ்வீடன், ஸ்காட்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் போன்ற சில நாடுகள், 100% நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.

இந்தத் துறையில், சமீபத்தில் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது இந்தியா. ஐஆர்இஎன்ஏ (சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகவாண்மை) என்கிற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2017-ல் குறைவான செலவில் புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்திசெய்வதில், முதல் இடத்துக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

முன்னணியில் தமிழகம்

குறிப்பாக, சீனாவைவிடக் குறைவான செலவில் மின்சாரம் உற்பத்திசெய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் தயாரிக்கப்படும் பெரும்பாலான சூரிய மின் தகடுகள், சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் முதல் 10 பெரிய சூரிய மின் தகடுகள் உற்பத்தியாளர்களில் ஆறு பெரும் நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி, இந்தியா குறைவான செலவில் மின்உற்பத்தி செய்திருப்பது முக்கியமான சாதனை.

இந்தியாவின் இந்த வளர்ச்சியை உற்று நோக்கிய ஐஇஇஎப்ஏ என்கிற சர்வதேச ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம், இந்தச் சாதனைக்குத் தமிழ்நாடு சிறந்த முன்மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் துறையில் தமிழ்நாடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வகித்துவருகிறது. இந்தியாவில் தற்போது உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு (18.5%) தமிழகத்தின் பங்கு.

புதிய சவால்கள்

தமிழகத்தின் மின் கட்டமைப்பையும், ஆற்றலையும் ஐஇஇஎப்ஏ ஆய்வுசெய்து, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் 62% திறனுடன் இயங்குகிறது. இந்தத் திறன் 2026/27 வாக்கில், 45% நோக்கிக் குறைய வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக, மின்செலவுகள் அதிகரித்து, மின்சார விலை அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், இங்கே உள்ள ஆலைகள் 20 வருடங்களுக்கும் மேலானவை. இதில் உள்ள தொழில்நுட்பங்களும் பழையவை. இவற்றை மேம்படுத்துதல் மூலம், காற்றாலை உற்பத்தியை இரட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. தெளிவான, தீர்க்கமான முறையில், புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிப் பயணித்தால், 2026/27-ம் ஆண்டுக்குள், தமிழகத்தின் 56% மின்சக்தியைக் காற்றை மாசுபடுத்தாத வளங்கள் மூலம் பெற முடியும் என்கிறது ஆய்வறிக்கையின் முடிவு. நிலக்கரி சார்ந்த புதிய மின்திட்டங்களை மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவது இனிமேல் கடினம் என்பதைத் தாண்டி, அத்திட்டங்கள் தவிர்க்கவியலாத தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. நெடுவாசல் தொடங்கி கதிராமங்கலம் வரை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவில்லை.

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்குப் பயணத்தை மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் அமையாது. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழகம் அறிமுகப்படுத்திய விதம்போல, ஒவ்வொரு  வீட்டிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் ஏற்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்சார்பு மின்சாரத்தை வீட்டிலேயே அடையும்போது, நிலக்கரிக்கான தேவையோ, ஹைட்ரோ கார்பனுக்கான தேவையோ, மீத்தேனுக்கான தேவையோ இருக்கப்போவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x