Published : 20 Jun 2019 08:27 am

Updated : 20 Jun 2019 10:01 am

 

Published : 20 Jun 2019 08:27 AM
Last Updated : 20 Jun 2019 10:01 AM

வற்றாத கிணறு... வழிபடும் கிராமம்!

மதுரை மாநகராட்சி எல்லையிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது யா.கொடிக்குளம். அங்குள்ள தாமரைத் தடாகம் வற்றுவதேயில்லை. ஊரில் எங்கே ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் அதிகபட்சம் 50 அடியிலேயே தண்ணீர் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஊர் கோயில் அருகே உள்ள 18 அடி ஆழமே கொண்ட குடிநீர்க் கிணற்றில் எந்தக் கோடையிலும் தண்ணீர் எடுக்கலாம்.

நாம் அங்கு போயிருந்தபோது, ஒரு சின்னக் கயிற்றின் துணையோடு பெண்கள் வாளியில் தண்ணீர் இறைத்து, தலைச்சுமையாக வீட்டுக்குக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். ஆண்கள் சிலர் சைக்கிளில் வைத்து லோடு அடிக்கிறார்கள். தண்ணீரின் சுவைக்காகவே பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள். எல்லாம் காலை 9.30 மணிக்கு முன்னும், மாலையில் 4.30 மணிக்கு மேலும்தான். இடையில் யாரும் தண்ணீர் எடுப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணமே, இந்த ஊரை மட்டும் ஏன் இயற்கை கைவிடுவதேயில்லை என்பதற்குப் போதுமான பதிலாக இருக்கிறது.


‘‘யப்பே, பக்கத்துல இருக்கிற மருத மரத்துலயும், யானை மலையிலயும் டஜன் கணக்குல மலைத்தேன் கூடுங்க இருக்குது. வெயில் ஏறுனதும் தேனீங்க கிணற்றடியில் இருக்கிற சேத்து மண்ணில் உட்கார்ந்து தண்ணி குடிக்கும். எதுக்குத் தேவையில்லாம அதுகளைத் தொந்தரவு பண்ணிக்கிட்டு. அதுவும் சாகக் கூடாது, நாமளும் கொட்டு வாங்கக் கூடாதுல்ல, அதான் மதிய நேரம் தண்ணியெடுக்கப் போறதில்ல. தேனீக்களுக்குப் புகை பிடிக்காதுங்கிறதால, சாமிக்குப் பொங்க வெச்சாக்கூட அந்தப் பக்கம் புகை வராமப் பாத்துப்போம்’’ என்கிறார்கள் கொடிக்குளத்து மக்கள்.

இயற்கைதான் கடவுள்

சென்னை அளவுக்கு இல்லை என்றாலும், மதுரையிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது. மாநகரில் மட்டுமின்றி சில புறநகர்ப் பகுதியிலும் ஆயிரம் அடி ஆழ்துளைக் கிணற்றில்கூடத் தண்ணீர் இல்லை. நகருக்குள் தண்ணீர் லாரிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும், எப்படி இந்தக் கிராமத்தில் மட்டும் இவ்வளவு தண்ணீர் வசதி?

முதல் காரணம், இவ்வூர்க்காரர்களைப் பொறுத்தவரையில் இயற்கைதான் கடவுள். அதற்கு எந்தத் தொந்தரவும் செய்வதுமில்லை, மற்றவர்கள் செய்வதை அனுமதிப்பதுமில்லை. வெளியூர் போய்விட்டு வருபவர்கள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும், கால் செருப்பைக் கழற்றிவிட்டு மலையைப் பார்த்து ‘மலையானே காப்பாத்து’ என்று கும்பிடு போடுகிறார்கள். தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, 300 அடி தூரத்திலேயே காலணிகளைக் கழற்றிவிட்டு வெறுங்காலோடு போகிறார்கள். தண்ணீர் இறைப்பதற்குக்கூட கூடுமானவரையில் தென்னைநார் அல்லது நூல் கயிற்றைத்தான் பயன்படுத்துகிறார்கள். கிணற்றருகே உள்ள பொய்கையில் அவ்வளவு தண்ணீர் இருந்தும் அதில் குளிப்பதோ, துணி துவைப்பதோ இல்லை. அங்குள்ள மீன்களைக்கூட யாரும் பிடிக்கக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு.

யானைமலையைச் செதுக்கி சிற்ப நகராக்குவோம் என்று திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிப்பு வெளியானபோது, சுற்றுப்புறக் கிராம மக்களோடு சேர்ந்து உயிரைக் கொடுத்துப் போராடி, அதைத் தடுத்து நிறுத்தினார்கள். ஊரில் உள்ள யாருடைய வீட்டிலும் 100 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைப்பதில்லை. ‘‘யானைமலைதாம்பா சுற்றுப்பட்ட கிராமத்துக்கெல்லாம் சாமி. இந்த மலைக்குள்ள இருந்துதான் தண்ணி வருது. முன்னாடி வெறும் சுனையா இருந்துச்சி. சொம்பு வெச்சி மோந்துக்கிட்டு வருவோம். அதுபாட்டுக்குப் பெருக்கெடுத்து, தாமரைப் பொய்கைக்குத் தண்ணி போய்க்கிட்டே இருக்கும். இருவது வருஷத்துக்கு முன்னாடிதான், பெரும் பஞ்சம் வந்து ஊத்தும் நின்னுபோச்சு. அப்பதான் அந்த இடத்தைக் கொஞ்சம் ஆழப்படுத்தி, சுத்தி கிணறு மாதிரி சுவர் கட்டுனோம்’’ என்கிறார் புளியம்மாள் பாட்டி.

ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி இல்லை

குடிநீர்த் திட்டம் வந்தபோது, இந்தக் கிணற்றிலேயே மோட்டார் பொருத்தித் தண்ணீரைக் குழாய் வழியாகத் தரலாமா என்று அதிகாரிகள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள் மக்கள். ‘‘இது சாமி கொடுத்த தீர்த்தம்யா. குடிக்கவும், சமைக்கவும்தான் பயன்படுத்தணும்’’ என்று மறுத்துவிட்டார்கள். இப்போது ஊருக்கு கூட்டுக்குடிநீர்த் திட்ட இணைப்பு வந்துவிட்டது. ஆனாலும், குடிப்பதற்கு இந்தப் பொய்கைத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். தினமும் எத்தனை நூறு பேர் இறைத்தாலும் கிணற்றுத் தண்ணீர் வற்றுவதில்லை. ஒரே ஒரு மோட்டார் வைத்திருந்தால் ஒரே மாதத்தில் கிணறு வறண்டுபோயிருக்கும்.

கிணற்றுத் தண்ணீர் வற்றாததற்கு இன்னொரு காரணம், இவ்வூரில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை. கால்வாயில் தண்ணீர் வந்தால் நெல் விவசாயம் செய்கிறார்கள். மற்றபடி கிணறு வெட்டியோ, ஆழ்துளைக் கிணறு அமைத்தோ விவசாயம் செய்து பழகவில்லை இவர்கள். ‘‘வருஷந்தோறும் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்திடுவாங்க. அது சுத்தியுள்ள கண்மாய்கள்ல தேங்கி நிற்கும். வாய்க்கால்ல தண்ணீர் வந்தாலொழிய யாரும் விவசாயம் பண்றதில்ல. விவசாயத்துக்காக யாரும் நிலத்தடி நீரை எடுக்கிறது கிடையாது. நஞ்சை நிலத்துல நஞ்சை விவசாயமும், புஞ்சை நிலத்துல புஞ்சை விவசாயமும் பண்ணுனாலே எந்த ஊர்லயும் நிலத்தடி தண்ணீர் வத்தாது. குடிக்கிற தண்ணியைப் பூமிக்கடியில இருந்து எடுக்கலாம். மற்ற தேவைக்குப் பூமிக்குள்ள இருந்து தண்ணியெடுக்க ஆரம்பிச்சோம்னா, அது அதிக பாலுக்கு ஆசைப்பட்டு மாட்டோட மடிய அறுக்கிறதுக்குச் சமம்’’ என்கிறார் விவசாயி மலைச்சாமி.

ஊர் கூடி நீர்நிலை காப்போம்

இவ்வூர் மக்கள் 'மலைச்சாமி' என்ற பெயரில் இயற்கையையே தெய்வமாக வணங்குகிறார்கள். ஊருக்கு ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மட்டும் இருந்து, இன்றைய நிலையைச் சமாளிக்க முடியுமா என்ன? இப்படி ஊரே ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பதால்தான், இன்று வரையில் இந்த ஊர் பசுமையாக இருக்கிறது. பக்கத்துக் கிராமங்களில் எல்லாம் ராட்சத ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, டேங்கர் லாரிகளுக்குத் தண்ணீர் விற்று சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட சூழலிலும் இவ்வூர் மக்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

அள்ளிக் குடிப்பதற்கும், மோட்டார் வைத்து உறிஞ்சிக் கொட்டுவதற்குமான வித்தியாசம்தான் இந்த ஊரை இன்னமும் ஈரத்தோடு வைத்திருக்கிறது. ‘‘இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்; ஆனால், பேராசையை அல்ல’’ என்ற காந்தியின் பொன்மொழியை அறிவுரையாக அல்ல, அனுபவ மொழியாகச் சொல்கிறார்கள் யா.கொடிக்குளத்து மக்கள்.

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author