Published : 02 Jun 2019 10:34 AM
Last Updated : 02 Jun 2019 10:34 AM

மாணவர்களை ஈர்க்கும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாடப்பிரிவை மிகுந்த கவனத்தோடு தேர்வுசெய்ய வேண்டியது அவசியம். தேர்வுசெய்ய இருக்கிற பாடப்பிரிவு நமக்கு விருப்பமானதா, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு அது எந்த வகையில் உதவும் என்பதையெல்லாம் தொலைநோக்குப் பார்வையுடன் நன்கு ஆராய வேண்டும். சேர விரும்பும் பாடப்பிரிவு உண்மையில் நமக்கு விருப்பமான பாடப்பிரிவா, பெற்றோர்கள் அல்லது நண்பர்கள் கொடுக்கும் தொடர் அழுத்தம் காரணமாக அப்பாடப்பிரிவைத் தேர்வுசெய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியமான விஷயங்கள்.

பொதுவாகவே, இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (ECE), இன்பர்மேஷன் டெக்னாலஜி (IT), கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலான பிரிவுகள்தான். ஐடி, இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் அதிகம் விரும்பப்பட்டாலும் கணிசமான மாணவர்கள் சேர ஆசைப்படும் பாடப்பிரிவாக ‘டிரிப்பிள் இ’ என அழைக்கப்படும் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவும் உள்ளது. இப்படிப்பானது ஒரு சில கல்லூரிகளில் பிஇ பட்டப் படிப்பாகவும், இன்னும் சிலவற்றில் பிடெக் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

இது, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உட்பட எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தொடர்பான பாடங்கள் தொடர்புடைய படிப்பாகும். மின் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களிலும் ‘டிரிப்பிள் இ’ பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மற்ற பாடப்பிரிவுகளுக்கு இருக்கும் அதே அளவிலான உயர்கல்வி வாய்ப்புகள் இதற்கும் உள்ளன. முக்கிய பாடப்பிரிவுகளில் ஒன்றாக இருப்பதால் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பானது தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலுமே இருக்கும். அங்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வு ஏதும் கிடையாது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேருவதாக இருந்தால் அந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் சிறப்பு நுழைவுத்தேர்வையும், ஐஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதாக இருப்பின் ஜெஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டதாரிகள் கெமிக்கல், ஏரோஸ்பேஸ், மின்உற்பத்தி, மெட்டீரியல் மற்றும் மெட்டல்ஸ், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேட்டிவ், மரைன், பார்மாசூட்டிக்கல்ஸ், கட்டுமானம், தொலைத்தொடர்பு என பலதரப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம். இதர பொறியியல் பாடப்பிரிவுகளைப் போல தேசிய அனல்மின்கழகம், என்எல்சி, ஓஎன்ஜிசி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கியாஸ் அதாரிட்டி ஆப் இந்தியா, கோல் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உதவி இன்ஜினியர் அந்தஸ்தில் பயிற்சி நிர்வாகி (Management Trainee) பணிகளில் சேரலாம். இதற்கு ‘கேட்’ (Graduate APtitude Test in Engineering-GATE) நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

மேலும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO),பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), அணுமின் நிலையங்கள், கனநீர் ஆலை போன்ற மத்திய அரசு நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் இன்ஜினியரிங் சர்வீஸ் (I.E.S.) தேர்வெழுதி ரயில்வே, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் நேரடியாக உயர் அதிகாரி ஆகலாம்.

மாநில அரசு பணி வாய்ப்புகள் என்று பார்த்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகின்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வெழுதி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி இன்ஜினியர் பணியில் சேரலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களுக்கு பணிவாய்ப்புகள் இருக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற தேர்வெழுதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் ஆகலாம். இதற்கு எம்இ, எம்டெக் பட்டமோ ‘நெட்’ தேர்வு தேர்ச்சியோ அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி வாய்ப்புகளைப் பொறுத்தவரையில், ஆட்டோமேஷன், ரொபாட்டிக்ஸ் பவர் சிஸ்டம், சோலார் பேனல்ஸ், பவர் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் எம்டெக், எம்இ படிப்புகள் படிக்கலாம். ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்டெக் படிப்பில் சேர வேண்டுமானால் ‘கேட்’ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். எம்இ, எம்டெக் முடித்துவிட்டு, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரலாம்.

பலதரப்பட்ட பணிவாய்ப்புகளைத் தரும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

பேராசிரியர் டாக்டர் பி.வி.நவநீதகிருஷ்ணன்,

முன்னாள் இயக்குநர்,

நுழைவுத்தேர்வுகள் மற்றும்

மாணவர் சேர்க்கை,

அண்ணா பல்கலைக்கழகம்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில்தான் 1885-ம் ஆண்டில் உலகின் முதல் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி உருவாக்கப்பட்டார். ஃபாரடே, ஓம், மாக்ஸ்வல், எடிசன், ஹெவிசைட் போன்ற மேதைகளின் உழைப்பால் செறிவூட்டப்பட்ட இத்துறை ஒளியூட்டல், வானொலி, மின்பெருக்கி, கணினி, டிரான்சிஸ்டர், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ / நேனோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. குளிர்ப்பதனம், தன்னியக்கம், ரோபோடிக்ஸ், பயோ-மருத்துவத்தில் வென்டிலேட்டர், எம்ஆர்ஐ ஸ்கேனர், இசிஜி கருவிகள், செயற்கை இதயம் முதலிய அனைத்தும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கின் பயன்பாடுகள்தான். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இத்துறை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் என்ற ஓர் அடிப்படைப் பிரிவாக இருந்து வருகிறது.

பொதுவாக இப்பிரிவில் மின்சுற்றுப் பகுப்பாய்வு, மின்ஆலைப் பொறியியல், டிஜிட்டல் அமைப்புகள், மின்காந்தக் கொள்கை, மின்னணுக் கருவிகளும் சுற்றுகளும், தொடர்புப் பொறியியல், மின் பொறிகள், டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங், மைக்ரோ கன்ட்ரோல்லர்கள், மின் கடத்தலும் பகிர்மானமும், பவர் எலக்ட்ரானிக்ஸ், உயர் அழுத்த பொறியியல், முதலியவை கற்பிக்கப்படும். நேனோ டெக்னாலஜி, OR, OOP, VLSI வடிவமைப்பு, பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்றவற்றிலிருந்து விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் மோட்டார், ரேடார், கடல் பயண/தொலைத்தொடர்பு மின் உற்பத்திப் பொறிகள் முதலியவற்றை வடிவமைத்தல், ஆலோசனை வழங்குதல், ஆராய்ச்சியும் வளர்ச்சியும், கணினி மென்பொருள் உருவாக்கம், தனித்தொழில் என பல்வேறு பணிகளில் சேரலாம். தொலைத்தொடர்பு, உயிரி மருத்துவம், கணினி வன்பொருள்/மென்பொருள், அரசு மின்துறை முதலியவற்றில் பொறியாளர்களாகவும் திட்ட மேலாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பணியாற்றலாம். மேலும், காப்புரிமை ஆய்வாளர், விற்பனை மேலாளர், மேற்பார்வையாளர், தரக்கட்டுப்பாட்டாளர், தானியக்கப் பொறியாளர், மின் பகிர்மானப் பொறியாளர், பயிற்சிப் பொறியாளர், எம்பெடட் சிஸ்டம் பொறியாளர், RF, தொலைத் தொடர்பு பொறியாளர் முதலிய பணிகளும் இவர்களுக்கு உண்டு.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வாய்ப்பும் அதிகம். ISRO, HMT, DRDO, DRDL போன்ற அறிவியல் / தொழில்நுட்ப அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் ஆராய்ச்சி நாட்டம் கொண்ட எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இளநிலை/ துணைநிலை மின்பொறியாளர் பணி, தொடக்க நிலையிலேயே மின்வாரியங்களிலும் போக்குவரவு, ரயில்வே துறைகளிலும் கிடைக்கும். பணிப் பயிற்சியோடு கூடிய EEE(Sandwich) படிப்பு (5 ஆண்டுகள்) பணிக்கு உத்தரவாதமே அளிக்கக்கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x