Published : 07 Jun 2019 09:02 AM
Last Updated : 07 Jun 2019 09:02 AM

360 - லெனார்டு மன்: கிணறுகளை வெட்டிய மாமனிதர்!

மரங்களை நட்ட மாமனிதர்களைப் போல கிணறுகளை வெட்டிய மாமனிதர் ஒருவரும் இருந்தார். இப்போதில்லை; 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில். ஆங்கிலேயரான அவரது பெயர் கேப்டன் லெனார்டு மன். 1878-ல் வொர்செஸ்டெர்ஷைரில் பிறந்த கேப்டன் லெனார்டு மன் அக்டோபர் 21, 1935-ல் கர்நாடகத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் காலமானார்.

தனது காலம் முழுவதும் ராய்ச்சூரில் சக ஊழியர்களின் உதவியோடு 1,200-க்கும் மேற்பட்ட கிணறுகளை உருவாக்கியிருக்கிறார். அவரது காலக்கட்டத்தில் ‘ஆயிரம் கிணறுகளின் தலைவன்’ என்று அறியப்பட்டார். அடிபம்புகளைவிட அவரது அறுங்கோண காங்கிரீட் கிணறுகள் மகத்தானது என்று நம்பினார்.

அவரது பாணி இன்றும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ‘மன் தோண்டிய கிணற்றுத் தண்ணீர் இனிக்கும்’ என்கிறார்கள் கிராமவாசிகள். கர்நாடகத்தின் லிங்சுகுர் கிராமத்தில் அவர் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறை வாசகங்களே அவர் என்ன மாதிரியான மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன.

“ஏப்ரல் 1928-க்கும் 1935-க்கும் இடையிலான காலத்தில் புவி அமைப்பியல் ஆய்வுத் துறையின் இயக்குநராகவும், கிணறு தோண்டுதல் துறையின் சிறப்பு அதிகாரியாகவும் இருந்தவர். அவரும் அவரது அலுவலர்களும் ராய்ச்சூர் மாவட்டத்தில், அதாவது எங்கே அவர் ஒவ்வொரு வீட்டின் அங்கத்தினர் போன்று கருதப்பட்டாரோ அந்த மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கிணறுகளைத் தோண்டியும் புதிப்பித்தும் பணியாற்றியிருக்கிறார்கள்!” கிணறுகளின் தலைவன் மறைந்து 95 ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது தலைமுறை ஆட்கள் மறைந்துபோன பிறகும்கூட இன்றும் தங்கள் நினைவில் அவரைச் சுமக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x