Published : 25 Jun 2019 09:48 AM
Last Updated : 25 Jun 2019 09:48 AM

வி.பி.சிங்: சமூக நீதியின் காவலர்!

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரான காகா கலேல்கரை காந்தியவாதியாக மட்டுமே அறிகிறோம். அவரது அறிக்கையை மத்திய அரசு கடைசிவரைக்கும் கண்டுகொள்ளவே இல்லை. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் அதற்குத் தலைவராகப் பொறுப்புவகித்த பி.பி.மண்டலுமே இன்றும் விவாதப்பொருளாக இருக்கிறார்கள். மண்டல் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டதே அதற்குக் காரணம்.

நாட்டின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்த விஷ்வநாத் பிரதாப் சிங், மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். பத்தாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றியதற்காக வி.பி.சிங் தமது பிரதமர் பதவியையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், செயற்கரிய செயலைச் செய்துமுடித்த மனநிறைவோடு பதவி விலகினார் வி.பி.சிங்.

முதல்வர் பதவியைத் தூக்கியெறிந்தவர்

பதவி விலகல் என்பது வி.பி.சிங்கைப் பொறுத்தவரை அவரது அரசியல் வாழ்வு முழுவதும் தொடர்ந்துவந்த ஒன்று. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த வி.பி.சிங், 1980-ல் அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார். கொள்ளையர்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இரண்டாண்டுகளிலேயே அப்பதவியிலிருந்து விலகினார் வி.பி.சிங் முதல்வராகப் பொறுப்பேற்றபோது ‘கறைபடியாத கரங்கள்’ என்று எடுத்த நற்பெயர் அவர் அரசியலின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. இந்திரா காந்தியின் ஆட்சியில் வர்க்கத் துறையின் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் பதவி வகித்த வி.பி.சிங், 1984-ல் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றபோது நிதியமைச்சரானார். காங்கிரஸ் தலைமை தனக்கு உயரிய பதவிகளை அளித்தாலும், விசுவாசம் காட்டுகிறவராக இல்லாமல் தனது மனசாட்சியின்படியே பணியாற்றியவர் அவர். நிதியமைச்சராகப் பதவிவகித்தபோது வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தார். அதனால், வரி ஏய்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர்களின் கோபத்துக்கும் அவர்களோடு நெருக்கம்காட்டிய கட்சித் தலைமையின் கோபத்துக்கும் ஆளானார். விளைவாக, நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

பற்றியெரிந்த போஃபர்ஸ் விவகாரம்

வி.பி.சிங்கின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடுவதற்காகவே ராஜீவ் காந்தி பாதுகாப்புத் துறையை வழங்கினார். ஆனால், அதுவே ராஜீவ் காந்தி மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளிக்கொண்டுவரவும் விவாதிக்கவும் காரணமாயிற்று. போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறித்து எதிர்க்கேள்வி எழுப்பிய வி.பி.சிங், அதனாலேயே காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுவே அவரது அரசியல் வாழ்வின் திருப்புமுனையாகவும் மாறியது.  ஜன மோர்ச்சா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய வி.பி.சிங், அதன் தொடர்ச்சியாய் ஜனதா கட்சி, லோக் தளம், இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்) உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற பெயரில் பெரும் கட்சியாக மாற்றினார். திமுக, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க, மத்தியில் காங்கிரஸ் அல்லாத இரண்டாவது அரசுக்குத் தலைமையேற்றார்.

கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதிலும் வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும் ஊழலை எதிர்ப்பதிலும் ஏற்கெனவே உறுதியோடு நின்ற வி.பி.சிங் பிரதமரானபோது பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலையை அடைவதிலும் உறுதியோடு நின்றார். பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அவர் நடைமுறைப்படுத்த முயன்ற அதேவேளையில், ராமஜென்ம பூமி விஷயத்தைக் கையிலெடுத்தார் எல்.கே.அத்வானி. ரத யாத்திரையைத் தொடங்கினார். மதவாத அரசியலை விரும்பாத வி.பி.சிங் அதை அனுமதிக்கவில்லை. பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது.

பிரதமராகப் பதவி விலகிய வி.பி.சிங் அதன்பிறகு கலந்துகொண்ட கூட்டங்களில் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தேசிய முன்னணியின் சார்பில் அவர் கிழக்கு உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியபோது, கோரக்பூரில் வி.பி.சிங் பேசிக்கொண்டிருந்த மேடையின் மீது கற்கள் வீசப்பட்டன. வி.பி.சிங் அருகில் நின்றிருந்த சரத் யாதவும் அஜீத் சிங்கும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். ‘நான் உங்கள் முன்னால், ரத்தமும் சதையுமாக நின்றுகொண்டிருக்கிறேன். என் முன்னால் வந்து உங்கள் விருப்பப்படி தாக்குங்கள். ஆனால், நான் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூக நீதிக் கொள்கையில் நான் உறுதியாகவே இருக்கிறேன்’ என்று முழங்கியவர் வி.பி.சிங்.

ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் வி.பி.சிங். பிரதமராகப் பதவி விலகிய பிறகு அவர் எந்தப் பதவியையும் விரும்பவில்லை. தானாகத் தேடிவந்தபோதும்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூன் 25: வி.பி.சிங் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x