Last Updated : 11 Mar, 2018 10:16 AM

 

Published : 11 Mar 2018 10:16 AM
Last Updated : 11 Mar 2018 10:16 AM

முதல்வன்..! முந்துவது யார்?

ம் பொறுமையைச் சோதிக்கிற மிக நீண்ட சதுரங்க ஆட்டம் இது. ரஜினி – கமல் யுத்தம் தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. ஆனால், களம் இப்போது மாறியிருக்கிறது. இருவருமே முதல்வர் நாற்காலியைத்தான் குறிவைக்கிறார்கள் என்றாலும், இருவரில் முதல்வர் யார் என்ற கேள்விதான் முந்திக்கொண்டு நிற்கிறது. வெளியே யார், யாரையோ குறிவைப்பதாகக் காட்டிக்கொண்டாலும், முதல்கட்ட யுத்தம் தங்களுக்குள்தான் என்பதை இருவருமே உணர்ந்துதான் இருக்கிறார்கள். ஏராளமான காட்சிகள் அரங்கேறுகின்றன. திரைக்குப் பின்னே இரு கூடாரங்களிலும் என்ன நடக்கிறது? யார் முந்துகிறார்கள்?

மிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாமல் நீடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று அவற்றின் அமைப்பு பலம். ரஜினி, கமல் இருவருமே இதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், ரசிகர் படையை எந்த அளவுக்கு அரசியல் படையாக மாற்ற முடியும் என்பதிலேயே முதல் கவனத்தைச் செலுத்திவரு கிறார்கள். கமலைவிட ரஜினி நான்கு வயது மூத்தவர் என்றாலும், சினிமாவில் கமல்தான் மூத்தவர். ஆகையால், ரசிகர் மன்றங்களும் முன்பே உருவாகிவிட்டன. ஆயினும், பின்னால் வந்த ரஜினி வேகவேகமாக முன்னேறினார். ரசிகர்களின் எண்ணிக்கையும் மன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததோடு, ரசிகர்களோடான நெருக்கத்தையும் அதிகரித்தார் ரஜினி. கமலும் இதற்கு ஈடுகொடுத்தார்.

1989-ல் இந்தச் சமநிலை குலைந்தது. அந்த ஆண்டு தான் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினார் கமல். மன்றத் தலைவர் பதவி ஒழிக்கப்பட்டு அது பொறுப்பாளர் என்றாக்கப்பட்டது. மன்றத்தின் செயல்பாடுகளும் மாற்றப்பட்டன. நோட்டுப் புத்தகங்கள், பாடக் கருவிகள் வழங்குதலில் தொடங்கி ரத்த தானம், கண் தானம், உடல் தானம் வரை அதன் செயல்பாடுகள் விரிந்தபோது, மன்றத்தின் தன்மையும் மாறியது. ஆனால், மன்றத்தோடு இணைந்துகொள்ளும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

ரஜினி ரசிகர் மன்றமோ ஒரு நிறுவனம்போல மாறியது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் என்று கட்சி அமைப்புபோல வட்டங்கள் வரை விரிந்தது. ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், முதல் இரண்டு காட்சிகளை ரசிகர் மன்றக் காட்சி என்ற பெயரில் மன்றத்தினரே பணம் கொடுத்து ஓட்டினார்கள்.

டிக்கெட்டைக் கூடுதல் விலைக்கு வைத்து விற்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்ததன் மூலம் மன்றத்தின் செலவைச் சமாளிக்கவும் தொடர்ந்து நிர்வகிக்கவும் ஒரு வழிவகை கிடைத்தது. ரஜினியின் அரசியல் குறித்த நம்பிக்கையூட்டல்கள் மன்றத்தை உயிரோட்டமாகவும் வைத்திருந்தது. கமல் மன்றங்களுக்கு எண்ணிக்கை பலம் குறைவு; அதேசமயம், மன்றங்களுக்கு வெளியிலும் அவருக்குப் பரந்த செல்வாக்கு இருப்பதை மறுக்க முடியாது. மேலும், மன்ற நிர்வாகிகளுடன் தொடர்ந்து நல்லுறவைப் பராமரித்தார் கமல். 32 மாவட்ட நிர்வாகி களையும் அவருக்குத் தெரியும். நிர்வாகிகள் இல்லத் திருமணங்களுக்கு வாழ்த்தோடு காசோலை அனுப்புவதை நீண்ட காலமாக வழக்கத்தில் வைத்திருக்கிறார். அதேபோல, அவர்களது குடும்பத்தில் ஒரு துக்கம் என்றாலும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்.

ஒருகாலத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கெல்லாம் ரஜினி திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்றாலும், நிர்வாகிகளுடனான தனிப்பட்ட உறவைத் தொடர்ந்து அவர் பராமரித்துவந்தார் என்று சொல்ல முடியாது.

ஆனால், இதற்காகவே அகில இந்திய ரஜினி மன்றத் தலைவர் பதவியை உருவாக்கினார். முதலில் பூக்கடை நடராஜன் முதல் 10 ஆண்டுகள், அடுத்து சத்தியநாராயணா 20 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தனர். இப்போது 7 ஆண்டுகளாக சுதாகரன் இருக்கிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்துகொள்வதே வழக்கம். ஆனால், அரசியல் அறிவிப்புக்குப் பின் நிர்வாகிகளுக்கு ரஜினியும் கடிதங்கள் அனுப்ப ஆரம்பித்திருக்கிறார். அரசியல்ரீதியாக இருவரின் மன்றங்களை மதிப்பிட வேண்டும் என்றால், ரஜினிக்குப் பலம் அதிகம். எண்ணிக்கை சார்ந்து மட்டும் அல்ல; ஏதோ ஒருவகையில் அரசியலோடு ரஜினி மன்றத்தினர் தொடர்ந்து உறவாடி யும் வந்திருந்திருக்கின்றனர். கமல் மன்றத்தினருக்கு அந்த அனுபவம் கிடையாது. அதேசமயம், ரஜினி மன்றங்களில் ஏராளமான கோஷ்டிகள் உண்டு. சீனியர் – ஜூனியர் அரசியல் உண்டு.

கமல் மன்றங்களுக்கு இந்தச் சுமை கிடையாது. அதேபோல, பொதுமக்கள் மத்தியில் ரஜினி ரசிகர்கள் மீது ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்ற பார்வை உண்டு. அரசியல் தளத்தில் அது எப்படி மாறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

எதிர்கொள்ளும் முக்கிய சவால்

அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து இருவருமே தங்கள் கட்டமைப்புப் பலத்தைத் தூக்கி நிறுத்துவதில் மும்முரமாகி இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளின் கட்டமைப்புப் பாணியை ரஜினி தேர்ந்தெடுத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் வலுவானவர்களாக அங்கு இருப்பார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் - ஆஆக பாணியை கமல் தேர்ந்தெடுத்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளர்கள் அங்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அமைப்பின் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் முன்னதாக மன்றத்தில் இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருபுறங் களிலுமே ஒலிக்கிறது. இருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான சவால் இதுதான். அமைப்புக்குப் புதிதாக வருபவர்களைப் பழையவர்கள் எப்படிப் பார்க்கப்போகிறார்கள்? பழையவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருக்குமா? இந்தக் கேள்வி இரு கூடாரங்களிலுமே ஓங்கி ஒலிக்கிறது. வெளிப்படையான அதிருப்தியையும் பார்க்க முடிகிறது.

கமல் அமைத்திருக்கும் 15 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவில், ஆர்.தங்கவேலு ஒருவர்தான் ரசிகர் மன்றப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதும் ‘லைக்கா’ நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த ராஜு மகாலிங்கத்துக்குத் தன்னுடைய அமைப்பில் எடுத்த எடுப்பிலேயே மாநிலச் செயலாளர் பதவியை ரஜினி அளித்திருக்கிறார் என்பதும் இங்கே சின்ன உதாரணங்கள். அரசியல் என்று வந்தவுடன் இதுநாள் வரை கொஞ்சமும் தொடர்பில்லாதவர்கள் அதிகாரத்துக்காக இங்கு வருகிறார்கள், அவர் களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். “கீழே வேலைசெய்ய நாங்கள்; மேலே பதவிக்குப் புதியவர்களா?” என்ற குரல் கீழே கேட்கிறது. “ரசிகர் மன்றங் களுக்கும் அரசியல் கட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?” என்ற குரல் மேலே கேட்கிறது.

கொள்கையும் கூட்டணியும்

ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிகளாகும்போது கட்டுமான உதவியில் அரசியல் அனுபவஸ்தர்களின் உதவி முக்கியமானது. திமுகவைப் பிளந்துகொண்டு வந்ததால், எம்ஜிஆருக்கு இயல்பாகத் தன்னுடைய கட்சிக்குள்ளிருந்தே அதற்கான ஆட்கள் கிடைத்தார்கள். விஜயகாந்த் வெளியிலிருந்து வந்தவர்களை அரவணைத்துக்கொண்டார். ரஜினி – கமல் என்ன செய்யப்போகிறார் கள் என்பது தெரியவில்லை.

ரஜினி ‘ஆன்மிக அரசியல்’ என்கிறார். கமல் ‘திராவிட மும் தேசியமும்’ என்கிறார். என்றாலும் இருவர் பேச்சி லும் வெளிப்படுவது அரசியலற்ற அரசியலே என்கிறார் கள் அரசியல் விமர்சகர்கள். இருவருமே தன்னை மட்டுமே மையப்படுத்தும் தனிநபர் கவர்ச்சி அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்றாலும், கமலிடம் ஒரு இடது சாய்வும் ரஜினியிடம் ஒரு வலது சாய்வும் வெளிப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் இடது அரசியலுக்கான அமைப்பு பலம் என்கிற சூழலில், கமலுக்கு அது உதவியாகவும் அமைந்துவருகிறது. கள அரசியலில் நல்ல அனுபவமுள்ள விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போன்றோரின் ஆதரவு, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கமலுக்குக் கிடைத்திருப்பதை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்ல முடியும்.

சினிமா அரசியலுக்கான முன்னுதாரணமாக தமிழகத் தில் என்றும் பேசப்படும் எம்ஜிஆரே தேர்தல் அரசியல் என்று வரும்போது கூட்டணியைத் தவிர்க்க முடியவில்லை. ரஜினி, கமல் எப்படி விதிவிலக்காக முடியும்? தேர்தல் நெருங்கக் கூடிய சூழலில் இருவருமே தத்தமது கட்சியின் தலைமையில் கூட்டணிகளை அமைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், பாஜகவை எப்படி அணுகுகிறார் கள் என்பதே அந்தக் கூட்டணியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்கிறார்கள்.

பிரச்சார ஆயுதங்களாகின்றனவாஅடுத்த படங்கள்?

2019 தொடக்கத்துக்குள் இருவருமே களத்துக்குத் தயாராகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கமலைப் பொறுத்தவரையில், அடுத்தது திருச்சி பொதுக்கூட்டம். தொடர்ந்து, எட்டு கிராமங்களைத் தத்தெடுப்பது, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் என்று அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார். ரஜினி தன்னுடைய நிர்வாகிகள், காணொலிகள் வழி ரசிகர்கள் கூட்டங்களில் பேசுவது, அமைப்பைப் பலப்படுத்துவது என்று திட்டத் தில் இருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழகத் தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாய்ப்புகளும் இருக்கும் சூழலில் தேர்தல் நெருங்கியதுமே ரஜினி களத்தில் இறங்குவார் என்று தெரிவிக்கிறார்கள்.

இருவருமே இதற்கிடையே சினிமா வழி அரசியல் பேசுவதிலும் கவனமாக இருக்கின்றனர். ரஜினிக்கு ஏற்கெனவே ‘காலா’, ‘2.0’ இரு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜுடன் புதிய படத்தில் கைகோத்திருக்கிறார். கமல் ‘விஸ்வரூபம் 2’ படத்தைக் கொண்டுவந்த கையோடு ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். புதிதாக வரவிருக்கும் இருவரின் படங்களும் அரசியல் பேசுபவை.

இருவருமே ஒருவித கார்ப்பரேட் தன்மையிலான நிறுவனம் தொடங்குவதுபோலத்தான் கட்டமைப்பு உருவாக்கத்தை அணுகிவருகிறார்கள் என்றாலும், சூட்டோடு சூடாக அரசியல் கட்சியைத் தொடங்கியது, நிர்வாகிகளை அறிவித்தது, தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக அன்றாடம் அறிக்கை வெளியிடுவது, அமைப்பில் உள்ளவர்களுடன் தொடர்ந்து உரையாடு வது என்று மன்றத்தை முழுக் கட்சியாக்கும் முதல்கட்ட ஏற்பாடுகளில் கமலின் கை ஓங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ரஜினியிடம் பதுங்கல் தெரிகிறது. களத்தில் அவர் கால் வைத்ததும்தான் யுத்தத்தின் முழுப் பரிமாணம் தெரியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x