Published : 29 Mar 2018 09:28 AM
Last Updated : 29 Mar 2018 09:28 AM

வெள்ளமாகப் பெருகப்போகும் தண்ணீர்ப் பிரச்சினை!

கு

ன்றா வளர்ச்சிக்குத் தண்ணீர் இன்றியமையாதது என்பதற்காக, இயற்கையைச் சார்ந்த தீர்வுகள் பல 2030-ம் ஆண்டுக்கான செயல்திட்டமாக உருவாக்கப்படுகின்றன. தண்ணீர் தொடர்பான நம்முடைய பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இதில் கொள்கைகளும் இலக்குகளும் இடம்பெறும். இப்போதைக்குப் பிரச்சினையைக் கவனிப்போம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறை இனியும் பலன் தராது.

தொடர் உணவுதானிய உற்பத்தி, மனிதர்களின் குடியிருப்புகளில் மேம்பாடு, எட்டும் தொலைவில் குடிநீர் -சுகாதார வசதிகள், தண்ணீர் தொடர்பான இடர்கள் ஏற்படாமல் தவிர்த்தல், பருவநிலை மாற்றத்தால் நீராதாரங்களில் ஏற்படும் மாற்றங்களைச் சீரமைத்தல் ஆகியவைதான் தீர்வுகளாக இருக்கும்.

தண்ணீர் தொடர்பான சவால்கள் புறந்தள்ள முடியாதவை. 2017-ல் 760 கோடியாக உள்ள மக்கள்தொகை 2050-ல் 940 கோடி முதல் 1,020 கோடியாக உயர வாய்ப்பிருக்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கினர் நகர்ப்புறங்களில் வசிக்கப்போகின்றனர். இந்த வளர்ச்சியில் பாதிக்கும் மேல் ஆப்பிரிக்கா (130 கோடி) ஆசியா (75 கோடி) கண்டங்களில் இருக்கும். வளரும் நாடுகளிலும் வளரும் பொருளாதாரங்களிலும்தான் தண்ணீர் தேவை அதிகரிக்கப் போகிறது.

பருவநிலை மாறுதலால் உலக தண்ணீர் சுழற்சியும் மாறுகிறது. மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் மேலும் அதிகமாகவும், மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளில் மேலும் குறைவாகவும் பெய்யப்போகிறது. ஆண்டில் ஒரு மாதம் தண்ணீரே கிடைக்காத பகுதிகளில் 360 கோடிப் பேர் வாழ்கின்றனர். 2050-ல் இந்த எண்ணிக்கை 480 கோடி முதல் 570 கோடி வரை அதிகரிக்கும். இப்போது அன்றாடம் 680 பில்லியன் கன மீட்டராக இருக்கும் தண்ணீர்த் தேவை 2025-ல் 833 பில்லியன் கன மீட்டராகவும் 2050-ல் 900 பில்லியன் கன மீட்டராகவும் உயரும். ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகள், 2050-ல் மேலும் நெருக்கடியில் சிக்கும். ஆசியாவில் இந்தியா அதிக நெருக்கடியைச் சந்திக்கப்போகிறது. பெரும்பாலான நீர்நிலை கள் பெரு நகரங்கள், சிறு நகரங்களுக்கு அருகில் - அதிலும் மாசடைந்த நிலையில் - உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப் பிரச்சினைகள் எண்ணிக்கையில் அதிகமாகவும் தீவிரமாகவும் பெருகிவருகின்றன.

தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டும் பிரச்சினையல்ல, கிடைக்கும் தண்ணீரும் தரமற்றதாக உள்ளது. 1990-கள் தொடங்கி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கண்டங்களில் பெரும்பாலான ஆறுகளில் நகரங்களின் சாக்கடைகள், ஆலைகளின் ரசாயனக் கழிவு கள் கலந்து மாசுபட்டுவருகின்றன. நகரக் கழிவுகளும் ஆலைக் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமலேயே 80% அளவுக்கு ஆறுகளில் கலக்க விடப்படுகிறது. இந்த நீரைக் குடிக்கும் மனிதர்களை மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழல்களை யும் மாசடைந்த நீர் கெடுத்துக்கொண்டிருக் கிறது. நதிகள் மாநிலங்களுக்கிடையே பாய்வதால், நதியைத் தூய்மைப்படுத்த பிராந்திய அளவில் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் பாதிக்கும் மேல் மாசடைந்துவிட்டன என்று மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. சிறியதும், பெரியதுமான 650 நகரங்களின் கழிவுநீர், 302 ஆறுகளைப் பாழாக்கிக்கொண்டிருக்கிறது. 2009-ல் ஒரு நாளைக்கு 3,80,000 லட்சம் லிட்டர் என்ற அளவில் கலந்த சாக்கடை நீர் 2015-ல் 6,20,000 லட்சம் லிட்டர் என்று உயர்ந்திருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் பாயும் 40 ஆறுகளில் 16 இவற்றால் மாசடைந்திருக்கிறது. இயற்கையிலான வழிமுறைகளில்தான் நதிகளைத் தூய்மைப்படுத்த முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகள் இதில் முக்கியம். இது பயிர்வாரி முறை, பருப்பு சாகுபடி, உயிரி பூச்சிக் கொல்லிகளை மட்டும் பயன்படுத்துவது போன்றவற்றால் மட்டுமே சாத்தியம். இயற்கை சார்ந்த விவசாயத்தில் நில அரிமானம், தண்ணீர் மாசுபடுதல், தண்ணீர் வீணாகுதல் அனைத்தும் கட்டுப்படும்.

தண்ணீரைச் சுத்தப்படுத்த வடிநிலங்களை அதிகப்படுத்துவதும் பலன் தரும். கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால், நகரங்களைச் சுற்றி தோட்டங்களை யும் மரங்களையும் வளர்த்து சூழலைப் பசுமையாக்கலாம், காற்றையும் தூய்மைப்படுத்தலாம். நீர் மேலாண்மைத் திட்டம் இதில் முக்கியமானது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்பையும் பெருக்கும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் அதிகரிக்கும். வெப்பம் அதிகமாக பருவநிலை மாறுவதையும் குறைக்க உதவும். இயற்கையான தீர்வுகள் என்பவை பாரம்பரியமானவை, உள்ளூர் தொழில்நுட்பத்தை, உள்ளூர் மக்களின் அனுபவ அறிவைக்கொண்டே எளிதில் செயல்படுத்தக்கூடியவை. ஆறுகள் பாயும் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள் இதில் முக்கியப் பங்காற்ற முடியும்.

இயற்கை எப்படிப் புறக்கணிக்கப்பட்டு, தண்ணீர் மேலாண்மைச் சீர்கேடு அடைந்தது என்பதற்கு தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை நல்ல உதாரணம். திட்டமிடப்படாத நகர்ப்புற வளர்ச்சியும், நீர் நிர்வாகத் திட்டம் எதுவும் கையாளப்படாததும் நகரைத் தண்ணீர் பற்றாக்குறையின்போதும், தண்ணீர் (மழை நீர்) உபரியின்போதும் கடுமையாகப் பாதித்துவருகிறது. சென்னை மாநகரம் திட்டமிடப்படாத வகையில் வளர அனுமதிக்கப்படுவதற்கு முன்னால், நகருக்குள்ளும் நகரைச் சுற்றியும் குளங்கள், குட்டைகள், ஏரிகள், வாய்க்கால்கள், சதுப்பு நிலங்கள், ஆறுகள் ஏராளமாக இருந்தன. நீர்ப்பெருக்கு அதிகரித்தாலும் அது குளங்கள், குட்டைகள், ஏரிகளை நிறைத்துவிட்டு, வாய்க்கால்கள் வழியாக வடிந்து உபரிநீர் மட்டும் கடலில் கலந்துவிடும்.

இதில் பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் தூர்ந்துபோனதாலும், நீர்வழிகளை மறித்து வீடுகளையும் கட்டுமானங்களையும் கட்டியதாலும், மழை நீர் பெருக்கெடுத்தபோது ஓட இடம் இல்லாமல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பாக முளைத்த குடியிருப்புகளைச் சூழ்ந்து தேங்கத் தொடங்கியது. இதுதான் சென்னையின் வரலாறு காணாத வெள்ளத்துக்கு முக்கியக் காரணம். சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம், கொற்றலையாறு என்று ஆறுகள் இருந்தாலும், அவற்றின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, வண்டல் படியவிடப்பட்டது. எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் வாங்கும் திறன் படைத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அடையாளம் தெரியாமல் சுருங்கிவிட்டது.

இயற்கைப் பேரிடர்களுக்குக் காரணம், இயற்கையின் வழிகளைச் செயற்கையாக நாம் அடைப்பதுதான். திட்டமிடப்படாத நகர்ப்புற வளர்ச்சி, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறியமை போன்ற காரணங்களால் வெள்ளம் ஏற்பட்டது. வறட்சிக் காலத்தில் நிலத்தடி நீரும் ஆழத்துக் குச் சென்றுவிட்டதால், கடல்நீர் உட்புகுந்து குடிநீரின் சுவையும் தரமும் குறைந்துவிட்டது.

- ஜெயகுமார் ராமசாமி, நீரியியல் நிபுணர்.

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x