Last Updated : 01 May, 2019 09:36 AM

 

Published : 01 May 2019 09:36 AM
Last Updated : 01 May 2019 09:36 AM

இந்தியாவை அறிவோம்: மத்திய பிரதேசம்

மாநில வரலாறு

மத்திய பிரதேசத்தின் பிரதான வரலாறு தொடங்குவது அசோகச் சக்கரவர்த்தியிலிருந்து. மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சகர்கள், குஷாணர்கள் போன்றோரும் சிற்றரசர்களும் பல பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம். 11-ம் நூற்றாண்டில் ராஜபுத்திரர்கள், 14-ம் நூற்றாண்டில் மால்வா சுல்தான்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. 16-ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சி. பின்னர், மராத்தாக்கள். 1853 முதல் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர், 1956-ல் மத்திய பிரதேசம் உருவானது. 2000 நவம்பர் 1-ல் இதிலிருந்து சத்தீஸ்கர் உருவானது.

புவியியல் அமைப்பு

பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநிலம். 3.08 லட்சம் சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ.) இந்தியாவின் பரப்பளவில் மத்திய பிரதேசத்தின் பங்கு 9.37%. மக்கள்தொகை 7.26 கோடி. நாட்டிலேயே ஐந்தாவது இடம். நாட்டின் மக்கள்தொகையில் 6%. ஒரு சதுர கிமீக்கு 236 பேர் வசிக்கிறார்கள் (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). இந்துக்கள் 90.89%. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 50%-க்கும் அதிகம். 15%-க்கும் அதிகமானோர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். பட்டியலின சமூகத்தினர் 15.6%, பழங்குடியினர் 21%. முஸ்லிம்கள் 6.57%, சமணர்கள், 0.78%, பெளத்தர்கள் 0.30%, கிறிஸ்தவர்கள் 0.29%.

சமூகங்கள்

அரசியல், சமூகத் தளங்களில் முன்னேறிய வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். தாக்கூர்கள், பிராமணர்கள், பனியாக்கள், காயஸ்த சமூகத்தினர் ஆகியோர் முன்னேறிய சமூகத்தினர். சாதிப் பாகுபாடு அதிகம் உள்ள மாநிலம். பட்டியலின சமூகத்தினர், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகம். 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் 49.9% அதிகரித்திருக்கின்றன; பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 15.6% அதிகரித்திருக்கின்றன.

ஆறுகள்

மத்திய பிரதேசத்தின் முக்கிய நதிகள், இம்மாநிலத்திலேயே உற்பத்தியாகின்றன. முக்கிய நதியான நர்மதை நாட்டின் ஐந்தாவது பெரிய நதி. அனுப்பூர் மாவட்டம் அமர்கண்டக் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் இந்நதி, மாநிலத்துக்குள் 1,077 கிமீ ஓடி, குஜராத்தைக் கடந்து கம்பாத் வளைகுடாவில் கலக்கிறது. 41 கிளை நதிகளைக் கொண்டது. சம்பல் நதி இந்தூர் மாவட்டத்தின் மஹூ பகுதியில் உற்பத்தியாகிறது. சோன் நதியும் அமர்கண்டக் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. தபதி, பேத்வா, கென், மாஹி என்று மொத்தம் 12 நதிகள் இம்மாநிலத்திலேயே உற்பத்தியாகின்றன.

காடுகள்

நாட்டிலேயே அதிகமான வனப் பகுதிகளைக் கொண்ட மாநிலம். 94,689 சதுர கிமீ காடுகளைக் கொண்டது. பரப்பளவில் இது 30.71%. பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகள். காப்புக் காடுகள் 65.36%, பாதுகாக்கப்பட்ட காடுகள் 32.84%, வகைப்படுத்தப்படாத வனப் பகுதிகள் 1.7%. விந்தியா – கைமூர் மலைத்தொடர் பகுதி, மொரேனா – ஷிவ்புரி பீடபூமி பகுதி, நர்மதையின் தெற்குக் கரைப் பகுதிகள் ஆகியவை இம்மாநில வனப் பகுதிகளில் முக்கியமானவை. தேக்கு, சால் (குங்கிலியம்) போன்ற மரங்கள் அதிகம் விளைகின்றன.

நீராதாரம்

நீராதாரம் பெருமளவில் நிலத்தடி நீரைச் சார்ந்தது. கிராம மக்களில் 90% பேரும், நகர மக்களில் 50% பேரும் நிலத்தடி நீரை நம்பியிருக்கிறார்கள். சராசரியாக சுமார் 1,100 மிமீ மழைப்பொழிவை இம்மாநிலம் பெறுகிறது. சுமார் 70 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் நிலத்தடி நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்திரசாகர், பரகி, பாண்சாகர், காந்தி சாகர் போன்ற அணைகள் முக்கியமானவை.

கனிம வளம்

இன்றைய தேதியில் இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே வைரச் சுரங்கம் இம்மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள மஜ்கவா சுரங்கம்தான். ஆண்டுக்கு சுமார் 30,000 காரட் வைரம் இங்கு உற்பத்திசெய்யப்படுகிறது. ஆசியாவின் மிகவும் அடர்த்தியான நிலக்கரி மடிப்பு சிங்க்ரெளலி, சீதி போன்ற மாவட்டப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளி தாமிரச் சுரங்கம் இங்குதான் உள்ளது. சிமென்ட் அதிகம் உற்பத்தியாகும் மாநிலமும் இதுதான்.

பொருளாதாரம்

2016-17-ல் இம்மாநிலத்தின் ஜிடிபி மதிப்பு ரூ.7.13 லட்சம் கோடி. இது 2015-16-ன் திருத்தப்பட்ட ஜிடிபியைவிட 18% அதிகம். இதில் சேவைத் துறை 45%, விவசாயம் 37%, உற்பத்தித் துறை 21%. மொத்த மக்கள்தொகையில் 62% பேர் விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள். சேவைத் துறையில் 33% பேரும், உற்பத்தித் துறையில் 5% பேரும் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். 2005-2010 காலகட்டத்தில் 3.6% ஆக இருந்த வேளாண் துறை வளர்ச்சி விகிதம், 2010-15 ஆண்டுகளில் 13.9% ஆக அதிகரித்திருக்கிறது.

அரசியல் சூழல்

மத்திய பிரதேச மாநிலம் உருவான பின்னர், 1957-ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் தொடங்கி காங்கிரஸின் கையே ஓங்கியிருந்தது. கட்சிக்குள் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் 1985 வரை தொடர்ந்து வென்று ஆட்சியமைத்துவந்தது. அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமாகத் தனது ஆதரவுத் தளத்தையும் இழந்துவந்தது. 1957 தேர்தலில் வெறும் 9.8% வாக்குகளுடன் 10 இடங்களை மட்டுமே வென்ற பாரதிய ஜன சங்கம் படிப்படியாக வளர்ந்துவந்தது. 1990 சட்டமன்றத் தேர்தலில் 220 இடங்களில் வென்று இம்மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது பாஜக. இன்று வரை காங்கிரஸும் பாஜகவும்தான் பிரதானக் கட்சிகள். 2005 முதல் நீடித்த பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானின் ஆட்சிக்கு 2018 தேர்தலில் ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ். எனினும், காங்கிரஸைவிட (40.9%) பாஜகவின் (41%) வாக்கு விகிதம் அதிகம். எனவே, இந்தத் தேர்தலில் கடும் போட்டி இருக்கும்.

முக்கியப் பிரச்சினைகள்

வேலைவாய்ப்பின்மைதான் பிரதான பிரச்சினை. நகர்ப்புறவாசிகளில் 70% பேரும், 59% கிராம மக்களும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைப் பிரதானமாகக் கருதுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. சுகாதாரத் துறை பிரச்சினைகள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. வன உரிமைச் சட்டத்தை (2006) நிலைநிறுத்த வேண்டும் என்றும், இந்திய வனச் சட்டம் 1927-ல் திருத்தம் செய்யக் கூடாது என்றும் பழங்குடியினர் போராடிவருகிறார்கள். குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் கைகொடுக்கும் என்று பாஜக நம்பலாம். ஆனால், மாநிலத்தில் பலருக்கு இந்தத் தொகை சென்று சேரவில்லை என்று புகார்கள் எழுந்திருக்கின்றன.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x