Published : 21 Apr 2019 02:30 PM
Last Updated : 21 Apr 2019 02:30 PM

அசத்தல் அசத்தலாய் அடை வகைகள்!

ஜெமினி தனா

பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், ஸ்ப்ரிங் ரோல், கட்லெட்,  ப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஸ்ப்ரிங் ரோல், ஸ்ப்ரிங் பொட்டேடோ...என்று சத்தில்லாத சக்கை உணவுகள்தான் சாட்வகைகள். அதையும் ஸ்டைலிஷாக சப்புக்கொட்டி சாப்பிடும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இவற்றை வேறென்ன தெரியும்.

 விதவிதமாய் வித்தியாசமாய் சத்துக் குறையாத புரதங்களும், வைட்டமின்களும் நிறைந்த சத்தான மாலை நேர சத்தான உணவு வகைகள் பற்றிப் பார்ப்போமா?

    முன்பெல்லாம்  வீட்டில் எல்லோரும்  ஓய்வாக இருந்தால் காரப் பணியாரம், இனிப்பு பணியாரம், மிளகு வடை, கார  பருப்பு அடை, நவ தானிய அடை, இனிப்பு அடை…. கம்பு அடை, முருங்கை அடை, அரிசி அடை, கேழ் வரகு அடை, அரிசி ரொட்டி, உப்பு உருண்டை, பொரி உருண்டை... இவற்றுள் ஏதேனும் ஒன்றை பாட்டி  செய்து தர, சுற்றி எல்லோரும் உட் கார்ந்து சாப்பிடுவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, அவியல், வெல்லம் என்று ஜோடியும்  வெகு பொருத்தமாகவே இருக்கும். இந்தப் பலகாரங்கள்தான் குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாகவே இருந்தது.

     பாரம்பரிய சமையல் என்று சொல்லும்போதே முந்தைய தலைமுறையினருக்கு சில நொடியாவது மனமும், நாவும் மயங்கவே செய்யும்.  இத்தகைய உணவுகள் நம் முன்னோர்களின் வாழ்க்கையை நோய் நொடியே அண்டாமல் பக்குவமாக வைத்திருந்தது. பாட்டி, கொள்ளுப்பாட்டியுடன் எள்ளுப் பாட்டியின் ஆரோக்கியத்தையும் பார்த்து  வளர்ந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். இன்று மத்திய வயது பெற்றோர்களின் ஆரோக்கியத்தையே கவலையுடன் பார்க்கிற சூழ்நிலையில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

     இன்றைய சூழ்நிலையில் இவையெல்லாம் பழைய பலகாரங்களாகி விட்டாலும்  கேழ்வரகு அடை மட்டுமே எல்லோருக்கும் தெரிந்த பிரதான உணவு. இந்த பலகாரங்கள் எதற்குமே மெனக்கெட தேவையில்லை. எளிமையான முறையில் செய்யக்கூடிய  மாலை நேர பலகாரங்களை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். குறிப்பாக அடை..

    அகன்ற சட்டியில் மெத்மெத்தென பருமனாக ஊற்றப்படும் அடையை அடுப்பில்  மிதமானத்தீயில் வைத்து நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவைத்து சிவக்க விட்டு எடுப்பார்கள். கேக் போல்  பருமனாக இருக்கும் அதை ஆறாக வெட்டி துண்டுகளாக்கிக் கொடுப்பார்கள். இப்போது அடை, தோசை எல்லாமே ஒன்றுபோலாக இருக்கிறது.  அடைக்கு  ஜோடியாக எல்லா காய்கறிகளையும் சேர்த்து அவியல் வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் ருசிக்கு இணையே இல்லை.

பருப்பு அடைக்கு பெரிய அளவில் வேலையே இல்லை. தயாரிப்பது ரொம்பவே சுலபம். எளிதாகச் செய்யலாம்.  

பருப்பு அடை: (4 பேருக்கு)

  க.பருப்பு, உ,பருப்பு, து,பருப்பு, கறுப்பு கொண்டைக்கடலை,  வெள்ளைக் கடலை – தலா 1 தேக்கரண்டி.

கொள்ளு, பாசிப்பருப்பு – கால் தேக்கரண்டி,

நறுக்கிய சாம்பார் வெங்காயம் –1கப், 

பச்சரிசி, புழுங்கலரிசி – தலா 1 ஆழாக்கு,

சோம்பு- 2 டீஸ்பூன்,

வரமிளகாய் – காரத்துக்கேற்ப,

பூண்டு -2 பல்,

மெல்லியதாக சீவி நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் -2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, நல்லெண்ணெய் –தேவைக்கேற்ப.

 செய்முறை:

      மாலை நேரங்களில் அடை செய்வதாக இருந்தால் காலையில் கொண்டைக் கடலை, வெள்ளைக்கடலை, கொள்ளை ஊறவைக்கவும். மாவு அரைப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்பு பாசிப்பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு- சுத்தம் செய்து ஊறவைக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசியையும் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.

 கடலையும், கொள்ளையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு பருப்புவகைகளையும் மிக்ஸியில் அரிசி நொய் பதத்துக்கு அரைத்து வைக்கவும். அரிசியையும், சோம்பு, வரமிளகாயையும் சேர்த்து மிக்ஸியில் ரவைபோல் சன்னமாக அரைத்து அகன்ற பாத்திரத்தில் அரைத்த பருப்பு, கடலை விழுது உப்பு சேர்த்து கலக்கவும்.

வாணலியில் தேவையெனில் தாளிப்புப் பொருள் சேர்த்து தாளித்து வெங்காயம், மெல்லிய தேங்காய் துண்டங்கள், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சிட்டிகை சேர்த்து  நன்றாக வதக்கி மாவில் கொட்டவும்.  தேவையெனில் நறுக்கிய கொத்த மல்லித் தழைகளைச் சேர்க்கலாம்.

 நான்ஸ்டிக் தவா உபயோகப்படுத்தாமல் கல் தவா அல்லது அகலமான அடி கனமான வாணலியில் நான்கு கரண்டி மாவை மொத்தமாக ஊற்றி கால் மணிநேரம் மிதமானத் தீயில் வைத்து, இருபுறமும் சிவக்க விட்டு திருப்பி திருப்பி போட்டு எடுக்கவும். நான்ஸ்டிக் தவாவில்  மெல்லியதாக ஊற்றாமல் கனமாக ஊற்றுங்கள். இதற்கு சைடு டிஷ் அவியல், கெட்டி தேங்காய்ச் சட்னி, வெல்லம் ஏற்றது.

அவியலிலும் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு.

அடைக்கான அவியல் செய்முறை யும் எளிதானது…

அவியலுக்கு தேவையானவை:

 வாழைக்காய், முருங்கைக்காய்- தலா 1,

வெண்டைக்காய்-3,

அவரைக்காய்-5

கேரட் -1,

உப்பு – 1

டீஸ்பூன், தயிர் – 1 தேக்கரண்டி,

தண்ணீர் தேவைக்கேற்ப. 

தேங்காய்த்துருவல் – 1 கப்,

சீரகம் – 2 டீஸ்பூன்,

பூண்டு -5 பல்,

மஞ்சள் – 1 டீஸ்பூன், பூண்டு தேவையெனில்,

பச்சைமிளகாய் – 2,

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்  தேவைக்கு…

செய்முறை:

    காய்கறிகளை நீள்வாட்டில் மெலிதாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். வாழைக்காயை மட்டும் தனியாக வேக வைத்து எடுக்கவும். பூண்டு, சீரகம், பச்சைமிளகாயைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காய்த்துருவல், சிறிய வெங்காயம்- 5 சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் தே.எண்ணெய் விட்டு… வேகவைத்த காய்கறிகள்… அரைத்த விழுது சேர்த்து தேவையெனில் நீர் விட்டு உப்பு சேர்த்து  கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும் மேலும் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும். கமகம மணத்துடன் அவியலும் அடையும் மணமாக இருக்கும். 

  பருப்புகளில் உள்ள புரதங்கள், காய்களில் உள்ள வைட்டமின்கள் வேண்டிய அளவு உடலுக்கு போதிய சத்துக்களைக் கொடுக்கும். இதேபோன்றுதான் மாலை நேரங்களில் செய்யப்படும்  தாளிப்பு பொருள்  வெங்காயம் சேர்த்து இட்லிமாவில் ஊற்றப்படும் கார குழிப்பணியாரம், வெல்லம், தேங்காய்த் துருவல் இட்லி மாவில் சேர்த்து ஊற்றப்படும் இனிப்பு பணியாரமும், அரிசி மாவில் செய்யப்படும் உப்பு உருண்டை, கம்பு அல்லது ராகிமாவில் உப்பு சேர்த்து வெங்காயம், முருங்கைக்கீரை  சேர்த்த அடை இப்படி எல்லாமே எளிய முறையில் செய்யக்கூடியவைதான்.

  கூடுமானவரை சத்துக்கள் நிறைந்த இந்த பாரம்பரிய உணவுகளையே குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாக செய்து கொடுத்து அசத்துங்கள்.

ஆரோக்கியம் நிறைந்த  பாரம்பரிய அடைவகைகளுக்கு மாறுவோம்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x