Published : 21 Apr 2019 10:28 AM
Last Updated : 21 Apr 2019 10:28 AM

ஞாயிறு அரங்கம்: என்னுடைய குழந்தைப் பருவம் அன்றோடு முடிவுக்கு வந்தது!

தமிழ்த் திரையுலகின் எதிர்மறை நாயகர்களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் எம்.என்.நம்பியார். குணச்சித்திர பாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரைகளைப் பதித்தவர். கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் பழுத்த ஆன்மீகவாதியாய் வாழ்ந்தவர்.

திரைப்படத் துறையினரால் ‘சுவாமி’ என்று மதிப்போடு அழைக்கப்பட்டவர். எம்.என்.நம்பியாரின் பேரன் எம்.என்.தீபக் நம்பியார் தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை பாணியில், அவர் சொல்ல சொல்ல கேட்டு ஆங்கிலத்தில் புத்தகமாக்கியிருக்கிறார். தலைப்பு ‘நம்பியார் சுவாமி: தி குட், தி பேட் அண்ட் தி ஹோலி’. புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கிறார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்தப் புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்:

“செருவைஷி என்ற கிராமம் கேரளத்தின் வட பகுதியில் கண்ணூரிலிருந்து அரை மணி நேர நடைதொலைவில் உள்ளது. மலபாரின் இதயம் அப்பகுதி. ஆண்டு முழுவதும் பசுமை பூத்திருக்கும். ஊரின் நடுவில் செல்லும் ரயில்பாதை, குடியிருப்பை இரு பகுதியாகப் பிரிக்கும். மதறாஸிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் போடும் இரைச்சல் ஊர் முழுக்கக் கேட்கும். காலம் என்னை ஒருநாள் மதறாஸப்பட்டணத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று எனக்குத் தெரியாது.

எங்கள் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த பையன் நான். பிறந்த நாள் 7.3.1919. நான் பிறந்தபோதே என் அம்மா கல்யாணி, அப்பா கேளு இருவருமே நாற்பது வயதைக் கடந்துவிட்டார்கள். மூத்த அக்காவுக்கு வயது 24, அடுத்தவளுக்கு 16, அண்ணனுக்கு 10. இதனால், என்னை வளர்த்தது முழுக்க என் அக்காக்கள்தான். கடைக்குட்டி என்பதால் செல்லமும் கவனிப்பும் அதிகம்.

என்னுடைய அப்பா, வீட்டில் ஒரு சர்வாதிகாரி. அவரிடம் பாசத்தை எதிர்பார்க்கக் கூடாது, அவர் அருகிலேயே போகக் கூடாது என்று மிக இளம் வயதிலேயே தெரிந்துகொண்டேன். ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக இருந்தார். பகல் முழுக்க நீண்ட நேரம் வேலைபார்ப்பார், மாதம் 3 ரூபாய் சம்பளம். எங்கள் குடும்பம் பட்டினியில்லாமல் சாப்பிட அது போதுமானது. பல இரவுகள் குடித்துவிட்டு வருவார். அவர் வருவதற்குள் நாங்கள் படுத்துவிடுவோம். அப்பா எங்களை எழுப்பி அடிக்காமல் இருக்க வேண்டுமே என்று சாமியை வேண்டிக்கொள்வோம்.

நான் எப்போதுமே குறும்பு செய்துவிட்டு மாட்டிக்கொள்வேன். பெரிய அக்காதான் என்னைக் காப்பாற்றுவார். இது தெரியவந்தால் அப்பா என்னைப் பிரம்பால் பின்னி எடுத்துவிடுவார். ஒருநாள் அப்படித்தான் நையப்புடைத்துவிட்டார். அடுத்த நாள் ஊட்டிக்குப் புறப்பட்டார். ‘அப்பா எப்போது திரும்பி வருவார்?’ என்று அம்மா என்னைக் கேட்டாள். ‘அப்பா இனி திரும்பி வரவே மாட்டார் அம்மா’ என்றேன். ஊருக்குத் திரும்பும் வழியில் அப்பா இறந்துவிட்டதாக இரண்டு நாள்களுக்குப் பிறகு செய்தி வந்தது.

மிகப் பெரிய வீட்டில் வசித்தாலும் நாங்கள் பணக்காரர்கள் இல்லை. அப்பா இறந்த பிறகு எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வரிசையாக வந்தார்கள். அப்பா வாங்கியதாக அவர்கள் சொன்ன கடன்களை அடைக்க அம்மா அந்த வீட்டையே விற்பதற்குக் கட்டைவிரல் ரேகையைப் பத்திரத்தில் பதித்தார். ஒரே நாளில் நாங்கள் நிர்க்கதியானோம். உறவினர்கள், நண்பர்கள் வந்து அனுதாபப்பட்டார்கள். நாளாக நாளாக அவர்கள் வருகை குறைந்து, யாருமே வராமல்போனார்கள்.

என்னுடைய அக்காள் கணவரும் என் வருங்கால மனைவி ருக்மிணியின் தாய்மாமனுமான உதயன், நானும் என்னுடைய அண்ணனும் ஊட்டியில் படிக்க வேண்டும் என்று யோசனை கூறினார். ஊட்டியில் ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.

சிலர் அங்கே சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார்கள். ‘இவர்கள் யார், என்ன செய்கிறார்கள்?’ என்று ஒருவரைக் கேட்டேன். ‘இவர்கள் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனியைச் சேர்ந்த கலைஞர்கள்’ என்றார். அங்கே ஆண் வேடம், பெண் வேடமெல்லாம் பையன்களே போடுவார்கள். அன்று மாலை முழுக்க அவர்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 அவர்கள் புறப்பட்டபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அங்கிருந்த பெரியவரை அணுகி, ‘என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன். ராஜமாணிக்கம் பிள்ளையிடம்தான் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது. நாடகங்கள் இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடக்கும்.

முதல் வரிசையில் உட்கார்ந்து இரண்டு நாட்களும் நாடகம் பார்த்தேன். அவர்களுடைய கற்பனை உலகில் நானும் பயணித்தேன். பிறகு, வீட்டுக்கு வந்து உதயனிடம், ‘நான் நாடகக் கம்பெனியில் சேரட்டுமா?’ என்று கேட்டேன். என் அண்ணன் உருப்பட மாட்டான் என்று புரிந்துகொண்ட அவர், நீயாவது உருப்படியாக எதையாவது செய் என்று அனுமதித்தார். நாடகக் குழு புறப்பட்டபோது நானும் அவர்களுடன் சென்றேன். என் குழந்தைப் பருவம் அன்றோடு முடிவுக்குவந்தது.

திரைப்படங்களைவிட நாடகங்களில் நடிப்பது சிரமமானது. வசனங்களையும் மறக்கக் கூடாது, நடிப்பதிலும் கவனம் சிதறக் கூடாது. ரீடேக்குக்கு வாய்ப்பே இல்லை. வசனத்தை மறந்து மரம் மாதிரி நின்றாலோ, வசனத்தைச் சரியாகப் பேசாமல் வாய் குழறினாலோ ரசிகர்கள் ஏளனம் பொங்க ஊளையிட்டுக் கூச்சலிடுவார்கள்.

பிறகு, அவசர அவசரமாக மீதி வசனங்களைப் பேசிவிட்டு, நாடகம் எப்போதடா முடியும் என்று பதைபதைப்போடு காத்திருக்க நேரும். அந்நாளில் ஒலிப்பெருக்கிகள் இல்லாததால் கடைசி வரிசையில் இருவருக்கும் வசனம் கேட்கும் வகையில் உரத்துப் பேச வேண்டும். நளினமாக நடிப்பது, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டுவது, வேடத்தை அமரிக்கையாகச் செய்வது என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. ஏற்றஇறக்கத்தோடு செந்தமிழ் வசனங்களைத் தொடர்ந்து பேசுவதே அந்நாளைய வழக்கம்.

ராவணனாக வேடமிட்டு நடித்தேன். அடுத்த ஏழு ஆண்டுகள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் நாடகம். இரவில் நாடகம், பகலில் அடுத்த ஊருக்கு டேரா தூக்குவது என்று ஓயாமல் வேலை. நிம்மதியாக இரவு முழுக்கத் தூங்க எப்போதுதான் ஓய்வு கிடைக்கும் என்று நினைத்து சில நாள்கள் அழுதிருக்கிறேன். அப்போது சினிமா பிரபலமாகிக்கொண்டிருந்தது.

மூத்த சகாக்களுக்கு அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை. எனக்கோ விரும்பிய வேலையைச் செய்கிறோம் என்ற மகிழ்ச்சி. அத்தோடு வீட்டுக்கும் பணம் அனுப்ப முடிந்தது. என் சம்பளத்தை அம்மா பெருமையோடு வாங்கிக்கொள்வார். 1936-ல் எனக்கு மாதம் 3 ரூபாய் சம்பளம். ஓர் ஆண்டுக்குப் பிறகு மேலும் 2 ரூபாய் அதிகம். அதற்கு ஒரு நிபந்தனை, சாப்பாட்டை இனி வெளியே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று.

உனக்குத்தான் சாதியில் நம்பிக்கை இல்லையே, ஏன் நம்பியார் என்று வைத்துக்கொண்டாய் என்று பின்னாளில் பலர் கேட்பதுண்டு. நாராயணன் என்ற என் பெயரையே வைத்துக்கொள்ளத்தான் எனக்கும் ஆசை. ஏற்கெனவே நாராயணன் என்ற பெயரில் ஒருவர் அங்கே இருந்ததால் குடும்பப் பெயரை வைத்துக்கொண்டேன். அந்தப் பெயர் பழகவே எனக்குச் சிறிது காலம் ஆனது. ஆனால், காலத்துக்கும் அந்தப் பெயரே எனக்கு நிலைத்துவிட்டது!”

நம்பியார் சுவாமி: தி குட், தி பேட் அண்ட் தி ஹோலி

எம்.என்.தீபக் நம்பியார்

ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம்

நொய்டா, உத்தர பிரதேசம்-201301.

 

- எம்.என்.தீபக் நம்பியார் | தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x