Published : 09 Apr 2019 08:33 AM
Last Updated : 09 Apr 2019 08:33 AM

தலைவனுக்கு வழிவிட்ட தொண்டன்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் தன்னைக் கரைத்துக்கொண்ட வழக்கறிஞர் டி.சித்திக் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தைக்கூடத் தொடங்கிவிட்டார் சித்திக். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குழுவிலும், மாநில காங்கிரஸ் குழுவிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துவரும் சித்திக், இதுவரை எம்எல்ஏவாகக்கூட இருந்ததில்லை. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவித்ததும் அவருக்கு வழிவிட்டுவிட்டார் சித்திக். தன்னை ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுக்கும் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட சித்திக், “எவ்வளவு விலை மதிப்பானது... எவ்வளவு மகிழ்ச்சியானது... நிறைவேறியது காங்கிரஸ் யாத்திரை!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய அரசியலின் கிரேட்டா கார்போ

பத்தொன்பது ஆண்டுகளாக ஒடிஷாவைக் கட்டி ஆண்டுகொண்டிருக்கும் நவீன் பட்நாயக்கை ‘கிரேட்டா கார்போவின் ஆண் வடிவம்’ என வர்ணிக்கிறார் முதுபெரும் பத்திரிகையாளர் ரூபன் பானர்ஜி. நவீன் பட்நாயக்கை ஏன் ஒரு நடிகையோடு ஒப்பிடுகிறார்? உள்ளொடுங்கிய சுபாவத்துக்குப் பேர்போனவர் கிரேட்டா கார்போ. அவரது சுபாவத்துக்கே பொதுமக்களிடம் ஒரு மவுசு இருந்தது. நவீன் பட்நாயக்கும்கூட ஒரு பிடிபடாத மனிதராக மாயத் தோற்றத்தோடு வலம்வருகிறார். பொதுமக்களோடு ஒன்றுகலப்பதில்லை. மிக எளிதாகக் கற்றுக்கொள்ள சாத்தியம் இருந்தும் பிராந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள முயலவில்லை. இளகிய மனம், கண்ணியமான நடத்தை, குறைவான பேச்சு, வெள்ளை குர்த்தா-பைஜாமா, சாதாரண பாரகான் செருப்பு. “இதெல்லாம் ஒடிய மக்களின் பிரியத்துக்குரியவராக நவீன் பட்நாயக்கை மாற்றியிருக்கிறது. நவீன் பட்நாயக்கின் அரசை மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்கூட அவரை நிச்சயம் பிடிக்கும்” என்கிறார் ரூபன். ஆனால், சமீப காலமாக ஒடிஷாவில் பாஜக செல்வாக்கு பெற்றுவருகிறது. நவீனின் கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு தெரித்து பலரும் வெளியேறிவிட்டார்கள். 2012 பஞ்சாயத்து தேர்தலில் 854-க்கு 36 இடங்களை வென்ற பாஜக, 2017-ல் 297 இடங்களை வென்றது நவீனைக் கலவரப்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர் மீதான தனிப்பட்ட செல்வாக்கு என்ன விளைவை உண்டாக்கும் என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்ல வேண்டும்.

பிரச்சாரக் கச்சேரி

ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான நடிகை மிமி சக்ரவர்த்தி, தேர்தல் பிரச்சார மேடைகளை கச்சேரி மேடைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார். மிமி பேசத் தொடங்கியதும் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆரவாரம் எழுப்பும் பொதுமக்கள், அவர் பாட ஆரம்பித்தால் ஆழ்ந்த மவுனத்துக்குள் உறைந்து போய்விடுகிறார்கள். பாடி முடித்ததும் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளக்கிறது. நடைப்பயணத்தின்போது அவர் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய காணொலி ஒன்றும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x