Published : 17 Apr 2019 08:30 AM
Last Updated : 17 Apr 2019 08:30 AM

ஒடிஷா நலனுக்குச் செவிசாய்ப்பவர்களுக்கே ஆதரவு: நவீன் பட்நாயக்

மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது பாஜகவா காங்கிரஸா எனும் கேள்விகளுக்கு மத்தியில், ஆட்சியைத் தீர்மானிப்பதில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிஷாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்துக்கும் அதில் பிரதான இடம் இருக்கும் என்று தெரிகிறது. ஒடிஷாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸைத் தாண்டி பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. எனினும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் செல்வாக்கு சரிந்துவிடவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலைக்கு மத்தியிலும், ஒடிஷாவின் 21 தொகுதிகளில் 20 இடங்களை வென்று அசத்தியது பிஜூ ஜனதா தளம்!

1998, 2009 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த பிஜூ ஜனதா தளம், கந்தமால் பகுதியில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின்னர் கூட்டணியிலிருந்து வெளிவந்தது. அதேசமயம், பாஜகவிடமிருந்து ஒரேயடியாக விலகிவிடவும் இல்லை. 2018-ல் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அக்கட்சி வெளிநடப்பு செய்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை முதலில் ஆதரித்தார் நவீன் பட்நாயக், அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மக்களைக் கடுமையாகப் பாதித்ததைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.

இந்த முறை ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் எதிர்கொள்ளும் பிஜூ ஜனதா தளம், 80 லட்சம் பேரை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது; பெண்களுக்கான நலத் திட்டங்கள்; நகர்ப்புறக் குடிசைப் பகுதி மக்களுக்கான திட்டங்கள் போன்றவை தங்களுக்கான ஆதரவைத் தக்கவைக்க உதவும் என்று நம்புகிறது. அத்துடன், மத்தியில் அமையப் போகும் ஆட்சியைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என்று கருதப்படுகிறது. பாஜகவையும் காங்கிரஸையும் சம தொலைவிலேயே வைத்திருக்கும் நவீன் பட்நாயக், ஒடிஷா நலனில் அக்கறை செலுத்த முன்வரும் எந்தக் கட்சிக்கும் மத்தியில் ஆட்சிக்கு வர ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். வலுவான மாநிலக் கட்சிகள் தத்தமது மாநில நலன் சார்ந்தே இந்தத் தேர்தலை அணுகுவதைப் பார்க்க முடிகிறது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆஆக தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் என பல தலைவர்கள் மாநில நலன் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தத் தேர்தலின் பிரதான அம்சம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x