Published : 02 Apr 2019 10:02 AM
Last Updated : 02 Apr 2019 10:02 AM

360: லாலு மகன்களின் சகோதர யுத்தம்

லாலு குடும்பத்தாரின் உட்பூசல்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர்கள் தேர்விலும் எதிரொலித்திருக்கிறது. மஹுவா சட்டமன்ற உறுப்பினரும் லாலுவின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பைக் கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்துவந்தார். பாட்னா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல் வேட்பாளர்களை அவர்தான் தீர்மானித்துவந்தார். ஆனாலும், மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் தனது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் போல அவருக்கு அதிகாரம் இல்லை என்ற வருத்தம் இருந்தது. ‘நான் ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தை அல்ல – தேஜ் பிரதாப், மிசா பாரதி, தேஜஸ்வி மட்டுமே கட்சி அல்ல; கட்சிக்காக உழைக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். 2 தொகுதிகளுக்கு நான் 2 இளைஞர்களைப் பரிந்துரைக்கிறேன், அதைக் கட்சித் தலைமைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று ட்விட்டரில் தகவல் பதிவிட்டார். கட்சிக்குள் சில ஆதரவுக் குரல்கள் எழுந்தாலும், குடும்பத்தினர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த வாரம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்த தேஜ் பிரதாப், இப்போது அப்பா அம்மா பெயரில் லாலு-ராப்ரி கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

களமிறங்கும் முதல்வர் மகன்...

கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த மக்களவை இடைத்தேர்தலில் 2 இடங்களை இழக்கவும் செய்தது. பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே மீதான மக்களின் அதிருப்திதான் சட்டமன்றத் தோல்விக்குக் காரணம், அதன் பாதிப்பு மக்களவைத் தேர்தலில் தொடராது என்று நம்பிக்கையோடு இருக்கிறது பாஜக. மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் நீண்டகாலப் பிரச்சினைகளான விவசாயிகள் போராட்டம், குடிநீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது. அதிருப்தியைப் போக்க பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒரே உத்தியைக் கையாண்டிருக்கின்றன. பழைய வேட்பாளர்களோடு சரிபாதி புதிய முகங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள். புதிய முகங்கள் என்றால் வாரிசுகள் இல்லாமலா? முதல்வர் அசோக் கெலோட்டின் மகன் வைபவ் கெலோட், ஜோத்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x