Last Updated : 09 Apr, 2019 08:19 AM

 

Published : 09 Apr 2019 08:19 AM
Last Updated : 09 Apr 2019 08:19 AM

பிரச்சார உலா: திரும்பிப் பார்க்க வைக்கும் தினகரன்

அமமுகவைத் தனிக் கட்சியாகக்கூடப் பதிவுசெய்யாமல், அதிமுகவைக் கைப்பற்றும் நோக்கோடு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் டி.டி.வி.தினகரன். இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என்று எளிய வாய்ப்புகளையெல்லாம் அதிமுக தடுத்துவிட்டாலும்கூட, நாடாளுமன்றத் தேர்தலில் சிறு வெற்றியையாவது பதிவுசெய்தே ஆக வேண்டும் என்ற அவரது இலக்கை நோக்கி சரியாக நகர்கிறதா இந்தப் பயணம்?

காலையல்ல... மாலை...

திமுக தலைவர் ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியிலேயே ஓட்டு வேட்டையைத் தொடங்கிவிடுகிறார். முதல்வர் பழனிசாமியோ கொஞ்சம் தள்ளி ஒன்பது மணிவாக்கில் வண்டியைக் கிளப்புகிறார். ஆனால், டி.டி.வி.தினகரன் தினமும் மாலை 4 மணிக்குப் பிறகுதான் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அனைத்துமே வேன் பிரச்சாரம் மட்டும்தான். ஓரிடத்தில்கூடப் பொதுக்கூட்டம் போடுவதில்லை. கட்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம். இவர்கள் சுயேச்சையாகக் கருதப்படுவதால், பொதுக்கூட்டம் போட்டால், மொத்தச் செலவையும் வேட்பாளர் கணக்கில் ஏற்றி, தகுதி நீக்கிவிடுவார்கள் என்பதே காரணம்.

அரசியல் கட்சிகளெல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருந்தபோதே முதல் ஆளாகப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் தினகரன். அதற்கு ‘மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணம்’ என்று பெயர் வைத்திருந்த அவர், பரிசுப் பெட்டகம் சின்னம் கிடைத்த பிறகான பயணத்தை மட்டுமே பிரச்சாரப் பயணம் என்று சொல்கிறார்.

 ஒரு சட்டமன்றத் தொகுதிக்குக் குறைந்தது ஓரிடத்திலாவது அவரது வேன் நிற்கிறது. கூட்டத்தைப் பொருத்து 10 முதல் 20 நிமிடங்கள் வரையில் பேசுகிறார். மாலையில் மட்டும் பிரச்சாரம் செய்வதால் நிறைய இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. இதனால், தினமும் கடைசி இரண்டு இடங்களில் பேசுவதற்குள் இரவு 10 ஆகிவிடுவதால், கையை மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறார்.

என்ன பேசுகிறார்?

நேற்று முன்தினம் தேனியிலிருந்து உசிலம்பட்டியை அவர் கடந்தபோது இரவு 11.30 மணி. அப்போதும் அவருக்காகப் பெருங்கூட்டம் காத்திருந்தது. இரவில் வாகனத்தில் இருந்தபடியே, ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ் பக்கங்களைப் பார்த்து ஒப்புதல் தருகிறார். டிவி செய்திகளைப் பார்த்துவிட்டு அவர் தூங்குவதற்கு ஒரு மணியாகிவிடுகிறது என்கின்றனர். காலையில் தாமதமாக எழுகிறார். சில ஊர்களில் மட்டும் காலை 10 மணிக்குப் பிறகு பிரச்சாரத்துக்குப் போகிறார்.

பழைய பாணி மேடைப்பேச்சுகளை முற்றாகத் தவிர்க்கும் தினகரன், கொஞ்சம் மக்கள் மொழியில் பேசுகிறார். இது நன்றாக எடுபடுகிறது. ‘ஓபிஎஸ் - ஈபிஸ் இருவரும் துரோகிகள், மோடியின் அடிமைகள், மாநில உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள், பிரதமர் மோடி பணமதிப்புநீக்க நடவடிக்கையின் மூலம் மக்களை வீதியில் நிறுத்தினார், சிறுகுறு தொழில்களை முடக்கினார், கடந்த தேர்தலில் ஜெயலலிதா பாஜகவைப் புறக்கணித்ததால்தான், அதிமுகவை அழிப்பதற்காக எங்களைப் பழிவாங்குகிறார் மோடி, மத்தியில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று தன் குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறது திமுக, ஒருபக்கம் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும், இன்னொரு பக்கம் நான் இந்துக்களுக்கு எதிரியல்ல என்றும் பேச வேண்டிய பரிதாப நிலையில் ஸ்டாலின் இருக்கிறார், கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள், காவிரிப் பிரச்சினைக்கு காங்கிரஸும், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு கம்யூனிஸ்ட்டுகளுமே காரணம், தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து எங்களை வெற்றிபெற வையுங்கள்’ என்பதே தினகரன் பிரச்சாரத்தின் மையமாக இருக்கிறது.

இதையெல்லாம் பேசி முடித்ததும், கையில் உள்ள இரண்டு காகிதங்களில் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கிற உள்ளூர்ப் பிரச்சினைகளையும், அந்தத் தொகுதிக்கான வாக்குறுதிகளையும் வாசிக்கிறார். நெல்லை மாவட்டத்தில் நாடார் சமூகம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் அதிமுள்ள பகுதியில் பேசியபோது, தன் மீது விழுந்துள்ள முக்குலத்தோர் சமூகத்தின் தலைவன் என்ற முத்திரை தவறானது என்று விரிவாக விளக்கிப் பேசுகிறார். ஆச்சரியமூட்டும் வகையில், இங்கே வேறு தலைவர்களுக்கு இல்லாத வகையில், இவரது வேனைப் பார்த்ததுமே ஒரு இளைஞர்கள் கூட்டம் ஓடிப்போய் அப்பிக்கொள்கிறது. சிலர் வேன் மீது ஏறி கை கொடுக்கிறார்கள். யூகிக்க முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் பூவை அள்ளி முகத்துக்கு நேரே வீசுகிறார்கள். கொடியை அசைக்கிறார்கள். ஆனாலும், கோபப்படாமல் வேண்டாம் என்கிறார்.

பக்கா பிளான்

கரகாட்டம், ஒயிலாட்டம், ஃபிளக்ஸ் பேனர்கள், கொடிகள், தோரணங்கள் எதுவும் இல்லாமல் எப்படி அந்த இடத்தில் இவ்வளவு கூட்டம் கூடுகிறது? எப்படி எல்லா இடங்களிலும் மிகச் சரியாக மக்கள் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசுகிறார், ஓரிடத்தில் செய்த தவறை அடுத்த ஸ்பாட்டிலேயே எப்படித் திருத்திக்கொள்கிறார் என்று விசாரித்தால் அவரது திட்டமிட்டச் செயல்பாடுகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் அவருக்கு முன்பே ஒரு சர்வே டீம் சென்றுவிடுகிறது. எந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை அவர்களே சொல்கிறார்கள். கூட்டம் முடிந்து இரவில் அறைக்குச் செல்லும்போது, கூட்டத்தில் ரெஸ்பான்ஸ் எப்படி என்ற குறிப்பை ஒரு குழுவினர் அறிக்கை கொடுத்துவிடுகிறார்கள். இந்த இடத்தில் நீங்கள் பேசியபோது கூடியவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வளவு, அதில் நாமே அழைத்துவந்தவர்கள் இவ்வளவு, தானாகச் சேர்ந்த கூட்டம் இவ்வளவு, வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்தவர்கள் இத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் அது. இந்த இடத்தில் இப்படிப் பேசியதற்கு நல்ல வரவேற்பு, இந்த விஷயத்தைத் தவிர்த்திருக்கலாம், இதையெல்லாம் மக்கள் கண்டுகொள்ளவேயில்லை, எனவே அதை விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு விவரங்கள். எப்படி இவையெல்லாம் சாத்தியம் என்றால், ஜெயலலிதாவுக்கு இந்த வேலைகளையெல்லாம் செய்தவர் இவரது அணிதான். இப்போது அதைத் தனக்கே செய்துகொள்கிறார் என்கிறார்கள்.

பல ஊர்களில் இவரது பிரச்சாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்படுகிறது அல்லது காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். விருதுநகரில் மைக் செட் பயன்படுத்த தடைவிதித்தார்கள். இருந்தாலும், பிரச்சாரத்தைத் தடைசெய்ய முடியவில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் உதவுவதில்லை என்பதால், இவரது பிரச்சாரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகிறார். மக்களிடம் பேசுகையில் ‘இந்த ஆளை எப்படி நம்ப’ என்றும் கேட்கிறார்கள். பேச்சைக் கேட்க ஆவலாகவும் கூடுகிறார்கள். எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவேயில்லை.

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x