Last Updated : 14 Apr, 2019 09:36 AM

 

Published : 14 Apr 2019 09:36 AM
Last Updated : 14 Apr 2019 09:36 AM

இதுதான் இந்த தொகுதி: தூத்துக்குடி

தமிழகத்தின் இரண்டாவது துறைமுக நகரம் தூத்துக்குடி. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரம். சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளைப் பெற்ற தொகுதி. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. வீரபாண்டிய கட்டபொம்மன்,  வெள்ளையத் தேவன், வீரன் சுந்தரலிங்கனார், வீரன் அழகுமுத்துகோன், பாரதியார், வஉசி போன்ற ஆளுமைகளைத் தந்த பூமி.

பொருளாதாரத்தின் திசை: இத்தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் விவசாயம்,  மீன்பிடி மற்றும் உப்புத் தொழிலாகும்.  கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டித் தொழில் அதிகம். தூத்துக்குடியில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான வஉசி துறைமுகம் அமைந்திருப்பதால் அதைச் சார்ந்து  ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.  அனல்மின் நிலையங்களும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அதிகம். ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களும் உள்ளன. 

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மற்றும் கடந்த மே 22-ம் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியின் வடக்குப் பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியான மானாவாரி விவசாயம்தான். மழை பெய்தால்தான் விவசாயம் என்ற நிலை. கடந்த சில ஆண்டுகளாக மழை சரியாக பெய்யாமல் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.  மாவட்டத்தின் தென் பகுதியில் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு தாரை வார்ப்பது விவசாயத்துக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. மருதூர் அணை மற்றும் 53 பாசனக் குளங்களை நீண்ட காலமாக தூர்வாராமல் இருப்பதால் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. உப்புத் தொழில் நலிவடைந்து வருவது, ஜிஎஸ்டி வரியால் தீப்பெட்டித் தொழில் அழிவைச் சந்தித்துவருவது ஆகியவை தீர்மானிக்கும் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.

நீண்ட காலக் கோரிக்கைகள்: தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க 1-ம் கேட் மற்றும் 2-ம் கேட் பகுதியில் மேம்பாலம், சுரங்கப்பாதை, விவிடி சந்திப்பில் மேம்பாலம், புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், வஉசி துறைமுகத்தின் வெளித் துறைமுக விரிவாக்கப் பணியைத் தொடங்க வேண்டும். விளாத்திகுளத்தில் விவசாய விளைபொருட்களைச் சேமித்துவைக்க குளிர்பதனக் கிடங்கு, பம்பை- அச்சன்கோயில்- வைப்பாறு இணைப்புத் திட்டம், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா ஆகியவை பல ஆண்டு கோரிக்கை. திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தூத்துக்குடியிலிருந்து கூடுதல் ரயில் சேவை, ஸ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் போன்றவை வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஒரு சுவாரஸ்யம்: இதுவரை பெண் உறுப்பினரைத் தேர்வுசெய்யாத தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் மோதுவதால் இந்த முறை விஐபி தொகுதியாக மாறியுள்ளது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர் 30.03% உள்ளனர். பட்டியலின மக்கள் 20.16%. நாயக்கர், முக்குலத்தோர், ரெட்டியார், மீனவர்கள், வெள்ளாளர் சமூகத்தினரின் வாக்குகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: தூத்துக்குடி மக்களவை தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. 2009-ல் திமுகவும் 2014-ல் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்:

கனிமொழி – திமுக

தமிழிசை சவுந்தரராஜன் – பாஜக

பொன்குமார் – மக்கள் நீதி மய்யம்

புவனேஸ்வரன் - அமமுக

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,02,300

ஆண்கள் 6,90,106

பெண்கள் 7,12,098

மூன்றாம் பாலினத்தவர்கள் 96

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 69.73 %

முஸ்லிம்கள்: 5.50 %

கிறிஸ்தவர்கள்: 24.77 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x