Published : 04 Apr 2019 09:40 AM
Last Updated : 04 Apr 2019 09:40 AM

360: கேசிஆரைக் கேலிசெய்த மோடி

சிவராஜ் சிங் சவுகான் அரசியலுக்கு முற்றுப்புள்ளியா?

மத்திய பிரதேச முதலமைச்சராக 13 ஆண்டுகள் பதவி வகித்த சிவராஜ் சிங் சவுகானை பாஜக மேலிடம் கழற்றிவிடப் பார்க்கிறது என்கின்றன கட்சி வட்டாரங்கள். விதிஷா மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை வெற்றிபெற்று, பிறகு முதலமைச்சரானவர் சவுகான். சிறந்த நிர்வாகி என்ற பெயரெடுத்தவர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி வாய்ப்பை இழந்ததற்குப் பிறகு அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகக் கட்சி மேலிடம் நியமிக்கவில்லை. இந்நிலையில், போபாலில் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங்கை போபால் வேட்பாளாராகக் களமிறக்கிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத். திக்விஜய் சிங்குக்கு எதிராக சவுகானை இறக்கினால் என்ன என்று கட்சி மேலிடம் கருதுகிறதாம். வென்றால் ஒரு தொகுதி கூடுதல், இல்லையென்றால் சவுகானின் அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

கேசிஆரைக் கேலிசெய்த மோடி

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவுக்கு ஜோதிடம், வாஸ்து ஆகியவற்றில் தீவிர  நம்பிக்கை. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தனது அரசை முன்கூட்டியே கலைத்து, சட்டமன்றத் தேர்தலை 2018 டிசம்பரில் நடத்தினார். அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றார். அடுத்து பதவியேற்புக்கான நாளையும், எத்தனை பேருடன் பதவியேற்பது என்பதையும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே முடிவுசெய்தார். இருந்தும், அமைச்சரவை இன்னமும் முழுமையாகவில்லை. மஹபூப்நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இதைச் சுட்டிக்காட்டி, “ஜோதிடர் சொன்னால்தான் அடுத்தக் கட்ட அமைச்சரவை விரிவாக்கமா?” என்று கேலிசெய்திருக்கிறார் பிரதமர் மோடி. பாஜகவினரும் இத்தகைய நம்பிக்கைகளில் பின்தங்கியவர்கள் அல்லர். டெல்லியில் கட்சித் தலைமையகத்தில் தலைவர் அமித் ஷா, வாஸ்து நிபுணர்களின் யோசனைப்படிதான் தரைத்தளத்திலேயே தனது அலுவலகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அட்டவணை அறிவிப்பு என்று எல்லாமே ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் நடந்தன. இருந்தாலும், ‘கட்டம் எப்படி?’ என்று கேசிஆரைக் கலாய்க்கிறார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x