Published : 13 Mar 2019 09:46 AM
Last Updated : 13 Mar 2019 09:46 AM

எழுவர் விடுதலை: தேர்தல் அரசியலாக்க வேண்டாம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற மனு கடந்த ஆறுமாதங்களாகத் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருந்துவரும் நிலையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது. எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகும்கூட இன்றுவரை அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், கருணை அடிப்படையில் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையை, சில அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலாக்கிவருவது மேலும் வருத்தம் தருகிறது.

பத்து அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறோம் என்று அறிவித்தது பாமக. பிரதமரும் தமிழக முதல்வரும் பங்கேற்ற தேர்தல் பிரச்சார மேடையிலேயே எழுவர் விடுதலை குறித்த தங்களது கோரிக்கையையும் முன்வைத்துப் பேசினார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ். தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் எழுவர் விடுதலையை வலியுறுத்திவருகின்றன. சொல்லப்போனால், காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் திமுக, விசிக கட்சிகள் அதற்காகத் தீவிரக் குரல் கொடுத்துவருகின்றன.

அதிமுக அரசு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. அதிமுக தலைமையிலான தமிழக அரசும், எதிர்க்கட்சியான திமுகவும் ஒத்துநிற்கும் கருத்துகளில் எழுவர் விடுதலையும் ஒன்று. எனினும், ஆளுநர் தனது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கருணை மனுவின் மீது முடிவெடுக்காததன் காரணமாகவே அது தமிழக அரசியல் களத்தின் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகத் தொடர்கிறது.

ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக்கொண்ட அரசியல் கட்சிகள், இன்றைக்குத் தங்களுக்கிடையே தேர்தல் கூட்டணி அமைந்திருப்பதை நியாயப்படுத்த எழுவர் விடுதலை குறித்த பிரச்சினையை ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றன. இந்தப் பிரச்சினையை தேர்தல் அரசியலுக்குள் கொண்டுவருவதும் அதை முன்வைத்துத் தேர்தலைச் சந்திப்பதும் எழுவர் விடுதலைக்கு ஆதரவாக எழும் குரல்களை வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் படுமோசமான அரசியல் உத்தி. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் இந்த விஷயத்தில் தேர்தல் அரசியல் உள்நுழையக் கூடாது.

கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானம், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் என்று எல்லா தரப்பிலிருந்தும் கோரப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் எதன்பொருட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தள்ளிப்போட வேண்டும்? அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர் முடிவெடுப்பதற்கான கால அளவு எதுவும் வரையறுக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பொறுப்பிலிருப்பவர்களே அச்சட்டத்தின் விடுபடல்களைச் சரிசெய்து முன்னுதாரணங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழக ஆளுநர் எழுவர் விடுதலை கோரிக்கையை கருணையோடு அணுக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x