Published : 11 Mar 2019 11:08 AM
Last Updated : 11 Mar 2019 11:08 AM

360: வட கிழக்கில் வலைவிரிக்கும் பாஜக

மக்களவைத் தேர்தலையொட்டி, வட கிழக்கு மாநில மக்களைக் கவர புதுப் புதுத் திட்டங்களுடன் களமிறங்குகிறது பாஜக. அசாமையும் அருணாசலப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில், 17.47 கி.மீ. தொலைவில் தோய்முக் – ஹார்முதி சாலை, அசாமையும் மேகாலயத்தையும் இணைக்கும் துரா - மங்காசார் சாலை என்று இரண்டு சாலைகளைத் திறந்துவைத்திருக்கிறார் வட கிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

சிக்கிமின் பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைக்கவிருக்கிறது பாஜக. அசாமின் தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மினி டிரக் போன்ற வாகனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் அம்மாநில பாஜக அரசு தொடங்கிவைத்திருக்கிறது. எனினும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் காட்டிலும், பாஜகவுக்கு நெருக்கமான இளைஞர்களுக்கே வாகனங்கள் வழங்கப்படுவதாக அசாம் தேயிலை பழங்குடியின மாணவர்கள் சங்கம் குற்றம்சாட்டியிருக்கிறது!

chandrababujpgright

ஆந்திரப் பெருமையைப் பகடைக்காயாக்கும் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசத்துக்கு வாக்களித்தால்தான் ஆந்திரத்தின் பெருமையைக் காக்க முடியும் என்று மக்களிடம் பேசிவருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட முடியாமல் தோற்றுவிட்டார்.

அவருக்குப் பின்னணியில் இருப்பது தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்” என்று சொல்லும் சந்திரபாபு நாயுடு, “ஆந்திரக் கடலோர மக்களையும் ராயலசீமா மக்களையும் கேலி பேசியவர் சந்திரசேகர ராவ். தெலுங்கு அன்னையைக்கூட அவமதித்தவர்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார். “ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வாக்களிப்பது, தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் பாஜகவுக்கும் வாக்களிப்பதற்குச் சமம். அதுமட்டும் நடந்தால், ஆந்திரத்தின் நலன்கள் தெலங்கானாவுக்கு அடகு வைக்கப்பட்டுவிடும்” என்றும் எச்சரித்திருக்கிறார்!

மத்திய பிரதேசத்தில் மல்லுக்கட்டும் பாஜக - காங்கிரஸ்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய பிரச்சார உத்தியைக் கையாள்கிறது பாஜக. மாநில அரசு மக்களுக்கு எதையும் செய்வதில்லை என்பதே அது. குறிப்பாக, கமல் நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்று எல்லா மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறது பாஜக. 

“நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுவிட்டது” என்று மபி பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய பாஜக அரசு இழுத்தடிப்பதாக, பதிலடிப் போராட்டத்தை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது.

samajwadijpg

சமாஜ்வாதியை அச்சுறுத்தும் காங்கிரஸ் வேட்பாளர்

மக்களவைத் தேர்தல்களில் ஐந்து முறை வெற்றிபெற்ற சலீம் இக்பால் ஷெர்வானியை, உத்தர பிரதேசத்தின் பதாயூன் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அகிலேஷ் யாதவின் உறவினருமான தர்மேந்திர யாதவை நிறுத்தத் திட்டமிடும் சமாஜ்வாதி கட்சிக்கு இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பதாயூன் தொகுதியில் யாதவர்கள், முஸ்லிம்களுக்குத் தலா 3 லட்சம் வாக்குகள் உள்ளன. இந்நிலையில், ஷெர்வானி காங்கிரஸ் வேட்பாளரானால், முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்துவிடும் என்றும், அது பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்றும் சமாஜ்வாதி கட்சி அச்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x