Published : 18 Feb 2019 09:08 AM
Last Updated : 18 Feb 2019 09:08 AM

360: திறந்திருக்கும் அறிவுக் கதவு; அசத்தும் தொடக்கப் பள்ளி!

திறந்திருக்கும் அறிவுக் கதவு: அசத்தும் தொடக்கப் பள்ளி!

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப் பள்ளியில் அந்த அரிய காட்சி கண்ணில் படுகிறது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி நூலகத்திலிருந்து நூல் இரவல் பெற்று வீட்டுக்கு எடுத்துச் செல்வதைப் பார்ப்பவர்கள் பரவசமடைந்து நிற்கிறார்கள். ஆம், 2,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டிருக்கிறது அப்பள்ளி. ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகும் வாசிப்பை வலியுறுத்தும் கட்டுரைகளும் சனிக்கிழமைதோறும் வெளியாகும் ‘நூல்வெளி’ பக்கங்களும் கொடுத்த உந்துதலில் பள்ளியில் நூலகம் அமைத்திருப்பதாகச் சொல்கிறார் பள்ளி நிர்வாகி ஏ.ஜி.செய்யது முகையதீன்.   “இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்கள் ஆசிரியர்கள் எல்லாம் இணைந்து இந்த  நூலகத்தை உருவாக்கினோம். ரூ.1.5 லட்சம் செலவானது. இப்போது பெற்றோர்கள், நண்பர்கள் என்று பலரும் நூலகத்துக்கு அன்பளிப்பாக புத்தகங்களைக் கொடுத்துவருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களும்கூட பள்ளி  நூலகத்துக்கு அன்பளிப்பாக புத்தகம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்” என்கிறார் செய்யது முகையதீன். தொடக்கப் பள்ளியிலிருந்தே வாசிப்பின் மகத்துவம் மாணவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. பள்ளி நூலகத்தின் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் இது,  ‘நம் அறிவுக் கதவு திறந்தே இருக்கட்டும்’.

பாதசாரிகள், மிதிவண்டிக்கு பாதுகாப்பான சாலை: குருகிராம் திட்டம்!

டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு கி.மீ. தூரத்துக்கு ஒரு மாதிரி சாலையை அமைக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது. இத்திட்டம் பற்றிய விவரங்களை இணையத்தில் வெளியிட்டு, அது குறித்த மக்களின் கருத்துகளைக் கேட்டுவருகிறது. ஹூடா சிட்டியிலிருந்து ஐஎப்எப்சிஓ சௌக் வரையிலான இந்தச் சாலையில்,  வழிநெடுகிலும் உள்ள மெட்ரோ ரயில் தூண்களை அழகுபடுத்துவது, ஒவ்வொரு 500 மீட்டருக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் அமைப்பது என்று பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது, சாலையில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கான 2.5 மீட்டர் அகலம் கொண்ட தனிப்பாதை. பாதசாரிகள் நடப்பதற்கு 2 மீட்டர் அகலம்கொண்ட பாதையும் தனியாக உண்டு. சாலை என்பது வாகனங்கள் செல்வதற்கு மட்டுமல்ல, மிதிவண்டிக்கும் பாதசாரிகளுக்கும் அதில் இடமிருக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் குருகிராம் மாநகராட்சிக்கு வாழ்த்துகள்!

ஆர்க்டிக் கடல் ஆய்வில் கேரளத்து விஞ்ஞானி!

பருவநிலை மாறுதலால் ஆர்க்டிக் கடலில் ஏற்படும் பனியின் தடிமன் மாறுதல் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்துவரும் இந்திய விஞ்ஞானி விஷ்ணு நந்தன்  வட துருவத்தில் ஓராண்டு தங்கி ஆய்வைத் தொடர்கிறார். நார்வே நாட்டிலிருந்து வட துருவத்துக்கு, வரும் செப்டம்பர் மாதம் செல்லும் ‘போலார்ஸ்டெர்ன்’ கப்பலில் விஷ்ணு நந்தனும் இடம்பெறுகிறார். துருவப் பகுதிகளுக்கு 16 முறை சென்றுவந்த அனுபவம் கொண்டவர் இவர். 17 நாடுகளிலிருந்து 600 ஆய்வாளர்கள் செல்கின்றனர். ஆர்க்டிக் கடல் எப்படி உலக பருவநிலையின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இவர்களின் ஆய்வுகள் உதவும். பனியாக உறையும் கடல் பற்றி மட்டும் ஆராயவுள்ள ஏழு உறுப்பினர் குழுவில் விஷ்ணு இடம் பெற்றுள்ளார். இதற்கும் முன்னால் 1970-களில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஆர்க்டிக் கடல் பரப்பில் ஆய்வுகள் நடந்துள்ளன. அந்தத் தரவுகள்தான் இதுவரை பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், அடுத்த 50 முதல் 100 ஆண்டுகள் வரை பயன்படப்போகும் தரவுகளை இக்குழுவினர் திரட்டவிருக்கிறார்கள்!

எண்டோசல்ஃபான்: தாமதிக்கப்படும் நீதி!

கேரளத்தில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் புத்திகே தாலுகாவைச் சேர்ந்த மக்கள் எண்டோசல்ஃபான் பயன்பாட்டின் கொடூரத்தை இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் மனநலக் குறைபாடுகள், வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகிறார்கள். மேலும், சில பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு அதிகம். முந்திரி விளைச்சலுக்காக அதிக அளவில் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட்டதன் கொடூர விளைவு இது. 2011-ல் எண்டோசல்ஃபான் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைத்தபாடில்லை. காரணம், எண்டோசல்ஃபான் பாதிப்புக்குட்பட்டவை என்று அரசு அறிவித்த 11 தாலுகாக்களில் புத்திகே உள்ளிட்ட சில பகுதிகள் இல்லை. ஆனால், எண்டோசல்ஃபான் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டதால், காற்று, நீர் ஆகியவற்றின் மூலம் பிற பகுதிகளுக்கும் அதன் பாதிப்பு பரவியிருக்கிறது என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 6,212 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு சொன்னாலும், எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம், 2017-ல் உத்தரவிட்டும், பாதிக்கப்பட்ட பலருக்கு இழப்பீட்டுத் தொகை முழுமையாகச் சென்றடையவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x