Published : 21 Dec 2018 09:18 AM
Last Updated : 21 Dec 2018 09:18 AM

நியாயப் போராளி சச்சார்!

இந்தியாவில் சமூகத்தில் மிக பிற்படுத்தப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்துவருகிறது. இதை, ஆணித்தரமாக உலகுக்கு எடுத்துச் சொன்னவர், மனித உரிமைப் போராளியான நீதியரசர் ராஜிந்தர் சச்சார். 2006 நவம்பர் 30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை, இந்தியாவில் பட்டியலின மக்கள், பழங்குடியின மக்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருப்பதைப் பதிவுசெய்தது.

கடந்த 2004-ல், முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை ஆய்வுசெய்து, அவர்களின் சமூக நிலையைக் கண்டறிய முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, நீதியரசர் சச்சார் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இரண்டு ஆண்டுகாலத்துக்குள் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், முஸ்லிம்களின் சமூக அந்தஸ்து தொடர்பாக வெளியில் பரவிக்கிடக்கும் செய்திகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு முரணான தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. எல்லாமே, ஆதாரங்கள் அடிப்படையில் சொல்லப்பட்டிருந்தன.

முஸ்லிம்களின் உண்மை நிலை

இந்திய முஸ்லிம்களில் 35% பேர் 5-ம் வகுப்புகூடப் படிக்காதவர்கள் என்பதும், 35% பேர் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகூட இல்லாமல் தவிப்பவர்கள் என்ற உண்மைகளெல்லாம், கமிட்டி அறிக்கையில் தெள்ளத்தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. நகரங்களில் நடைபாதைகளில் குடை ரிப்பேர் செய்வது, பஞ்சர் ஒட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் முஸ்லிம்கள் நிறைய எண்ணிக்கையில் இருப்பதையும் அந்த அறிக்கை பதிவுசெய்தது. ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுவோர், கூலி வேலை செய்வோரில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்ன அந்த கமிட்டி அறிக்கை, வட மாநிலங்களில் செருப்பு தைப்போர், கழிப்பறை சுத்தம் செய்வோரில் பலரும் முஸ்லிம்கள் எனும் தகவலை வெளிக்கொணர்ந்தது. மேலும் குடிமைப் பணிகளாகட்டும், காவல் துறை போன்ற துறைகளிலாகட்டும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

சம வாய்ப்பு ஆணையம்

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, அடித்தளத்தில் இருக்கும் முஸ்லிம்களின் நிலையை வெளி உலகுக்குத் தெரியவைத்ததுடன் சச்சார் நின்றுவிடவில்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளைக் களைய அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளையும் முன்வைத்தார். மத, இன அடிப்படையில், மக்களிடம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதற்காக, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்ற சம வாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என சர்ச்சார் குழு பரிந்துரைத்திருந்தது.

பிரிட்டனில் சீக்கியர் ஒருவருக்கு அரண்மனையின் தலைமைக் காவலர் பதவி மறுக்கப்பட்டது. இனப்பாகுபாட்டின் காரணமாக அவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டது. உடனே, பாதிக்கப்பட்ட சீக்கியர், சம வாய்ப்பு ஆணையத்தை அணுகி, முறையிட்டார். தன் தரப்பு நியாயங்களைச் சொல்லி, தனக்கு நீதி வேண்டினார். முழுமையாக, அதை விசாரித்த ஆணையம், குறிப்பிட்ட அந்தப் பதவியை அவருக்கு வழங்க உத்தரவிட்டது.

இப்படி ஒரு ஆணையம் இந்தியாவிலும் அமைக்கப்பட்டால், வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் முஸ்லிம் போன்ற சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, ஆணையத்தில் முறையிட்டுப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியும் என்றும் அரசு மற்றும் தனியார் துறைகளில் மறுக்கப்படும் எந்த வாய்ப்பையும் உரிமை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் கோரிப் பெற முடியும் என்றும் சச்சார் குழு கூறியிருந்தது. அந்த ஆணையம் அமைவதில் இன்னமும் தாமதம் நிலவுவது வருத்தத்துக்குரிய விஷயம்.

நியாயத்தின் பக்கம் நின்றவர்

நீதியரசர் சச்சார் மனித உரிமையைக் காக்கும்விதமாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். மனித உரிமைப் போராளியாகவே கடைசி வரை வாழ்ந்தார். அவரது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். ஆனால், அந்தப் பாதிப்பு, அவரது செயல்பாடுகளில் ஒருபோதும் இருந்ததில்லை.

1984-ல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து விசாரித்தார் சச்சார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை, அவர்களது வாக்குமூலம் மூலமாக உணர்ந்த சச்சார், கலவரத்தைத் தூண்டிய, அதில் நேரடியாக ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மத்தியில் அசுர பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ‘நியாயத்தின் பக்கம்தான் என்றும் நிற்பேன்’ என்பதைக் காட்டிச் செயல்பட்ட சச்சாரின் துணிச்சலை, இந்தியாவே அப்போது வியந்து பாராட்டியது.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று செயலாற்றுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.

கடந்த 2002-ல், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பங்கரவாத தடுப்புச் சட்டத்தால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வு பாழாவதை உணர்ந்த சச்சார்,  அவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜரானார். தன்னுடைய வாதத் திறமையால், பெரும் செலவின்றி அப்பாவி இளைஞர்களைக் காப்பாற்றினார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின், இளைஞர்கள் மீது போடப்பட்ட பொடா சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இலங்கையில் இனப் படுகொலைகள் நடந்து, அங்கு அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டதை, இந்திய அரசு கண்டுகொள்ளாத நிலையிலும், நடந்த படுகொலைகள் குறித்து, தீர்க்கமாகச் சிந்தித்து, படுகொலைக்கு எதிராகத் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார். அது தொடர்பான விவாதங்களுக்கு வித்திட்டார்.

இப்படி மனித உரிமைக்கு ஆதரவாகவே செயல்பட்ட சச்சார், அது தொடர்பான பல்வேறு பதிவுகளை ஆணித்தரமாகப் பல்வேறு தளங்களிலும் பதிவு செய்திருக்கிறார். மனித உரிமைப் போராளிகளுக்கு என்றைக்கும் முன்னுதாரணமாக இருக்கும் சச்சார், போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமை ஆர்வலர்கள், தாங்களே அரசியல் களத்தில் குதிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். அதாவது, மனித உரிமைப் போராளிகளுக்கு, என்றைக்குமே அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்பதுதான், அவரது எண்ணமாக இருந்துள்ளது.

கடைசி வரை களைப்பேதும் இல்லாமல், நெஞ்சுரத்துடன் மனித உரிமைக்காகவே பாடுபட்ட அந்த மாமனிதர், சமூகப் போராளி நீதியரசர் ராஜிந்த சச்சார் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும், இன்றைய-வருங்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, பாடமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

புதுமடம் ஜாபர்அலி

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

டிசம்பர் 22 – சச்சார் பிறந்தநாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x