Published : 20 Dec 2018 09:09 AM
Last Updated : 20 Dec 2018 09:09 AM

இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு!

சையது முனிர் கஸ்ருஅசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) பெயர்களைச் சேர்க்கவும், ஆட்சேபிக்கவும் உரிய மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2018 டிசம்பர் 31 என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதாவது, டிசம்பர் 15-லிருந்து மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு தரப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் பதிவேட்டால் ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார, மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பக்கத்து நாடுகளுடன் குறிப்பாக வங்கதேசத்துடன் இந்தியாவின் உறவு எப்படி மாறும் என்றெல்லாம் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. “இந்திய நிலப்பகுதிக்குள் உரிய சட்ட அனுமதியின்றித் தங்கியிருப்பவர்கள் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்” என்று இந்தியத் தரைப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் கருத்து தெரிவித்திருப்பது வங்கதேசத்தில் கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவுக்குள்தான் வங்கதேசிகள் சட்டவிரோதமாகக் குடியேறிவிட்டார்கள் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர். உண்மையில் இந்தியர்களும் வங்கதேசத்துக்குள் சட்டபூர்வமாகவோ அல்லாமலோ தங்கியிருந்து வேலை செய்து சம்பாதிக்கின்றனர். 2009-ல் வங்கதேச அரசு எடுத்த கணக்கின்படி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வங்கதேசத்தில் உள்ளனர். ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவுக்கு மாதந்தோறும் அதிகப் பணம் வங்கிகள் மூலம் தரும் நாடு வங்கதேசமாக இருக்கிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என்று பலவற்றிலும் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களும் பொறியாளர்களும் வங்கதேசத்தில் வேலை செய்து அதிக ஊதியம் ஈட்டி, அதில் பெரும் பகுதியைத் தாய்நாட்டுக்கு அனுப்புகின்றனர். வங்கதேசிகளோ கட்டுமானத் தொழில், அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றில் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்து தங்களுடைய அவசியத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்துகொள்கின்றனர். தாய்நாட்டுக்கு எதுவும் அனுப்ப முடிவதில்லை. இரு பிரிவினருக்கும் இடையே இதுதான் வேறுபாடு.

விஷமக் கருத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு என்பது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் நிர்வாக நடவடிக்கை, அரசியல் சூதாட்டம் அல்ல என்று இந்தியாவின் ஆளும் தரப்பு கூறுகிறது. ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வங்கதேசிகளுக்கு எதிராக விஷம் கக்கும் கருத்துகளைப் பொதுவெளியில் விதைத்துவருகின்றனர். இது இரு நாடுகளுக்கு  இடையே நிலவும் நல்ல உறவைக்கூட நாசப்படுத்திவிடும்.

அசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, வங்கதேச அரசுக்கு உறுதி கூறியிருக்கிறார். தேசிய மக்கள் பதிவேடு என்பது இந்தியாவின் உள் விவகாரம் என்று கூறி, வங்கதேசம் இதுவரை அதிகாரபூர்வமாக மவுனம் கடைப்பிடிக்கிறது. மியான்மரிலிருந்து அகதிகளாக வந்துவிட்ட 10 லட்சம் ரோஹிங்கியாக்களைப் பராமரிக்கவே நிதி வசதியும் வேறு கட்டமைப்புகளும் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவும் ‘அந்நியர்கள்’ என்று முத்திரை குத்தி வங்காளி முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பினால் வங்கதேசத்தால் தாங்க முடியாது.

வெளியுறவில் தோல்விகள்

பக்கத்து நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடுதான் பிரதமர் மோடி தனது நிர்வாகத்தைத் தொடங்கினார். அவருடைய ஆட்சிக்காலத்தின் நடுவில் அவர் விரும்பியதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. இந்தியாவின் பிரிக்க முடியாத நண்பன் என்று கருதப்பட்ட நேபாளம் இப்போது சீனத்தின் நெருங்கிய நண்பனாகிவிட்டது. 2015-ல் நேபாளத்துக்குச் சென்ற அத்தியாவசியப் பண்டங்களை மாதேசிகள் தடுத்ததால், நேபாளத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்திய அரசு அதை வேடிக்கை பார்த்ததால் நிலைமை முற்றியது. சீனத்தின் துறைமுகங்கள் டியான்ஜின், ஷென்ஷென், லியான்யுங்காங், ஜான்ஜியாங் ஆகியவையும், நிலத் துறைமுகங்கள் லான்ஷு, லாசா, ஜிகட்சி ஆகியவையும் இப்போது நேபாளத்துக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை வழங்குகின்றன. இதனால், வர்த்தகத்தில் நேபாளத்துடன் இந்தியாவுக்கிருந்த ஏகபோகம் முடிவுக்கு வந்துவிட்டது.

பூடானுக்கு சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்காகத் தந்த மானியத்தை இந்திய அரசு 2013-ல் விலக்கிக்கொண்டது. அது இருதரப்பு உறவில் முதல் நெருடலை ஏற்படுத்தியது. டோக்லாமில் சீனப் படை குவிப்பால் அந்நாட்டின் மீது பூடானுக்கு ஐயம் அதிகரித்தது. அதை எதிர்கொள்ள இந்தியா எடுத்த நடவடிக்கைகள் மீது பூடானுக்குத் திருப்தியில்லை. தன்னுடைய நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று அது உணர்த்தியிருக்கிறது. வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் இடையிலான மோட்டார் வாகன ஒப்பந்தத்திலிருந்து பூடான் விலகிவிட்டது.

இந்தியா-சீனா இடையிலான அதிகாரப் போட்டிதான் இலங்கை, மாலத்தீவுகளின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவின் கொல்லைப்புறத்திலேயே சீனா தன்னுடைய செல்வாக்கை வளர்த்துவருகிறது. இந்நிலையிலும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தோழனாக இருப்பது வங்கதேசம் மட்டுமே. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுக்கு வங்கதேசம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. “வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஜிபி) ஒத்துழைப்பு காரணமாகவே ஊடுருவல்காரர்களை ஒடுக்க முடிந்தது” என்று இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைவர் கே.கே.சர்மா பாராட்டியிருக்கிறார். “இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த போராளிகளின் மறைவிடங்களும் பயிற்சிக் களங்களும் வங்கதேசப் படைகளின் உதவியுடன் அழிக்கப்பட்டுவிட்டன” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வணிகக் கூட்டாளி வங்கதேசம்

வங்கதேசத்துடன் இந்தியாவின் வருடாந்திர விற்றுமுதல் மதிப்பு ரூ.63,000 கோடி. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய வணிகக் கூட்டாளி வங்கதேசம்தான். அத்துடன் இல்லாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கும் பிரதான நிலப் பகுதிகளுக்கும் நேரடி நிலவழித் தொடர்புக்குத் தனது சாலைகளையும் இருப்புப் பாதைகளையும் பயன்படுத்த அனுமதிக்கிறது வங்கதேசம். அத்துடன் சிட்டகாங், மோங்லா துறைமுகங்கள் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்குச் சரக்குகளை இந்தியாவால் அனுப்ப முடிகிறது. தீஸ்தா நதிநீர்ப் பகிர்வில்தான் இன்னமும் சுமுக முடிவு ஏற்படாமல் இருக்கிறது. வங்கதேசம் செய்யும் ஏற்றுமதிகள் மீது காப்பு வரி போடுவதில்லை. ஆனால், வேறுவகைத் தடைகளை இந்திய அரசு விதிக்கிறது. எல்லையில் வங்கதேசிகளை, இந்திய எல்லைப் படை அடிக்கடி சுட்டுக் கொல்கிறது. இவையெல்லாம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகள்.

தேசிய மக்கள் பதிவேடுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நிலவும் சமநிலையைக் குலைக்கக் கூடிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்த மாத இறுதியில் வங்கதேசத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகள் நிச்சயம் இவற்றையெல்லாம் பேசும். அந்நியர்கள் என்று அடையாளம் கண்டவர்களை வங்கதேசத்துக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவது அரசியல்ரீதியாகப் புத்திசாலித்தனமான செயல் அல்ல என்பது மட்டுமல்ல. இது வங்கதேசத்தில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவகாரம்!

- சையது முனிர் கஸ்ரு, வங்கதேசத்தைச் சேர்ந்த கொள்கை வகுக்கும் நிறுவனத்தின் தலைவர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,  தமிழில்: சாரி. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x