Last Updated : 26 Dec, 2018 10:29 AM

 

Published : 26 Dec 2018 10:29 AM
Last Updated : 26 Dec 2018 10:29 AM

2 மினிட்ஸ் ஒன்லி 23: மனதில் பதியும் அழகு

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இப்போது வந்த கிறிஸ்துமஸ் விடுமுறை மாதிரி எந்த ஒரு பண்டிகையும் அது வாரத்தின் நடுவுல வர்ற விடுமுறையா இருந்தால் அந்த வாரமே குதூகலம் தான். நேற்று பலரும் குடும்பத்தினர், நண்பர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியிருப்பீங்கன்னு நம்புகிறேன்.

நானும் என்னோட நண்பர் ஒருத்தர் அவங்க வீட்ல அலங்கரித்த கிறிஸ்துமஸ் மரம், அவங்க வீட்ல செய்த பிளம் கேக், தின்பண்டங்களை எல்லாம் ருசி பார்க்கலாம்னு போயிருந்தேன். அங்கே நடந்த சந்தோஷமான கொண் டாட்டத்துல ஒரு ஆச்சர்யத்தையும் பார்க்க நேர்ந்தது. அந்த விஷயத்தைத்தான் இங்கே பகிர்ந்துக்கப் போறேன்.

நாம் குழந்தையாக இருந் தப்போ கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கினா நமக்கு அறிமுகப்படுத்துற முக்கியமான ஒன்று கிறிஸ்துமஸ் தாத்தா. குறிப்பா நமக்கு ஆறு, ஏழு வயது இருக்கும். வானத்தில் இருந்து கிறிஸ்துமஸ் தாத்தா குதித்து வந்து, நமக்கெல்லாம் கிஃப்ட் கொடுப்பார், ஸ்வீட் கொடுக்கிறார்னு நினைச்சிக்கிட்டிருப்போம். நம்ம அப்பா, அம்மா, ஆசிரியர் அல்லது நண்பர்களோ.. யாரோ ஒருவர் சொன்னது இப்படித்தான் நம்ம மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.

நான் என்னோட சின்ன வயசுல… கிறிஸ்துமஸ் தாத்தா பயங்கர பனிப்பொழிவுக்கு இடையில் ஒரு வண்டியில் வருகிறார். கண்டிப்பாக அவர் இந்தியாவில் இல்ல. வெளிநாட்டில்தான் இருக்கிறார். அங்கேதான் இந்த மாதிரி பனிப் பொழிவு, பனி மழை எல்லாம் இருக்கும்னு நினைத்துக்கொள்வேன்.

இந்த மாதிரியான எண்ணங்கள் எப்போ நம்ம மைண்ட்ல இருந்து ப்ரேக் ஆகும்னு நமக்குத் தெரியாது. அதை நாம நினைவுல வச்சிக்கவும் முடியாது. ஆனா, வானத்துல இருந்து வர்றது உண்மை இல்லைனு நம்புற ஸ்டேஜ்ல நாம பெரியவங்களா மாறியிருக்கோம்னு ஓர் அளவுகோலா எடுத்துக்கலாம்.

ஏன், இதை திடீர்னு சொல்றேன்னா, நேற்று நான் என்னோட நண்பர் வீட்டுக்கு போயிருந் தேன்னு சொன்னேன்ல… அங்கே என்னை ரொம்பவும் ஈர்த்த ஒரு சம்பவம் அப்படி!

என் நண்பருக்கு என்னை மாதிரியே ரெண்டு பசங்க. அவங்க ரெண்டு பேருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா ட்ரெஸ் போட்டுவிட்டுட்டு, என் நண்பரும் அணிந்து கொண்டிருந்தான். எல்லோருமா சேர்ந்து வீட்ல ஃபோட்டோ எடுத்துக்கிட்டு கேம் விளையாடப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா, நான் போனதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அவன் என்கிட்ட சொல்ல ஆரம்பித்த கதையே வேறு.

என் நண்பர் மகன், “நிஜமாவே கிறிஸ்துமஸ் தாத்தா நேர்ல வந்து கிஃப்ட் கொடுப்பாரா, அப்பா?” ன்னு ப்ரெண்ட்கிட்டே கேட்டிருக்கான். அதுக்கு அவனோ ஒரு கதை சொல்லியிருக்கான். அது என்னன்னா, ‘‘கிறிஸ்துமஸ் அன்னைக்கு கடவுள் ஒரு தாத்தா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு எல்லோருக்கும் கிஃப்ட் கொடுத்துக்கிட்டி ருந்தார். அந்த நேரத்துல ஒரு பையன் மட்டும் சோகமா இருந்திருக்கான். அவன்கிட்ட கடவுள், “என்னாச்சுப்பா?” ன்னு கேட் டப்போ, “எங்க குடும்பத்துல வசதி இல்ல? எங்க வீட்ல கிறிஸ்துமஸ் மரம் இல்ல? கேக் வாங்கல? யாரும் எங்களுக்கு கிஃப்ட் கொடுக் கல?”ன்னு சொல்லியிருக்கான். அப்போ, கிறிஸ்துமஸ் தாத்தா வேஷத்துல வந்த அந்தக் கடவுள், சிறுவன் காதுல ஏதோ ஒண்ணு சொல்லிவிட்டு, ஒரு மேஜிக் செய்து அவன் விரும்பின கேக், கிஃப்ட்னு எல்லாத்தையும் வரவழைத்துவிட்டார்”ன்னு கதையை சொல்லி முடிச்சிருக்கான்.

நண்பர் மகன் உடனே அவன் கிட்ட, “கடவுள் அந்தப் பையன் காதுல என்ன சொன்னார்?”னு கேட்டிருக்கான். “இப்போ நான் உனக்கு மேஜிக் செய்து கிஃப்ட், கேக் எல்லாம் வர வைத்தது மாதிரி நீ பெரியவனானதும் யாரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியில்லாமல் இருக்காங்களோ அவங்களுக்கு நீயும் நேர்ல போய் சாப்பாடு, கேக் எல்லாம் வாங்கிக்கொடுக்கணும்!”ன்னு சொன்னதாக சொல்லியிருக்கான்.

இந்தக் கதையை என்னோட நண்பர் அவன் பையன்கிட்ட சொல்லி பத்துல இருந்து பதினைந்து நாள் இருக்குமாம். அதை அப்படியே நினைவுல வைத்திருந்த அவனது மூத்த பையன் கிறிஸ்துமஸ் அன்னைக்கு கடவுள் சொன்ன மாதிரி நாமளும் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு வசதி இல்லாதவங்களுக்கு கேக் கொடுக்க போகலாம்னு கிளம்பச் சொல்லியிருக்கான். அதுக்காக புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்துலதான் நான் அவங்க வீட்டுக்குப் போனேன்.

தன் மகனின் நம்பிக்கையை பிரேக் செய்துவிடக்கூடாது என் பதற்காக 3 செட் கிறிஸ்துமஸ் டிரஸ் எடுத்துவந்து, அவன் சொன்ன மாதிரியே வசதி இல்லாத மற்றவர்களுக்கு உதவுவதற்காக கிளம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது நெகிழ்ச்சியா இருந்தது.

‘மாரல் ஸ்டோரி’ன்னு ஒரு கதையை சொல்லிவிட்டு, அதை ‘விளையாட்டுக்கு சொன்னேன்!’னு சொல்லாமல் குழந்தைக்கு மதிப்பளித்து அவங்களோட நம்பிக்கையை உடைக்காமல் அதை செய்ய நினைத்த விஷயத்தை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? அதனால்தான் இந்த விஷயத்தை உங்கக்கிட்டேயும் பகிரத் தோணுச்சு.

இதுல ரெண்டு விஷயங் கள்தான். குழந்தைக்கு ஒரு விஷ யத்தை எளிமையாக, அவர்கள் புரிந்துகொள்ளும் பாஷையில் சொன்னால் அது அழகாக அவர்கள் மனதில் பதியும்.

ரெண்டாவது, குழந்தைகள் தானே என அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து, நாம சொன்ன ஒரு விஷயத்தை அவர்கள் செய்ய நினைக்கும்போது அதை பொய்யாக்காமல் இருக்கும் நல்ல அப்பாவின் குணம்.

மறுபடியும் உங்க எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தீமைகள் நீங்கி, நெகடிவ் விஷயங்களை தூக்கிப் போட்டுவிட்டு, நல்லன எல்லாவற்றையும் கவனிப்போம். நல்லதைத் தேடிப் படிப்போம். நல்லவர்களாக இருப்போம். மீண்டும் அடுத்த ஆண்டில் சந்திப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x